சீனியர் காங்., - எம்.எல்.ஏ.,வை அவமதித்த பெண் அதிகாரி!
''கு ற்றச்சாட்டுக்கு பதில் தராம, படக்குன்னு எழுந்து போயிட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி. ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''வேலுார் மாநகராட்சியின், 'துணை' பதவியில் இருக்கும் ஆளுங்கட்சி பிரமுகரை தான் சொல்றேன்... சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்துல, 'மாநகராட்சி பள்ளிகளுக்கு நாளிதழ்கள் வாங்க மாதந்தோறும் வழங்கிய, 2,000 ரூபாயை இப்ப நிறுத்திட்டாங்க'ன்னு தி.மு.க., கவுன்சிலர் ஒருத்தர் குற்றம் சாட்டினாருங்க... ''இதனால கோபமான பிரமுகர், தன் கையில் இருந்த மைக்கை கீழே போட்டுட்டு, தன் ஆதரவு கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செஞ்சிட்டாருங்க... இதை பார்த்து, பலரும் அதிர்ச்சியாகிட்டாங்க... ''இதுக்கு காரணம், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அமைச்சரின் ஆதரவு அவருக்கு இருக்காம்... காட்பாடி பகுதியில், 'டெண்டர்' விடுற பல பணிகளையும், சீனியர் தயவுல, இவரே, 'பினாமி' பெயர்ல எடுத்து பண்ணிட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''சுனில்குமார்... துரை ஆதரவு, உமக்கு பலமா இருக்கு போல...'' என, பெஞ்சில் அமர்ந்த நண்பரை கிண்டல் அடித்த குப்பண்ணாவே, ''மனுக்கள் மேல மனுக்களா குடுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார். ''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''அந்தந்த பகுதியில் இருக்கற மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுங்கோன்னு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியினருக்கு, அதன் தலைவர் விஜய் உத்தரவு போட்டிருக்கார்... மதுரை மாநகராட்சியில் வார்டு வாரியா அக்கட்சியினர் போய், மக்களிடம் குறைகள் கேக்கறா ஓய்... ''எரியாத தெரு விளக்குகள், குடிநீர் குழாய் பழுது போன்ற சின்ன பிரச்னைகளை, த.வெ.க.,வினரே சரி செய்து குடுத்துடறா... பாதாள சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட பிரச்னைகளா இருந்தா, கலெக்டர் நடத்தும் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டங்களுக்கு போய் நிறைய மனுக்களை கொடுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''மணிக்கணக்குல காத்திருக்க வச்சிட்டாங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''தி.மு.க., கூட் டணியில, காங்., சார்பில், நாலாவது முறையா எம்.எல்.ஏ.,வா இருக்கிற சீனியர் அவர்... இவர், வருவாய் துறையில் பெரிய பதவியில் இருக்கும் பெண் அதிகாரியை, சமீபத்துல பார்க்க போயிருக்காரு வே... ''அவங்க அறைக்குள்ள போன எம்.எல்.ஏ.,வை பார்த்த பெண் அதிகாரி, 'வெளியில வெயிட் பண்ணுங்க... கூப்பிடுறேன்'னு சொல்லி அனுப்பிட்டாங்க வே... ''கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்தும், எம்.எல்.ஏ.,வை கூப்பிடவே இல்ல... அதே நேரம், எம்.எல்.ஏ.,வுக்கு பிறகு வந்த மற்றொரு பெண் அதிகாரியை உள்ளே கூப்பிட்டு, ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திருக்காங்க வே... ''அதிகாரியின் உதவியாளரிடம் எம்.எல்.ஏ., முறையிட, அவரோ, 'நான் எதுவும் செய்ய முடியாது சார்'னு கையை விரிச்சிட்டாரு... வெறுத்து போன எம்.எல்.ஏ., அதிகாரியை சந்திக்காமலே திரும்பிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. ''இப்படி உட்காருங்க, முனிரத்தினம்... நேத்து அமுதா மேடத்தை பார்த்தீங்களா, இல்லையா...'' என, நண்பரை வரவேற்று அந்தோணிசாமி பேச, மற்றவர்கள் கிளம்பினர்.