உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அஞ்சாமல் வசூலிக்கும் பெண் போலீஸ் அதிகாரி!

அஞ்சாமல் வசூலிக்கும் பெண் போலீஸ் அதிகாரி!

படித்துக் கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''குன்றத்துாரையே குறி வைக்கிறாங்கன்னு புலம்புறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''தலைமை செயலகத்துல இருந்து உயர் அதிகாரிகள் அல்லது டில்லியில் இருந்து, ஏதாவது குழு மற்றும் மக்கள் பிரதிநிதிகள்னு யார் ஆய்வுக்கு வந்தாலும், அவங்களை காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்துக்கு தான் அழைச்சிட்டு போறாங்க... இதனால, பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் பாடு தான் திண்டாட்டமா போயிடுதுங்க...''மாவட்ட உயர் அதிகாரிகள், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், ஊழியர்களை விரட்டி விரட்டி வேலை வாங்குறாங்க... சில நேரங்கள்ல, முன்னேற்பாடுகள் செய்யக் கூட நேரம் தராம, 'நாளைக்கு காலையில குழு வருது'ன்னு மட்டும் சொல்லிடுறாங்க...''இதனால, 'ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்கள் எல்லாம் அதிகாரிகள் கண்ணுக்கு தெரியலையா... நாங்க மட்டும் தான் இளிச்சவாயங்களா'ன்னு, பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் பொருமுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''அதிகாரி வாக்குறுதியை நம்பி, ஏமாந்து போயிட்டோம்னு சொல்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''கடந்த, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த தும், பால் விலையை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைச்சதால, 'ஆவின் நஷ்டத்துல ஓடுது'ன்னு சொல்லி, ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சரியா தரல... இதனால, அகவிலைப்படி உயர்வு கேட்டு, கடந்த ஜூலை மாசம், ஆவின் நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்புல போராட்டம் அறிவிச்சாங்க பா...''உடனே, ஆவின் உயர் அதிகாரி, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைச்சு பேசினாரு... அப்ப, '4 சதவீத அகவிலைப்படி உயர்வு, நிலுவைத் தொகையுடன், இந்த மாத கடைசிக்குள்ள வழங்கப்படும்'னு உறுதி தந்தாருப்பா...''ஆனா, இதுவரைக்கும் அகவிலைப்படி விவகாரத்துல, ஒரு துரும்பை கூட அதிகாரி கிள்ளி போடல... இதனால, 'மறுபடியும் போராட்ட அறிவிப்பை வெளியிடலாமா'ன்னு ஆவின் ஊழியர்கள் ஆலோசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அதிகாரிகள் கண்டிச்சும், அசராம வசூல் பண்றாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.''எந்த துறையில, யாரை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''திருப்பூர் மாவட்டத்துல, 'மூலையோரமா' இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல, பெண் அதிகாரி ஒருத்தர் இருக்காங்க... இவங்க ஏற்கனவே பல்வேறு இடங்கள்ல பணியில இருந்தப்ப நிறைய வசூல் புகார்ல சிக்கி, ஏகப்பட்ட, 'மெமோ'க்களை வாங்கியிருக்காங்க... அதிகாரிகள் பல முறை கண்டிச்சும், தன் போக்கை மாத்திக்கல ஓய்...''சிவில் வழக்கு, சட்ட விரோதமான வழக்குகள்ல கட்டப்பஞ்சாயத்து பேசி, கண்டமேனிக்கு வசூல் பண்றாங்க... யாருக்கும் சந்தேகம் வராம இருக்க, தன் டிரைவர் மற்றும் இரண்டு போலீசாரை வசூல் பணிக்கு பயன்படுத்திக்கறாங்க ஓய்...''இவங்க ஸ்டேஷன்ல, பணமில்லாம ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது... இந்தம்மாவோட வசூல் வேகத்தை பார்த்து அரண்டு போன சக போலீசார், வேற இடங்களுக்கு மாறுதல் வாங்கிட்டு ஓடறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 23, 2024 19:07

போலீஸ்னா அப்படித்தான் இருப்பாங்க, மற்ற துறைகள் மட்டும் என்ன வாழுதாம் என்ற விரக்தி மனா நிலைக்கு மக்கள் வந்து வெகு காலம் ஆகிவிட்டது மெமோவா ? 'தோள் மேலே தொண்ணூறு அடி, துடைத்துப் போட்டால் ஆயிற்று' என்ற தெனாவெட்டுதான்


Kanns
செப் 23, 2024 10:51

Dismiss, Seize Disproportionate Assets & Arrest-Prosecute-Punish All Such Corrupt Biased PowerMisusing Police


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை