உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத பெண் மேயர்!

எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத பெண் மேயர்!

''இதழியல் பயிற்சி வகுப்பு துவங்க போறாங்க பா...'' என்றபடியே, பட்டர் பிஸ்கட்டை கடித்தார் அன்வர்பாய்.''யாரை சொல்றீங்க பாய்...'' என கேட்டார், அந்தோணிசாமி.''தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ், எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்குது... 'இது சும்மா பேருக்கு தான் இருக்கு... சரியா செயல்படல'ன்னு நிறைய புகார்கள் வருது பா...''இதனால, செய்தி துறை சார்பில், இதழியல் பட்டம் மற்றும் பட்டய படிப்பு வகுப்புகளை துவங்க ஆலோசனை நடக்குது... 'இது சம்பந்தமா சீக்கிரமே அறிவிப்பு வரும் அல்லது பட்ஜெட் உரையில் இடம்பெறும்'னு கோட்டை வட்டாரத்துல சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''பாரத ரத்னா கேட்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பட்டியல் சமுதாயத்தினர் மேம்பாட்டுக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் போராடியவர் இரட்டைமலை சீனிவாசன்... இவரது உரிமைப்போருக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்துச்சுங்க...''இதனால, அவருக்கு திவான் பகதுார், ராவ் சாகிப், ராவ் பகதுார் போன்ற பட்டங்களை பிரிட்டிஷார் குடுத்தாங்க... இவரது கொள்ளுப் பேத்தியான நிர்மலா பிரகாஷ், ம.தி.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகள்ல இருந்துட்டு, ஜெ., காலத்துல அ.தி.மு.க.,வுல சேர்ந்தாங்க...''இப்ப, அங்க இருந்தும் விலகி, சமுதாய பணிகள்ல ஈடுபாடு காட்டுறாங்க... 'என் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கணும்'னு பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியிருக்காங்க... ''தன் தாத்தா குறித்த பல தகவல்களை திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மேயருக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும் பனிப்போர் நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.''எந்த ஊருல வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சென்னை திரு.வி.க., நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., தாயகம் கவி... திரு.வி.க., நகர் மண்டலத்துல தான், மேயர் பிரியாவின் வார்டும் வருது ஓய்...''இதனால, இந்த மண்டலத்துல அடிக்கடி மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சிகளை மேயர் நடத்துறாங்க... ஆனா, இதுக்கு எம்.எல்.ஏ., தாயகம் கவியை அழைக்கறது இல்ல ஓய்...''இந்த மண்டலத்துல, மாநகராட்சி சார்புல நடக்கற எந்த நிகழ்ச்சிக்குமே எம்.எல்.ஏ.,வுக்கு அழைப்பு இல்ல... அரசு சம்பந்தப்பட்ட விழாக்கள்ல மட்டுமே ரெண்டு பேரும் கலந்துக்கறா ஓய்... ''இது ஒருபக்கம் இருக்க, மேயர் தரப்பு, கூட்டணி கட்சிகளிடமும் முட்டிக்கறது... ஓட்டேரியில், காங்., சார்பில் சமத்துவ பொங்கல் விழா சமீபத்துல நடந்துது... இதுல, சிறப்பு விருந்தினரா மேயர் பிரியா கலந்துக்கிட்டாங்க ஓய்...''விழாவுல மேயரின் தந்தையும் பங்கேற்றார்... அவரிடம், வி.சி., கட்சியின் திரு.வி.க., நகர் பகுதி செயலர் ராஜு, திடீர்னு வாக்குவாதத்துல இறங்கிட்டார் ஓய்...''விசாரிச்சதுல, வி.சி., கட்சியினர் ஒட்டிய பொங்கல் வாழ்த்து போஸ்டர்கள் மீது, மேயரின் வாழ்த்து போஸ்டர்களை, தி.மு.க.,வினர் ஒட்டிட்டாளாம்... 'நாங்களும் உங்க கூட்டணியில் தானே இருக்கோம்'னு வி.சி.,க்கள் எகிற, அவாளை மேயரின் தந்தை சமாதானப்படுத்தி அனுப்பிச்சார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கிஜன்
ஜன 18, 2025 11:30

தாயகம் கவி ...பளிச் என லிப்ஸ்டிக் போட்டிருப்பாரா ?


D.Ambujavalli
ஜன 18, 2025 06:20

மெய்யரம்மா அமைச்சர் சேகர் பாபு லெவலுக்கு கீழே இருப்பவரை துரும்பாகத்தான் மதிப்பார்


புதிய வீடியோ