உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மின் இணைப்புக்கு வாரிய அதிகாரிகள் கறார் வசூல்!

மின் இணைப்புக்கு வாரிய அதிகாரிகள் கறார் வசூல்!

''தி.மு.க., இளைஞரணி மாநாட்டை, தேர்தல் கூட்டணி பிரசார மாநாடாக மாற்றலாமான்னு யோசிக்கிறாங்க பா...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சேலத்துல, கடந்த மாசம் தி.மு.க., இளைஞரணி மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு பண்ணி, மழை, வெள்ளத்தால, ரெண்டு முறை தள்ளி வச்சாங்கல்ல... மாநாட்டுக்கு முகப்பு அலங்காரம், பந்தல் போன்ற பணிகள் முடிஞ்சும், அதை கலைக்காம, அப்படியே வச்சிருக்காங்க பா...''பொங்கல் விழா, 18ம் தேதி முடிஞ்சதும், 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம், 26ல் குடியரசு தினம்னு வரிசையா நிகழ்ச்சிகள் இருக்குது... அதனால, இந்த மாசக் கடைசியில மாநாட்டை நடத்த முடிவு பண்ணியிருக்காங்க பா...''அதுக்கு முன்னாடி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிச்சிட்டா, தலைவர்கள் எல்லாரையும் மாநாட்டு மேடையில ஏத்தி, லோக்சபா தேர்தல் பிரசார மாநாடா நடத்திடலாம்னு தி.மு.க., தலைமை ஆலோசனை பண்ணிட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''அங்காடிகளை தனியார் வசம் தரணும்னு கேட்கிறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''தமிழகத்துல, 56க்கும் மேற்பட்ட காவல் அங்காடிகள் செயல்படுதுங்க... இதுல, காவல், சிறை, தீயணைப்பு, வனத் துறையினர்னு, 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மளிகை, மின்சாதனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்குறாங்க...''இவங்க வாங்குற பொருட்களுக்கு, தமிழக அரசின், 'வாட்' வரி கிடையாதுங்க... ஆனாலும், 'காவல் அங்காடிகள்ல விற்கிற பொருட்கள்ல தரமில்லை, வெளி சந்தையில விற்காத பொருட்களை எங்க தலையில கட்டிடுறாங்க'ன்னு போலீசார் தரப்புல புகார் சொல்றாங்க...''அதோட, 'அங்காடிக்கு நேரடியா பொருட்களை கொள்முதல் பண்ணாம, சப் - டீலர்கள் வழியா வாங்குறாங்க... ஒவ்வொரு அங்காடியிலும், எஸ்.ஐ., கான்ஸ்டபிள்னு, 15க்கும் மேற்பட்ட போலீசார் பணியில ஈடுபடுறாங்க...''சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு பணிகள்ல ஈடுபட வேண்டிய போலீசார், வியாபாரிகள் மாதிரி பொருட்கள் விற்கிறது சரியில்லை... அதனால, காவல் அங்காடியை தனியார் வசம் ஒப்படைக்கணும்... காவல் அங்காடியின் கொள்முதல், விற்பனை, லாப விபரங்களை எல்லாருக்கும் தெரியுற மாதிரி, இணையதளத்துல வெளியிடணும்'னு போலீசார் கேட்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மினிஸ்டர் வரைக்கும் தரணும்னு தெனாவெட்டா பேசறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் மின் வாரிய அலுவலகத்துல, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கிறவங்களிடம், லைன் இன்ஸ்பெக்டரும், போர்மேனும் கறாரா வசூல் பண்றா... புது இணைப்பு, லைன் ஷிப்டிங் உட்பட எந்த வேலையா இருந்தாலும், ஆயிரக்கணக்குல லஞ்சம் குடுத்தா தான் காரியம் ஆறது ஓய்...''இது பத்தி அவாளிடம் கேட்டா, 'நாங்க சும்மா ஒண்ணும் இந்த இடத்துக்கு வரலை... மினிஸ்டர் வரை பங்கு தரணும்... அதனால தான் கறாரா கேட்டு வாங்கறோம்'னு கூசாம சொல்றா ஓய்... இதெல்லாம், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு நன்னாவே தெரியும்... ஆனா, அவாளும் கண்ணை மூடிண்டு தான் இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''தாமஸ் வாரும்... ஷாகுல் பாய் உம்மை தேடிட்டு இருந்தாரே... தெரு முக்குல பார்த்தீரா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜன 05, 2024 22:18

ஊழல் பெருச்சாளிகள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். நம் தலைவிதி அவர்களுக்கு நடுவே நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.


JayaSeeli
ஜன 05, 2024 17:05

"மின் இணைப்புக்கு வாரிய அதிகாரிகள் கறார் வசூல்..." இதெல்லாம் காலம் காலமாக நடப்பது தானே இதில் என்ன அதிசயம் இருக்கு ?? approval கொடுப்பது போல் கொடுத்து விட்டு, பின்னர் completion certificate வாங்க போனால், இது நொள்ளை அது சொத்தை என பேரம் பேசி கறப்பது தான் இப்போ கோடி கட்டி பறக்கிறது.


Karunagaran Srinivasan
ஜன 05, 2024 11:53

அர்ஜுன் ஜென்டில்மன் படத்தில் வருவதுபோல் உள்ளது இவர்கள் யோக்கிதை அவ்வளுவுதான் இதில் தூமையான நேர்மையான ஆட்சி என்று கூசாமல் பொய் இந்த பொழப்பிற்கு இவர்கள் பிச்சை எடுக்கலாம் SK


D.Ambujavalli
ஜன 05, 2024 06:32

ல. ஒழிப்பு துறை, அரசு மாற்றும்போது இந்த லஞ்ச வழக்குகளை தோண்டும். நீதிபதி. ஆனந்த் சாருக்கு கேஸ்கள் குவியும்


மேலும் செய்திகள்