தி.மு.க., ஆதரவு அதிகாரி: ஆளும் கட்சியினர் அதிருப்தி!''அரசுத் துறைகளும் ரொம்பவே, 'ஹை-டெக்'கா மாறிட்டு வருது வே...!'' என, விவாதத்தை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.''நல்ல விஷயம் தானே பா...'' என்றார் அன்வர்பாய்.''விஷயத்தை கேளும்... தனியார் நிறுவனங்கள் தான், தங்களோட செயல்பாடுகளை விளக்கி, அதை பயன்படுத்திக்கச் சொல்லி, ஸ்டார் ஓட்டல்கள்ல, 'காக் டெய்ல்' பார்ட்டி வைக்கும் வே... ஆனா, போன வாரம், அரசுத் துறை அதிகாரிகளுக்கு, இன்னொரு துறை சார்பா, 'சரக்கு' பார்ட்டி வைச்சிருக்காங்க...''தகவல் தொழில்நுட்பத் துறை மூலமா, எல்லா துறைகள்லேயும், 'இ-கவர்னன்ஸ்' முறையை செயல்படுத்த போறாங்க வே... இந்த மின் ஆளுமை திட்டம் சம்பந்தமா, அதிகாரிகளுக்கு விளக்குறதுக்காக, சென்னையில ஸ்டார் ஓட்டல்ல போன வாரம் கூட்டம் போட்டாங்க... அதுல, துறைச் செயலர், திட்டம் பற்றி ரெண்டு மணி நேரம் விளக்கம் அளிச்சிருக்கார்... அது முடிஞ்சதும், எல்லா துறை அதிகாரிகளுக்கும், 'காக் டெய்ல்' பார்ட்டி கொடுத்திருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.''ஒரு பதவியை நிரப்பாம இருக்கறதால, அதைப் பிடிக்க முயற்சி நடக்குதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் அந்தோணிசாமி.''எந்த பதவி ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.'டி.என்.பி.எஸ்.சி.,ல ஒரு உறுப்பினர் பதவி காலியா இருக்குதுங்க... வழக்கமா, ஒரு உறுப்பினரை, முஸ்லிம் சமுதாயத்துல இருந்து நியமிப்பாங்க... அந்த இடத்துல, இந்த முறை யாரை நியமிக்கறதுன்னு, அரசு இன்னும் முடிவு செய்யலை... அங்க ஏற்கனவே இருக்கற உறுப்பினர்கள், முந்தைய ஆட்சியில நியமிக்கப்பட்டவங்களா இருக்காங்க...''அதனால, புதுசா நியமிக்கற உறுப்பினர், அவர்களை சமாளிக்கும் நபரா இருக்கணும்ன்னு அரசு நினைக்குது... அதுக்கேத்த மாதிரி ஒருத்தரை நியமிப்பாங்கன்னு பேச்சு இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.''முக்கிய பதவியில, தி.மு.க., ஆதரவு அதிகாரியை நியமனம் செஞ்சது, ஆளுங்கட்சியினருக்கு சுத்தமா பிடிக்கலை பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.''யாரைச் சொல்லுதீரு வே...'' என விசாரித்தார் அண்ணாச்சி.''அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் பதவியில இருப்பவர், பக்கா தி.மு.க., ஆதரவாளர்ன்னு சொல்றாங்க பா... இவருக்கு, பல மாஜி மந்திரிகள் வேண்டப்பட்டவங்களாம்... இப்படிப்பட்டவரை, எப்படி முக்கிய பதவியில அரசு நியமிச்சதுன்னு தெரியாம, ஆளுங்கட்சிக்காரங்க முழிக்கறாங்க...''லோக்கல் சேனலுக்கு அனுமதி கொடுக்கற விஷயத்துல, ஆளுங்கட்சியினருக்கு முக்கியத்துவம் தரணும்னு, சேர்மன் சொல்றாராம்... ஆனா, 'ஏலம் தான் விடணும்'னு, எம்.டி., அடம் பிடிக்கறாராம்... ஏலம் விட்டா, இவ்வளவு காலமா ஏகபோக ஆதிக்கம் செலுத்திட்டு இருந்த நிறுவனமே, எல்லாத்தையும் எடுத்துடும்னு, கேபிள் ஆபரேட்டர்கள் பயப்படறாங்க...''இதுபோன்ற பிரச்னையால, சேர்மனுக்கும், எம்.டி.,க்கும், 'உரசல்' நடந்துட்டு இருக்கு பா...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.