உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கடற்கரை பகுதியில் கனஜோராக நடக்கும் கடத்தல்!

கடற்கரை பகுதியில் கனஜோராக நடக்கும் கடத்தல்!

''அஜித் படம் ஒதுங்கிட்டதால, ஏழு படங்களுக்கு, 'லக்' அடிச்சிருக்குதுங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''நடிகர் அஜித்தின், விடாமுயற்சி படத்தை, இந்த பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண, விறுவிறுப்பா வேலைகள் நடந்துச்சு... ஆனா, திடீர்னு ரிலீசை தள்ளி வச்சுட்டாங்க...''இதனால, 'துணை முதல்வர் உதயநிதி மனைவி கிருத்திகா இயக்கத்தில் உருவான, காதலிக்க நேரமில்லை படத்தை பொங்கலுக்கு வெளியிடுறதுக்காகவே, அஜித் படத்தை தள்ளி வச்சுட்டாங்க'ன்னு கோலிவுட்ல பேச ஆரம்பிச்சுட்டாங்க...''ஆனா, நிஜமான காரணம் அது இல்லையாம்... தயாரிப்பு தரப்புல ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் ஹாலிவுட் படத்தின் சில காட்சிகளை சேர்க்கிறதுக்கான, 'காப்பி ரைட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வரலைங்க...''அதனால தான், அஜித் படம் இப்ப வெளியாகலை... அஜித் படம் வராததால, வணங்கான், மெட்ராஸ்காரன் உட்பட ஏழு படங்கள் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''நாங்களும் பிழைக்க வேண்டாமான்னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''தர்மபுரி மாவட்டத்தில், 58 ரேஷன் கடை ஊழியர் பணியிடங்களை நிரப்ப இருக்காங்க... இந்த வேலைக்கு கடும் போட்டி நிலவுறதால, ஆளுங்கட்சி புள்ளிகள் 7 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறதா தி.மு.க.,வினரே புகார் சொல்றாங்க...''அதாவது, 'கட்சியில இளைஞரணி உள்ளிட்ட, 23 சார்பு அணி நிர்வாகி கள் இருந்தாலும், ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்துல, ஒன்றிய செயலர்கள் பரிந்துரைக்கு தான் முக்கியத்துவம் தராங்க... ஏற்கனவே இடமாறுதல், 'டெண்டர்' பணிகள்னு எல்லாத்தையும் அவங்களுக்கு தான் தர்றாங்க... ''கட்சிக்கு நாங்களும் தான் பல காலமா உழைக்கிறோம்... ஆனா, எங்களுக்கு எதுவும் செய்ய மாட்டேங்கிறாங்க'ன்னு சார்பு அணி நிர்வாகிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''பட்டியல் போட்டு காட்டியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாரு, என்னத்தை பட்டியல் போட்டது வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள்ல இருந்து, இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப் படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கறதோல்லியோ... சமீபத்துல, புதுார் பாண்டியாபுரம் பகுதியில் 2,000 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் மடக்கி பிடிச்சா ஓய்...''அதை எடுத்து வந்தவாளை பிடிச்சு விசாரிச்சப்ப, 'க்யூ' பிரிவு அதிகாரி தலைமையிலான போலீசாருக்கு மாதம் இத்தனை லட்சம் ரூபாய் மாமூல் குடுக்கிறோம்னு பட்டியல் போட்டிருக்கா... அதிர்ச்சியான போலீசார், பிடிச்சவாளை விட்டுட்டு, பீடி இலைகளை மட்டும் கணக்குல காட்டியிருக்கா ஓய்...''இவா மட்டுமல்லாம, மதுவிலக்கு பிரிவு, ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு வச்சுண்டு, மாதாந்திர மாமூல் வசூல் பண்றா... 'இவாளை களை எடுத்தா தான், கடற்கரை பகுதியில கடத்தல் சம்பவங்கள் குறையும்'னு நேர்மையான போலீசார் எல்லாம் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்ச் அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gajageswari
ஜன 12, 2025 14:58

பொருட்கள் நேர்மையாக எடுத்து செல்ல உள்ள தடைகள் நீக்க வேண்டும்.


அப்பாவி
ஜன 12, 2025 08:25

நேர்மையான போலுஸ்? சிரிச்சு மாளலை குப்பண்ணா.


Varadarajan Nagarajan
ஜன 12, 2025 06:56

இலங்கை கடற்படையால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதற்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்துவிடவேண்டாம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அடிக்கடி வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதுவதற்கு முன்பு இங்கு சரிசெய்யவேண்டியதும் உள்ளது


N Sasikumar Yadhav
ஜன 12, 2025 05:45

இலங்கை ராணுவம் கைது செய்வது தப்பேயில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை