உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கடைகள் நடத்த அனுமதி அடையாறு கூட்டத்தில் புகார்

ஒரே குடும்பத்தில் 10 பேருக்கு கடைகள் நடத்த அனுமதி அடையாறு கூட்டத்தில் புகார்

அடையாறு,அடையாறு மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் துரைராஜ், மண்டல அதிகாரி சீனிவாசன் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் ஏழு கவுன்சிலர்கள், துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் பேசியதாவது: கிண்டியில் உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கிண்டியில் மின் கேபிள்கள் குறுக்கே செல்வதால் மழைநீர் கால்வாயை துார்வார முடியாமல் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.கோட்டூர்புரத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நான் பல கூட்டத்தில் பேசிவிட்டேன். ஏரியா சபை கூட்டத்திலும் மக்கள் முறையிட்டும் பிரச்னை தீரவில்லை.வார்டு 171ல் உள்ள 'அம்மா' உணவகம் சுத்தமாக இல்லாததால், கூட்டம் குறைந்துவிட்டது. அடையாறு, மல்லிப்பூ நகரில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடை கட்டிக் கொடுக்க வேண்டும். பெசன்ட் நகரில் கடைகள் நடத்த மாநகராட்சி அடையாள அட்டை வழங்கியதில் குளறுபடி உள்ளது. ஒரே வீட்டில் 10 பேர் பெயரில் அட்டை வழங்கி உள்ளனர். இங்கு 600 கடைகள் இருக்க வேண்டிய இடத்தில், 900 கடைகள் இருப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.வாழ்வாதாரம் இல்லாத தனிநபர்களும் சிரமப்படுகின்றனர். அடையாள அட்டை வழங்கியதை முறைப்படுத்த வேண்டும்.தரமணி குளத்தை மேம்படுத்த சி.எஸ்.ஆர்., நிதி பெற்று தரப்பட்டது. இரு ஆண்டுகளாகியும் பணி துவங்கவில்லை. பாரதி நகர் எரிவாயு மயானம் சுகாதார சீர்கேடாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், இரவு காப்பகத்தில் குடிநீர் இணைப்பு வழங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.திருவான்மியூரில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, 30 ஆண்டுக்கு முன் பதித்த குழாய்களை மாற்ற வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். மண்டல குழு தலைவர் பேசியதாவது:விடுதிகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீரை வடிகாலில் விடுவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.இது தொற்றுநோய் பாதிப்புக்கு வழிவகுக்கும். சுகாதாரத்துறை, குடிநீர் வாரியம், பொறியியல் துறை ஆய்வு செய்து, கழிவுநீர் கட்டமைப்பு முறையாக அமைக்காத கட்டடங்கள் மீது, அபராதம், உரிமம் ரத்து, 'சீல்' வைப்பது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் அவர் கூறினார். தொடர்ந்து, சாலை, வடிகால் தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளுக்கான, 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ