உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மகனுக்கு பதவி கிடைக்காமல் அமைச்சர், அப்செட்!

மகனுக்கு பதவி கிடைக்காமல் அமைச்சர், அப்செட்!

“ஆளுங்கட்சிக்காரா மேல கேஸ் போட மாட்டேங்கறா ஓய்...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.“விபரமா சொல்லும் வே...” எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.“துாத்துக்குடியின் கோவில்பட்டியில, தி.மு.க., புள்ளி ஒருத்தர், 'சிட் பண்ட்' நடத்திண்டு இருக்கார்... கட்டின பணத்தை, தவணை காலம் முடிஞ்சும் திருப்பி தராம தகராறு பண்ணிண்டு இருக்காராம் ஓய்...“பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு தர வேண்டிய 2 லட்சம் ரூபாயை, 11 மாசமாகியும் தராம இழுத்தடிக் கறாராம்... கோவில்பட்டி மேற்கு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தா, 'கேஸ் போட முடியாது'ங்கறா...“பாதிக்கப்பட்டவரை அழைச்சு போலீசே பஞ்சாயத்து பேசி, புகார் ரசீது மட்டும் கொடுத்திருக்கா... ஆளுங்கட்சிக்காரா மேல புகாரோட போனா, இதுதான் நிலைமைன்னு, எல்லார்ட்டேர்ந்தும் புலம்பல் அதிகமாகிண்டே இருக்கு ஓய்...” என்ற குப்பண்ணா, “அடடே, சண்முகராஜ் அண்ணாச்சி, இப்படி வந்து உட்காரும்...” என, நண்பருக்கு இடம் அளித்தார்.“சிபாரிசு இருந்தா, திருடனை கூட, 'ரிலீஸ்' பண்ணிடுவாங்க...” என,அடுத்த தகவலைத் தொடங்கினார் அந்தோணிசாமி.“எந்த ஊர்ல வே...” எனக் கேட்டார் அண்ணாச்சி.“திருப்பூரின் அவிநாசிக்குப் பக்கத்துல, உமையஞ்செட்டிபாளையத்துல, தோட்ட வீடு ஒண்ணு இருக்குதுங்க... இங்க ஆடு திருட வந்த ஒருத்தனை, ஊர் மக்கள் சமீபத்துல பிடிச்சு, போலீசுல ஒப்படைச்சாங்க... அந்த ஆடு திருடன், அவிநாசி பக்கத்துல இருக்குற பெருமாநல்லுாரை சேர்ந்தவனாம்...“ஆடு திருடி அதை ஹோட்டல்களுக்கு குறைந்த விலைக்கு விற்பது தான் தொழில்... 'அந்தாளு உள்ளே போயிட்டா, ஆடு யாரு சப்ளை செய்யுறது'ன்னு யோசிச்ச ஹோட்டல் முதலாளிகள், திருடனை விடச் சொல்லி, போலீசிடம் சிபாரிசு செய்தாங்களாங்க...“சில உள்ளூர், வி.ஐ.பி.,க்களும் அழுத்தம் கொடுத்ததால, ஆடு திருடனை அப்படியே அனுப்பிடுச்சாம் போலீசு...” என்றார் அந்தோணிசாமி.“வாரிசுக்கு மாவட்ட செயலர் பதவி கிடைக்காததால, மூத்த அமைச்சர் மன வருத்தத்துல இருக்காரு வே...” என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.“விளக்கமா சொல்லுங்க பா...” என்றார் அன்வர் பாய்.“வேலுார் மாவட்டத்துல, ஐந்து சட்டசபை தொகுதிகள் இருக்கு வே... ஒருங்கிணைந்த மாவட்ட செயலரா, எம்.எல்.ஏ., நந்தகுமார் இருக்காரு...“கட்சி அமைப்பு ரீதியா, சட்டசபை தொகுதிகளை பிரிச்சு, கூடுதலா ஒரு மாவட்டத்தை பிரிக்க வாய்ப்பு இருக்குதாம்... அப்படி புதுசா பிரிக்கிற மாவட்டத்துக்கு தன் மகனை மாவட்ட செயலராக்க ஆசைப்பட்ட மூத்த அமைச்சர், கட்சி தலைமையிடம், 'பிட்'டை போட்டாரு... ஆனா, கட்சி தலைமை கைவிரிச்சிட்டு... கடுப்பான மூத்த அமைச்சர், முகம் சிவந்துட்டாரு...“அதனால, மூத்த அமைச்சருக்கு நெருக்கமான முன்னாள் மத்திய அமைச்சரை வச்சு, தலைமை அவரை சமாதானப்படுத்தி வச்சிருக்கு வே...” என முடித்தார் அண்ணாச்சி.“நான் துரையை பார்க்கப் போறேன் பா...” என, அன்வர் பாய் எழ, சபை கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மார் 01, 2025 14:42

தி.மு.க., புள்ளிகள் சிட் பண்ட் மட்டுமல்ல எந்த பிசினஸ் நடத்தினாலும் மக்கள் பண விவகாரத்தில் உஷாரா இருக்கணும். .பணத்தை முதலில் கொடுத்துவிட்டால் முதலை வாயில் மாட்டிய கதை தான்.


Suresh sridharan
மார் 01, 2025 09:32

மட்டன் கடையில் என்ன செய்கிறார்களோ அதையே மக்கள் செய்தால் போதும் ஆடு திருடு நின்று


D.Ambujavalli
மார் 01, 2025 06:44

பிள்ளை எம். பியாக இருந்தால் மட்டும் போதுமா, மாவட்ட நிலையில் கோலோச்ச வேண்டாமா? இத்தனை காலம் கட்சிக்கு உழைத்தவருக்கு தக்க மரியாதை இல்லை என்றால் upset ஆகத்தானே செய்வார்


Anantharaman Srinivasan
மார் 01, 2025 14:35

அதுக்காக எல்லா பதவியையும் துரை குடும்பத்துக்கு தூக்கி கொடுத்துட முடியுமா..??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை