பில்டர் காபியை ருசித்தபடியே, “அதிகாரி கள் மீது, 'அப்செட்'ல இருக்கார் ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.“கொங்கு மண்டலத்துல, தோட்டங்கள்ல தனியா இருந்த முதியோரை கொலை பண்ணி, நகை, பணத்தை கொள்ளை அடிச்ச நாலு பேரை, போலீசார் சமீபத்துல கைது செய்தாளோல்லியோ... கிட்டத்தட்ட ஒரு வருஷமா, போலீசாருக்கு சவால் விட்டுண்டு இருந்த இந்த கும்பலை, ஈரோடு எஸ்.பி.,யா போன மாசம் பொறுப்பேற்ற, சுஜாதா தலைமையிலான டீம், தீவிரமா விசாரணை நடத்தி பிடிச்சது ஓய்...“அப்புறமா, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், எஸ்.பி.,சுஜாதா எல்லாரும் டி.ஜி.பி.,யுடன் போய், சென்னையில முதல்வரை சந்திச்சா... இவாளை முதல்வரும் பாராட்டி கவுரவிச்சார்... ஆனா, அப்ப மாவட்ட அமைச்சரான முத்துசாமி கூட இல்ல ஓய்...“சிவகிரியில முதிய தம்பதி கொலை நடந்ததுமே, அவங்க குடும்பத்தை முத்துசாமி பார்த்து ஆறுதல் சொன்னார்... அதுவும் இல்லாம, அவாளை, 'பா.ஜ.,வினரிடம் எதுவும் பேச வேண்டாம்'னும் தடுத்தார் ஓய்...“போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த உள்ளூர் பா.ஜ.,வினரையும், 'ஆப்' பண்ணிணார்... “ஆனாலும், போலீஸ் அதிகாரிகள், முதல்வரை சந்திக்க போறச்சே, மாவட்ட அமைச்சர் என்ற முறையில தன்னிடம் தகவல் தெரிவிக்காம போயிட்டதால, அவா மேல அமைச்சர் அதிருப்தியில இருக்கார் ஓய்...” என்றார்,குப்பண்ணா. “டில்லிக்கு கூப்பிட்டு வகுப்பு எடுத்திருக்காங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...“தமிழகத்துல, ஓட்டுச் சாவடி முகவர்களுக்கானபயிற்சி முகாமை, தலைமை தேர்தல் கமிஷன் சமீபத்துல டில்லியில் நடத்துச்சு... இதுல, முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக்கிட்டாங்க பா...“அப்ப, ஓட்டுச்சாவடி விதிமுறைகள், முகவர்களின் பணிகள் குறித்து, ஏற்கனவே தெரிஞ்ச விஷயங்களையே புதுசு மாதிரி அதிகாரிகள் பாடம் எடுத்திருக்காங்க... இதை தமிழ்ல நடத்த, தமிழகத்துல இருக்கிற தேர்தல் அதிகாரிகளையும் வரவழைச்சிருக்காங்க பா...“இந்த வகுப்பை சென்னையிலயே நடத்தியிருக்கலாமேன்னு தமிழக அரசியல்வாதிகள் சிலர் கேட்டிருக்காங்க... அதுக்கு, 'டில்லி தேர்தல்கமிஷன் அலுவலகத்துல, மிகப்பெரிய கருத்தரங்கு கூடம் இருக்கிறதால, இங்கதான் நடத்தணும்கிறது, தலைமை தேர்தல் கமிஷனரின் உத்தரவு'ன்னு அதிகாரிகள் சொல்லிட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய். “கலெக்டருக்கு எதிரா இருக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி. “எந்த ஊருலங்க...” என கேட்டார்,அந்தோணிசாமி.“விருதுநகர் மாவட்ட அரசு அலுவலகங்கள்ல, மூணு வருஷத்துக்கு மேலா பணியில இருக்கிறவங்களை இடமாறு தல் பண்ணி, அதன் விபரங்களை ஒரு வாரத்துல அனுப்பி வைங்கன்னு, அந்தந்த துறை உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு போட்டிருக்காரு... இதுக்கு, அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கு வே...“அவங்க என்ன சொல்றாங்கன்னா, 'ஊழியர்களை மாறுதல் செய்யும் அதிகாரம், மாநில அளவிலான துறை இயக்குநர்களுக்கு மட்டும் தான் இருக்கு... துறையின் மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது... கலெக்டர் சொல்றபடி எல்லாருக்கும் இடமாறுதல் போட்டா, அவங்களுக்கு பயணப்படி தரணும்... அதுக்கு கூடுதல் செலவாகும்னு தான், இடமாறுதலை அரசே நிறுத்தி வச்சிருக்கு... ஆனா, அதை மீறி கலெக்டர் உத்தரவு போட்டிருக்கார்'னு புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.