ரயிலில் மூதாட்டி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் ஒப்படைப்பு
சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ்ராஜம், 67. இவர், நேற்று காலை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் திருவள்ளூர் செல்ல நின்று கொண்டிருந்தார்.சில நிமிடத்தில் வந்த ரயிலில் ஏறினார். ரயில் புறப்பட்டபோது, ஆவடி செல்வதை அறிந்து விரைவாக இறங்கிவிட்டார்.அப்போது, 1.32 லட்சம் ரூபாய், 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன், வங்கி புத்தகம் அடங்கிய பையை தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் வாயிலாக, வில்லிவாக்கம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பர்சா பிரவீனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த மின்சார ரயில் காலை 10:35 மணிக்கு வில்லிவாக்கம் சென்றது. உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த ரயிலில் ஏறி, மகளிர் பெட்டிக்கு பின்புறத்தில், மூதாட்டி அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பையை மீட்டனர். அதில், அவர் தெரிவித்தப்படி, பணம், மொபைல்போன், வங்கி புத்தகம் ஆகியவை இருந்தன. இதையடுத்து, வர்கீஸ்ராஜம், வில்லிவாக்கம் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் சென்றார். அவரிடம், 1.32 லட்சம் ரூபாய் பணம், மொபைல்போன், வங்கி புத்தகம் அடங்கிய பையை ஒப்படைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு, வர்கீஸ்ராஜம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.***