மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
''பி றக்காத பிள்ளைக்கு பேர் வச்ச கதை தெரியுமா வே...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரில் போன வாரம் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்'னு அறிவிச்சாரு... ''உடனே, புதுக்கோட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராஜா, 'புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைத்து, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரணும்'னு போன வருஷம் சட்டசபையில் தான் பேசிய வீடியோவை, சமூக வலைதள பக்கத்துல பதிவிட்டு, முதல்வரின் அறிவிப்பையும் குறிப்பிட்டிருந்தாரு வே... ''இன்னொரு பக்கம், தி.மு.க., ராஜ்யசபா முன்னாள் எம்.பி., அப்துல்லா, 'தொழில் துறை அமைச்சர் ராஜாவை அழைச்சிட்டு போய், நியோ டைடல் பார்க் அமைக்கிறதுக்கான இடத்தை நான் தான் காட்டினேன்... அப்புறமா முதல்வரிடம் பேசி, திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது'ன்னு பதிவிட்டிருந்தாரு வே... ''புதுக்கோட்டை மக்களோ, 'அறிவிப்பு மட்டும் தானே வந்திருக்கு... டைடல் பார்க் வந்து நிறைய பேருக்கு வேலை கிடைச்சதும், இவங்க பெருமை அடிக்கலாமே'ன்னு புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''முக்கிய பணியிடங்கள் எல்லாம் காலியா கிடக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''செங்கல்பட்டில் இருக்கிற நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகத்தில், மண்டல செயற்பொறியாளர் பணியிடம் பல மாசங்களா காலியா கிடக்கு... சென்னையை ஒட்டியிருக்கிற ஆவடி மாநகராட்சியில் ஒரு செயற்பொறியாளர் கூட இல்ல பா... ''செயற்பொறியாளர்களே இல்லாததால, இவங்களை வேலை வாங்க வேண்டிய கண்காணிப்பு பொறியாளர் பணியிடத்தையும் காலியாவே போட்டிருக்காங்க... இதெல்லாம் உதாரணம் தான் பா... ''தமிழகம் முழுக்கவே, பல நகரங்கள்ல பொறியாளர் பணியிடங்கள் காலியா கிடக்கு... இதனால, 'பெருமழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டா, நிவாரண பணிகளை செய்றது சிக்கலாகிடும்'னு அங்கிருக்கும் ஊழியர்கள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''மானியத்தை இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எந்த மானியத்தை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''ரேஷன் கடைகளின் செலவினங்களுக்காக வருஷத்துக்கு சராசரியா, 500 கோடி ரூபாய் மானியத்தை கூட்டுறவு துறைக்கு அரசு ஒதுக்கும்... ஆனா, இதை பகுதி பகுதியா பிரிச்சு, 350 கோடி ரூபாய் வரைக்கும் தான் தரா ஓய்... ''இப்ப, 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருட்களை குடுக்கறால்லியோ... இதுக்கு, பொருட்களை எடுத்துண்டு போற போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலியா ஒரு வீட்டுக்கு கிராமத்தில் தலா, 40 ரூபாய், நகரங்கள்ல, 36 ரூபாய், மலை பகுதிகள்ல, 100 ரூபாய்னு கணக்கிட்டு தரா ஓய்... ''இதுக்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு வருஷத்துக்கு, 30.16 கோடி ரூபாய் செலவாறது... இதையும் மானியத்தில் சேர்த்து தரும்படி கூட்டுறவு துறையினர் கேட்டிருக்கா... தர்றதா சொன்ன அரசு, இன்னும் மானியத்தை விடுவிக்காம இருக்கறதால, கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில திணறிண்டு இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
10-Nov-2025