உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல் தி.மு.க.,வில் தயார்!

மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல் தி.மு.க.,வில் தயார்!

''பைக்ல போய் கண்காணிக்கிறாரு பா...'' என்றபடியே, பட்டர் பிஸ்கட்டை கடித்தார் அன்வர்பாய்.''யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''கடந்த ஜனவரி மாசம், சிவகங்கை எஸ்.பி.,யா நியமிக்கப்பட்டவர் ஆஷிஷ் ராவத்... உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஏற்கனவே நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் உதவி எஸ்.பி.,யாகவும், டில்லி யில் உள்ள தமிழக பட்டாலியன் பிரிவில் எஸ்.பி.,யாகவும் இருந்திருக்காரு பா...''சிவகங்கைக்கு இவர் வந்ததுமே, தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும், 1,073 ரவுடிகளை பட்டியல் எடுத்து, அதுல 991 பேர் வீடுகள்ல அதிரடி சோதனை நடத்தினாரு... ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்துல ஜெயில்ல அடைக்கிறதுக்கு, தன் மேற்பார்வையில, எஸ்.ஐ., தலைமையில் தனிப்பிரிவையும் உருவாக்கியிருக்காரு பா...''அறைக்குள்ள அடைஞ்சு கிடக்காம, தினமும் ஏதாவது ஒரு பகுதிக்கு ரோந்து போறாரு... சில நேரங்கள்ல தன் பைக்லயே, மக்களோடு மக்களா நகர்ல ரோந்து வந்தும் கண்காணிக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''கோஷ்டி, கோஷ்டியா பிறந்த நாளை கொண்டாடியிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிறந்த நாளையாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.''ஆமாம்... ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலரா, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் இருக்காரு... இவருக்கும், பகுதி செயலர்கள் சிலருக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு வே...''பழனிசாமி பிறந்த நாளை ஒட்டி, பெரியார் நகர் பகுதி செயலர் மனோகரன் ஏற்பாட்டுல, பெரிய மாரியம்மன் கோவில்ல அன்னதானம் நடந்துச்சு... பகுதி செயலர்கள் கே.சி.பழனிசாமி, ஜெகதீசன், தங்கமுத்து, கோவிந்தராஜ்னு பலரும் வந்திருந்தாவ வே...''ராமலிங்கம் உள்ள நுழைஞ்சதும், மனோகரன் தவிர மத்த எல்லாரும் அறநிலையத் துறை அலுவலகத்துல போய் உட்கார்ந்துக்கிட்டாவ... அன்னதானத்தை ராமலிங்கம் துவக்கி வச்சுட்டு போனதும்தான் வெளியில வந்தாவ வே...''அதே மாதிரி, பகுதி செயலர்கள் ஜெகதீசன், தங்கமுத்து, கோவிந்தராஜ் ஆகியோர் வேற வேற கோவில்கள்ல வழங்கிய அன்னதானத்திலும் மாநகர செயலர் ராமலிங்கம் கலந்துக்கல... இதைப் பார்த்த தொண்டர்கள், 'இப்படி உழக்குல கிழக்கு மேற்கு பார்த்துட்டு இருந்தா, சட்டசபை தேர்தல்ல எப்படி ஜெயிக்கிறது'ன்னு புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''மண்டல வாரியா பொறுப்பாளர்கள் தயாரா இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''தி.மு.க.,வுல கட்சி நிர்வாகத்தை, அமைப்பு ரீதியா ஆறு மண்டலமா பிரிச்சிருக்காங்க... இதுல, தென்மண்டல பொறுப்பாளரா கனிமொழி, மத்திய மண்டலம் - நேரு, வடக்கு மண்டலம் - எ.வ.வேலு, கொங்கு மண்டலம் - செந்தில் பாலாஜின்னு பொறுப்பாளர்கள் பட்டியலும் தயாரா இருக்குதுங்க...''இது போக, மேற்கு, கிழக்கு மண்டலங்களுக்கும் புதுசா பொறுப்பாளர் நியமிக்க இருக்காங்க... முதல்வர் ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஓய்வுன்னு அஞ்சு நாள் பயணமா ஊட்டிக்கு போயிருக்காரே... அவர் சென்னை திரும்பியதும், மண்டல பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியாகும்னு சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yes your honor
மே 15, 2025 09:18

இந்த மூவர் மட்டுமல்ல துரைமுருகன், ஜேப்பியார் போன்ற இன்னும் சில பேங்கர்ஸும் 2026 எலக்ஷன் நேரத்தில் அடங்கிப்போய்த் தான் இருப்பார்கள். ரொம்பவும் ஆடினால் ஒன்லி ஆலூ சபிஜி, நோ பைனாப்பிள் கேசரி என்பது அவர்களுக்கும் தெரியும் அப்பப்பாவிற்கும் தெரியும்.


D.Ambujavalli
மே 15, 2025 03:58

செந்தில் எந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வருமோ, எந்த சிறை காத்திருக்கிறதோ என்ற நிலையில் இருந்தாலும், நிதியை வாரி இறைக்கும் 'வள்ளல்' என்ற ஒரு தகுதிக்காகவே எல்லாப்பொறுப்பும் அவருக்கு கிடைக்கிறது இதே மாதிரி 'மாட்டிக்கொண்டு' கோர்ட்டுகளுக்கு யாத்திரை செல்லும் மற்ற எந்த அமைச்சருக்காவது பதவிதானம் செய்யப்படுகிறதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை