உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சீட் ஆசை காட்டி வசூலை வாரி குவிக்கும் ஏட்டு!

சீட் ஆசை காட்டி வசூலை வாரி குவிக்கும் ஏட்டு!

''வாயை கொடுத்து வம்புல மாட்டிண்டார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை, நேதாஜி ரோட்டில், தண்டாயுத பாணி கோவில் இருக்கோல்லியோ... அறநிலையத் துறை கட்டுப்பாட்டுல இருக்கற இந்த கோவில்ல, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்துல பலர் பணியில இருக்கா ஓய்...''இவாள்லாம், அரசிடம் காலமுறை ஊதியம் வாங்கறதால, 'காணிக்கை தட்டில் விழும் பணத்தை உண்டி யல்ல போடணும்'னு செயல் அதிகாரி முருகேசன் சொல்ல, அதை அர்ச்சகர்கள் காதுலயே போட்டுக்கல... முருகேசன், செயல் அலுவலர் கவனத் துக்கு விவகாரத்தை கொண்டு போய், பெரிய சர்ச்சை ஆச்சே ஓய்...''இதனால, கோபமான அர்ச்சகர் ஒருத்தர், 'கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடையாளர்கள் வழங்கிய பல லட்சத்தை முருகேசன் கணக்கு காட்டாம வச்சிருக்கார்'னு அரசுக்கு புகாரை தட்டி விட்டுட்டார்... இது, முருகேசனுக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.''விட்ட இடத்தை பிடிச்சுட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''நாலஞ்சு நாளைக்கு முன்னாடி, 38 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாத்தினாங்களே... போன வருஷம் ஜூலையில, சுற்றுச்சூழல், வனத்துறை செயலரா இருந்த சுப்ரியா சாஹு, சுகாதாரத் துறைக்கு மாத்தப்பட்டாங்க பா...''பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புடைய சுகாதாரத் துறை, 'சென்சிட்டிவ்' ஆனது... 24 மணி நேரமும், 'அலெர்ட்'டா இருக்கணும் பா...''இது, சுப்ரியாவுக்கு சரிப்பட்டு வரல... அதுவும் இல்லாம, துறையின் முக்கிய புள்ளிக்கும், இவங்களுக்கும் சரியான ஒருங்கிணைப்பும் இல்லாம போயிடுச்சு...''இதனால, சுப்ரியா சாஹு, தான் இருந்த பழைய இடத்துக்கே போயிடுறேன்னு, கோட்டையின் முக்கிய அதிகாரிகளிடம் பேசி, வனத் துறைக்கே வந்துட்டாங்க... 'கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் இருக்கும் இவங்க, ஓய்வு வரைக்கும் இங்கயே இருந்துடு வாங்க'ன்னு வனத் துறையில பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''சீட் ஆசை காட்டி, வசூலை வாரி குவிக்காருல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''திருச்சி, மணப்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வளநாடு, புத்தாநத்தம், துவரங்குறிச்சி ஏரியாக்களுக்கு, எஸ்.பி.சி.ஐ.டி.,யில் இருந்து ஒரு ஏட்டுவை நியமிச்சிருக்காவ... சமீபத்துல எஸ்.பி., இன்ஸ்பெக்டரா நியமிக்கப்பட்ட பெண் அதிகாரியை, 'நான் தான் அந்த இடத்துக்கு கொண்டு வந்தேன்'னு ஏட்டு பெருமை அடிச்சுக்கிடுதாரு வே...''ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளிடம், 'நான் மேலிடத்துக்கு போடுற ரிப்போர்ட் மூலமா தான், மணப்பாறையில் யாருக்கு சீட்னு உறுதி யாகும்'னு சொல்லி வசூல் பண்ணுதாரு... அதுவும் இல்லாம, 'நானும், எஸ்.பி., இன்ஸ்பெக்டரும் நினைச்சா, அ.தி.மு.க.,விலும் மணப்பாறை சீட் வாங்கி தர முடியும்'னு சொல்லி, அந்த கட்சியினரிடமும் வசூலை வாருதாரு வே...''இவரை நம்பி, விராலிமலை அ.தி.மு.க., பிரமுகர் சிவசாமி என்பவர், 'எனக்கு தான் மணப்பாறை சீட்'னு சொல்லிட்டு தொகுதியில வலம் வர்றாரு... 2021 சட்டசபை தேர்தலப்பவும், 'சீட் வாங்கும் அளவுக்கு ரிப்போர்ட் போடுறேன்'னு சொல்லியே, அ.தி.மு.க.,வினரிடம் வசூல் பண்ணி, புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் ஏகப்பட்ட நிலங்களை ஏட்டு வாங்கிட்டாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிவுக்கு வர, அனைவரும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி