உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் அழைப்பை புறக்கணித்த தி.மு.க.,வினர்!

அமைச்சர் அழைப்பை புறக்கணித்த தி.மு.க.,வினர்!

சமோசாவை கடித்தபடியே, ''ஏனோ தானோன்னு செயல்படுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''எந்த திட்டத்துல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்ல, சிறை துறை சார்பில், 'கூண்டுக்குள் வானம்' என்ற திட்டத்தை செயல்படுத்துறாங்க... அதாவது, புத்தகங்களை தானம் வாங்கி, சிறை நுாலகங்கள்ல கைதிகளை படிக்க வைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம்...''இதுக்காக, அங்கங்க நடக்கிற புத்தக கண்காட்சி யில் சிறை துறையினர் ஸ்டால் போட்டு, புத்தகங்களை நன்கொடையா வாங்கி, சிறை நுாலகங்கள்ல வைப்பாங்க... சமீபகாலமா நடக்கிற புத்தக கண்காட்சிகள்ல சும்மா பேருக்கு தான் ஸ்டால் போடுறாங்க...''இது சம்பந்தமா எந்த முன்னறிவிப்போ, விளம்பரமோ பண்றது இல்ல... இதனால, அதிகமா புத்தகங்கள் வர்றதும் இல்ல... 'இந்த திட்டத்துல, சிறை துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுனா நல்லாயிருக்கும்'னு புத்தக ஆர்வலர்கள் சொல்றாங்க...''என்றார், அந்தோணிசாமி.''அடக்கியே வாசிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 கவுன்சிலர்கள் இருக்கா... மாநகராட்சி தி.மு.க., வசம் இருந்தாலும், அ.தி.மு.க.,வுக்கு 16 கவுன்சிலர்கள் இருக்கா ஓய்...''சொத்து வரி விதிப்பு குளறுபடிகளால மட்டும், கடந்த 13 வருஷத்துல மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கு... இதை பத்தி எல்லாம், மாநகராட்சி கூட்டங்கள்ல அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசறதே இல்ல ஓய்...''எந்த மக்கள் பிரச்னைக்கும் ஓங்கி குரல் குடுக்கவும் மாட்டேங்கறா... அவாளை வழிநடத்தவும் சரியான தலைவர் இல்ல... சில கவுன்சிலர்கள், தி.மு.க.,வினருடன் ஒட்டி உறவாடி, காரியங்களை சாதிச்சுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''அமைச்சர் கூப்பிட்டும் போகல வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருப்பா அவங்க...'' என கேட்டார் அன்வர்பாய்.''மதுரை தி.மு.க.,வுல அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர செயலர் தளபதின்னு தனித்தனி கோஷ்டிகள் இருக்கு... முதல்வர், துணை முதல்வர் விழாக்கள், கட்சி கூட்டங்கள்ல இவங்க ஒற்றுமையா கலந்துக்கிட்டாலும், உள்ளூர்ல எதிரும், புதிருமா தான் இருக்காவ வே...''சமீபத்துல, மதுரை வந்த முதல்வரின் மருமகன் சபரீசன், அமைச்சர் தியாகராஜனை பார்க்க அவரது வீட்டுக்கு போயிருக்கார்... அதுக்கு முன்னாடியே அமைச்சர், நகர செயலர் தளபதிக்கு போன் போட்டு, சபரீசனை வரவேற்க கட்சி நிர்வாகிகளை தன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி அழைப்பு குடுத்தாரு வே...''தளபதியும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரை, அமைச்சர் வீட்டுக்கு போகும்படி சொல்லியிருக்காரு... அப்படியிருந்தும், விரல் விட்டு எண்ணக்கூடிய நிர்வாகிகளே அமைச்சர் வீட்டுக்கு போயிருக்காவ வே...''முக்கிய நிர்வாகிகள் யாரும் அந்த பக்கம் எட்டியே பார்க்கல... காரணம் கேட்டதுக்கு, 'தியாகராஜன், மதுரைக்கு வந்தா அவரது தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தர்றாரு... நகர நிர்வாகிகளை கண்டுக்கிறதே இல்ல... அதனால தான், யாரும் அங்க போகல'ன்னு சொல்லியிருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பேச்சு முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M Ramachandran
பிப் 08, 2025 20:56

சபரீசன் என்ன அரசு அமைச்சரா இல்லை அரசு முதன்மையை செய்யலாளரா? ஸ்டாலின் என்ன சொந்த பந்தங்களை அரசு வேலை செய்ய அமைக்க பட்டு இருக்கிறார்களா? என்ன இது. முதலில் பேரனை அனுப்பினார் இப்போ மருமகன். சம்பந்தமில்லா மனிதர்கள் அரசு செயல்பாட்டில் தலையிடுதல் முறை தானா.


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 13:51

ஓட்டளித்த பொதுமக்ககளை விட முதல்வர் வீட்டு வேலைகார்களுக்கு கூட மந்திரிகள் மரியாதை தருவர்.


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 13:48

எரியர கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி... அதிமுக கவுன்சிலரும் கொள்ளையடிக்கும் பேர்வழிகள் தான்.


Yes your honor
பிப் 08, 2025 10:19

அட திருப்பியும் ஒரு 30,000 கோடியா, சார் சார் என்னையும் சேத்துக்குங்க சார், ப்ளீஸ் சார்.


D.Ambujavalli
பிப் 08, 2025 06:36

சபரீசன் எந்தப்பதவியில் இருக்கிறாரென்று அவருக்கு ஒரு விழா எடுக்க அமைச்சர் முதல் கூட்டம் சேர்க்கவேண்டும்? நாளை இன்பநிதிக்கு விழா எடுக்க அழைப்பார்கள் முதல்வர் வீட்டு நாய்க்குட்டி,குக்கூட வரவேற்பு கொடுக்குமளவு அமைச்சர்கள் இறங்கிவிட்டார்களா? Ptr நன்கு படித்த அறிவாளி, அவருக்கே இந்த கதியா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை