உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நுாதன வசூல் வேட்டை!

ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் நுாதன வசூல் வேட்டை!

“ஏட்டு புகார் மீதே அஞ்சு வருஷம் கழிச்சு தான், எப்.ஐ.ஆர்., போட்டிருக்காவ வே...” என்றபடியே டீயை உறிஞ்சினார், பெரியசாமி அண்ணாச்சி.“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.“திருப்பூர் சிட்டி போலீஸ்ல ஏட்டா இருக்கிற ஒருத்தர், தன் குழந்தை மற்றும் சகோதரி குழந்தைகள்னு மூணு பேரை, கோவை மாவட்டம், சூலுார்ல இருக்கிற மத்திய அரசின், 'கேந்திரிய வித்யாலயா' பள்ளியில் சேர்க்க, 2018ம் வருஷம் சிலரை பார்த்து பேசியிருக்காரு... அவங்க, ஏட்டுவிடம், 8 லட்சம் ரூபாயை கறந்துட்டாவ வே...“அந்த மூணு குழந்தைகளும், ஒன்றரை மாசம் மட்டும் பள்ளிக்கு போன சூழல்ல, 'சேர்க்கை பட்டியல்ல பெயர் வரல'ன்னு சொல்லி, வீட்டுக்கு அனுப்பிட்டாவ... ஏட்டுவும், வேற பள்ளிகள்ல குழந்தைகளை சேர்த்துட்டாரு வே...“குடுத்த பணத்தை திருப்பி கேட்டு, ரெண்டு வருஷமா அலைஞ்சும் கிடைக்காம, 2020ம் வருஷம் போலீஸ்ல புகார் குடுத்தாரு... அஞ்சு வருஷமா, பல அதிகாரிகளிடம் மனு குடுத்தும் பலன் இல்ல வே...“இப்ப இருக்கிற கோவை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுக்க, அவர் உத்தரவுப்படி இப்ப தான், எப்.ஐ.ஆர்., போட்டிருக்காவ... 'இனியாவது முறைப்படி விசாரணை நடத்தி, மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பாங்களா'ன்னு ஏட்டு எதிர்பார்த்துட்டு இருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.“அரசு விழாவுக்கு, தனியாரிடம் நிதி வசூல் பண்றா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“-நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களைகட்டறது... இதன் ஒரு பகுதியா, கூடலுார்ல வாசனை திரவிய கண்காட்சி நடத்த போறா ஓய்...“இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய வருவாய் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யல... இதனால, நிகழ்ச்சி நடத்தறதுக்கு எஸ்டேட் முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், மரம் மற்றும் மண் கடத்தல் கும்பலிடம் வருவாய் துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தறா ஓய்...“இப்படி வசூல் பண்றதால, கூடலுார் வருவாய் கோட்டத்தில், அவா நடத்தற சட்ட விரோத செயல்களை அதிகாரிகளால கட்டுப்படுத்த முடியலை... இதனால, மரம், மண் கடத்தல் இங்க ஜோரா நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.“என்கிட்டயும் ஒரு வசூல் தகவல் இருக்குதுங்க...” என்றார், அந்தோணிசாமி.“விளக்கமா சொல்லுங்க பா...” என்றார், அன்வர்பாய்.“தமிழகத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய, 'லே -- அவுட்'களை போட்டு மனைகள் விற்பனை பண்ணுதுங்க... இதுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளிடம் முறையா அங்கீகாரம் வாங்கணுமுங்க...“அப்புறமா, பதிவுத்துறையில் விண்ணப்பிச்சு, புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கணும்... இதுக்கான அதிகாரம் மாவட்ட பதிவாளர்கள் கிட்ட தான் இருக்குதுங்க...“இதை பயன்படுத்தி, பெரும்பாலான மாவட்ட பதிவாளர்கள், ஏற்கனவே செமத்தியா வசூல் வேட்டை நடத்துறாங்க... இந்த சூழல்ல, புதிய, லே - அவுட்களில் மனைகள் விற்பனை முடியும் நேரத்துல, 'வழிகாட்டி மதிப்பை திருத்த போறோம்'னு ரியல் எஸ்டேட் புள்ளிகளை மாவட்ட பதிவாளர்கள் அழைக்கிறாங்க...“அங்க போனா, ஏக்கர் அடிப்படையில மறுபடியும், 'கட்டிங்' கேட்கிறாங்க... துாத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்கள்ல, ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், மனை உரிமையாளர்களும் பதிவாளர்கள் கேட்ட தொகையை குடுத்துட்டு, 'இது என்ன, பகல் கொள்ளையா இருக்கே'ன்னு புலம்பிட்டே போறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.அனைவரும் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஏப் 28, 2025 06:46

அவர்களுக்கென்ன, அங்கு கொடுக்கும் லஞ்சம் கட்டிங்க் எல்லாவற்றையும் plot flat வாங்குபவர்கள் தலையில் கட்டிவிட்டுப் போகிறார்கள் 'அதுதான் செல்லும் செல்லாததுக்கு ஏமாளி customer இருக்கிறாரே


Anantharaman Srinivasan
ஏப் 28, 2025 00:49

பதிவாளர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் அடிக்கடி கறவை மாடுகள் போல் பணம் கறந்தால் அந்த செலவீனங்கள் பிளாட் வாங்கும் மக்கள் தலையில் பிரதிபலிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை