உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மாவட்ட செயலரை மீறி அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம்!

மாவட்ட செயலரை மீறி அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம்!

இ ஞ்சி டீயை உறிஞ்சிய படியே, “வாங்கிய பணத்தை திருப்பி குடுத்துட்டாங்க...” என, பெஞ்ச் மேட்டரை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “என்ன விஷயம் பா...” என கேட்டார், அன்வர்பாய். “பெரம்பலுார் கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பு, சென்னை அதிகாரிகள் கேட்ட, 15 கோடி ரூபாய் கமிஷனுக்கு, 4.50 கோடி ரூபாயை வசூல் பண்ணி, வீடு வீடா மாத்தி பாதுகாக்கிறதா பேசியிருந்தோமே... “இந்த தகவல் வெளியானதும், அமலாக்கத் துறையினர் ரெய்டுக்கு வந்துடுவாங்களோன்னு பயந்து போன குவாரி உரிமையாளர்கள் தரப்பு, வசூல் செய்த பணத்தை, யார் யார்கிட்ட வாங்கினாங்களோ, அவங்களிடமே திருப்பி குடுத்துட்டாங்க... ''சென்னை அதிகாரிகள் மொத்தமாதான் வாங்குவோம்னு சொல்லிட்டதால, அதுவரைக்கும் பணத்தை பாதுகாக்கிறது சிரமம்னு திருப்பி குடுத்துட்டாங்களாம்...” என்றார், அந்தோணிசாமி. உடனே, “கோடிகள் செலவழிச்சும் பலன் இல்ல ஓய்...” என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் குப்பண்ணா. “என்ன விவகாரம் பா...” என கேட்டார், அன்வர்பாய். “சென்னை, கோட்டூர் புரத்தில் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் இருக்கோல்லியோ... இங்க, விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்த ஒரு அரங்கமும் இருக்கு ஓய்... “இந்த அரங்கத்துல, மூணு மாசத்துக்கு முன்னாடி, பொதுப்பணித் துறை எலக்ட்ரிக்கல் பிரிவு சார்பில், 80 லட்சம் ரூபாய் செலவில், 'சவுண்டு சிஸ்டம்' பொருத்தியிருக்கா... அதேபோல, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்திலும், 1.25 கோடி ரூபாய் செலவில், 'சவுண்டு சிஸ்டம்' பொருத்தினா ஓய்... “இந்த ரெண்டுமே, இப்ப பழுதாகி செயல்படாம போயிடுத்து... 'அதிகமான கமிஷன் காரணமா, ஒப்பந்த நிறுவனம் தரமற்ற பொருட்களை பொருத்தியதால தான் பழுதாயிடுத்து'ன்னு நுாலக வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “மாவட்ட செயலர் பரிந்துரையை கண்டுக்காம பதவிகள் குடுத்திருக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி. “எந்த கட்சியிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி. “திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,வுல பொன்னேரி, கும்மிடிபூண்டின்னு ரெண்டு சட்டசபை தொகுதிகள் வருது... இந்த மாவட்டத்துக்கு ஒரே நாள் ராத்திரியில மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைகளுக்கு நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள் பட்டியல் வெளியாச்சு வே... “இதை பார்த்துட்டு, மாவட்டச் செயலரான பலராமனும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி ஆகிட்டாவ... ஏன்னா, கட்சிக்கு உழைச்ச தகுதியான நபர்கள்னு மாவட்ட செயலர் பரிந்துரைச்ச பலரது பெயர்கள் அதுல இல்ல வே... “கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவங்க, தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பணி செய்தவங்க, சமூக விரோத செயல்கள்ல ஈடுபட்டவங்களுக்கு பதவிகள் தந்திருக்காவ... வழக்கமா, அந்தந்த மாவட்ட செயலர் பரிந்துரை பண்றவங்களுக்கு தான் பதவிகள் தருவாவ வே... “ஆனா, இந்த மாவட்டத்துல மட்டும், சென்னையில் இருக்கிற முன்னாள் எம்.எல்.ஏ., ஒருத்தரது தலையீட்டுல, மாவட்ட செயலரை மீறி பதவிகள் குடுத்திருக்காவ... 'இந்த நிர்வாகிகளை வச்சுக்கிட்டு தேர்தலை சந்திச்சா, ஒரு சட்டசபை தொகுதியில கூட ஜெயிக்க முடியாது'ன்னு அ.தி.மு.க., தொண்டர்கள் புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி. “சத்யா, நாங்க கிளம்புறோம் பா...” என்ற படியே அன்வர்பாய் எழ, நண்பர்கள் நடையை கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 11, 2025 06:30

ஒதுக்கப்பட்ட ‘கோடிகளில்’ அந்தக்கோடி வரை ‘பாய்ந்த’ மீதியில் நிறுவிய tem எந்த அழகில் இருக்கும் மாவுக்குண்டான மணம் போலத்தானே கூழுக்குண்டான குணம் இருக்கும்’ இத போல ‘வாங்கிய’ தொகைக்கு ஏற்றபடி லிஸ்டில் இடம் கிடைத்திருக்கும், இதில் புலம்ப என்ன இருக்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை