“பொறுப்பு பதவியில புகுந்து விளையாடுதாவ வே...” என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.“யாருங்க அது...” எனகேட்டார், அந்தோணிசாமி.“பெரம்பலுார் ஆட்சியர் அலுவலகத்துல, வளர்ச்சி, சத்துணவு பிரிவுக்கான கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர், மாவட்ட ஊராட்சி செயலர் உட்பட பல அதிகாரி பணியிடங்கள் பல மாசமாவே காலியா கிடக்கு... ''இந்த பணியிடங்களை, இவங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற சூப்பிரண்டுகள் தான் கூடுதல் பொறுப்பா பார்த்துக்கிடுதாவ வே...“பண புழக்கம் அதிகமான துறைகளா இருப்பதால, கூடுதல் பொறுப்பை சுமையா கருதாம, சுகமா கருதி சுறுசுறுப்பா வேலை பார்க்காவ... ''போலி கணக்கு எழுதி நிறைய பணத்தை சாப்பிடுறதா, இவங்க மேல, வருமானவரி துறைக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் புகார்கள் போயிட்டு... 'சீக்கிரமே இவங்க வீடுகள்ல ரெய்டு நடக்கலாம்'னு கலெக்டர் ஆபீஸ் ஊழியர்களே முணுமுணுக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.“பணத்தை குறைச்சுட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“தமிழகத்துல அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்ல, 'ஹைடெக் லேப்'கள் அமைச்சிருக்கா... இந்த லேப்கள்ல, எட்டு முதல் 10 கம்ப்யூட்டர்கள் வச்சு, பி.எஸ்.என்.எல்.,லின், 'பிராட்பேண்ட்' இணைப்பும் குடுத்திருக்கா ஓய்...“இந்த லேப்களை, அந்தந்த பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாம, பக்கத்துல இருக்கற தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக்கறா... இந்த லேப்களுக்கு கூடுதல் கம்ப்யூட்டர்கள், பிராட்பேண்ட் இணைப்பு வழங்கறதா சொல்லி ஒரு வருஷமாகியும், அதுக்கான பணிகள் மந்தமா நடக்கறது ஓய்...“கம்ப்யூட்டர், மோடம் எல்லாம் இன்னும் வந்து சேரலை... அதுக்குள்ள, 'பி.எஸ்.என்.எல்., இணைப்பை வாங்கிடுங்கோ'ன்னு தலைமை ஆசிரியர்களை அதிகாரிகள் நெருக்கறா ஓய்...“கடந்த காலத்துல பி.எஸ்.என்.எல்., இணைப்பு, பைபர் கேபிள்கள் வாங்க, 10,000 ரூபாய் வரை குடுத்தா... இப்ப, 3,000 ரூபாய் மட்டுமே தர்றோம்னு சொல்றதால, தலைமை ஆசிரியர்கள் கையை பிசைஞ்சுண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.“வாரிசுக்கு வாய்ப்பு தந்தா, தி.மு.க., முகாம்ல ஐக்கியமாகிடுவாருங்க...” என்றார், அந்தோணிசாமி.“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.“சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர், பா.ஜ.,வுல இருந்து விலகி, வேற எந்த கட்சிக்கும் போகாம இருக்காரே... அவர் இதுவரைக்கும் போகாத கட்சிகள், தி.மு.க., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி மட்டும் தான்...“இப்ப, ஆளுங்கட்சியுடன் நெருக்கமா இருக்காருங்க... அந்த கட்சிக்கு சொந்தமான, 'டிவி சீரியல்'ல நடிக்க ஆரம்பிச்சிருக்காருங்க... சேகருக்கு இனியும் தேர்தல்ல நிற்க விருப்பம் இல்லையாம்... ஆனா, தன் மகனான நடிகர் அஸ்வினை அரசியல்ல களமிறக்க விரும்புறாருங்க...“தி.மு.க.,வுல மகனுக்கு, 'சீட்' தர்றதாஇருந்தா, அந்த கட்சியில சேரவும் தயாரா இருக்காராம்... இதுக்கு முன்னோட்டமா, சேகரின்தந்தை வெங்கட்ராமனின் நுாற்றாண்டு விழா, நாடகப்பிரியாவின் 50வது ஆண்டு விழா, சேகரின்,7,000வது நாடக மேடை நிறைவு விழாக்கள், வர்ற 20ம் தேதி சென்னையில நடக்குதுங்க... இதுல, முதல்வரும், துணை முதல்வரும் கலந்துக்கிறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.“நடக்கட்டும்... நடக்கட்டும்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.