படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''போலி ரசீதுகளை போட்டு, கட்டணம் வசூலிக்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் சிப்காட் இருக்கு... இங்க ஷூ தயாரிப்பு, ஓலா பைக் தயாரிப்பு உட்பட பல தனியார் கம்பெனிகள் இருக்குது பா...''இந்த கம்பெனிகளுக்கு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகள்ல இருந்து உதிரிபாகங்களை ஏத்திட்டு தினமும் நிறைய லாரிகள் வரும்... அதே மாதிரி, நிறுவனங்கள்ல உற்பத்தியாகுற பொருட்களை ஏத்திட்டு போகவும், கனரக வாகனங்கள் நிறைய வந்துட்டு போகும் பா...''பொருட்களை ஏற்றவும், இறக்கவும் வர்ற கனரக வாகனங்கள் இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து தான் போக முடியும்... இந்த லாரிகள், சரக்கு வாகனங்களை நிறுத்த சிப்காட் வளாகத்துல இடம் இல்ல... இதனால, பக்கத்துல போச்சம்பள்ளி பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான இடத்துல நிறுத்துறாங்க பா...''அந்த பகுதியை சேர்ந்த சிலர், ஆளுங்கட்சியினர் பின்புலத்துடன் சுங்க வசூல் என்ற போர்வையில, போலி ரசீதுகளை அச்சடிச்சு லாரிகளுக்கு 50 ரூபாயும், சிறிய வாகனங்களுக்கு, 20 ரூபாய் வீதமும் வசூல் பண்றாங்க... இது சம்பந்தமா, அதிகாரிகளிடம் லாரி டிரைவர்கள் புகார் சொல்லியும், எந்த நடவடிக்கையும் எடுக்கல... சிப்காட் நிர்வாகமும், ஆளுங்கட்சியினர் எதிர்ப்பை சம்பாதிச்சுக்க வேண்டாம்னு மவுனமா இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''என்கிட்டயும் ஒரு பார்க்கிங் வசூல் பஞ்சாயத்து இருக்குல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''சீக்கிரம் சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டூ-வீலர் ஸ்டாண்ட்ல, அதிகபட்ச கட்டணமா ஆறு மணி நேரத்துக்கு, 20 ரூபாய்னு அறிவிப்பு போர்டுல போட்டிருக்கு... ஆனா, அங்க இருக்கிறவங்க 30 ரூபாய் வசூலிக்காவ வே...''இது சம்பந்தமா அவங்களிடம் விளக்கம் கேட்டா, 'அது பழைய கட்டணம்... இன்னும் புது டோக்கன் புத்தகம் அச்சடிக்கல'ன்னு பல மாசமா ஒரே பல்லவியை பாடுதாவ வே...''இது சம்பந்தமா, ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவிச்சாவ... அவங்களோ, 'பார்க்கிங் டெண்டர் எல்லாம் சென்னை, சேலத்துல தான் முடிவு பண்ணுதாவ... இதுல, நாங்க எதுவும் பண்ண முடியாது'ன்னு கையை விரிச்சிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பயணப்படி தராம ஒன்பது மாசமா இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருக்குங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், கண்காணிப்பு, கைது நடவடிக்கைக்கு மாநிலம் முழுக்க பயணம் போறது வழக்கம்... இதனால, அவாளுக்கு பயண படியா, மாசம், 2,000 ரூபாய் தருவா ஓய்...''போன வருஷத்துல, நாலு மாச பயணப்படி நிலுவையில இருக்கு... இந்த சூழல்ல, இந்த வருஷத்துக்கான பயணப்படியை இதுவரை தரவே இல்ல... இதனால, 'கைப்பணத்தை போட்டு ஊர், ஊரா போயிட்டு வர்றோம்... பயணப்படி பாக்கியை உடனே பைசல் செஞ்சா நல்லாயிருக்கும்'னு லஞ்ச ஒழிப்பு போலீசார் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.