உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / சென்னை - கோல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு...முட்டுக்கட்டை! மாநில அரசிடம் 11 கி.மீ., ஒப்படைக்க ஆணையம் தாமதம்

சென்னை - கோல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு...முட்டுக்கட்டை! மாநில அரசிடம் 11 கி.மீ., ஒப்படைக்க ஆணையம் தாமதம்

சென்னை: சென்னை - கோல்கட்டா நெடுஞ்சாலையில், மாதவரம் - நல்லுார் வரையிலான 11 கி.மீ., சாலையை, தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் ஒப்படைப்பதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் - தடா இடையிலான, 54 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்ய, நல்லுாரில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் வாயிலாக, மாதந்தோறும், 25 கோடி ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இச்சாலையை, 330 கோடி ரூபாயில், ஆறுவழியாக விரிவாக்கம் செய்யும் பணிகள், 2009ல் துவங்கப்பட்டன. நல்லுார் முதல் தடா வரை பணிகள் நடந்தன. மாதவரம் ரவுண்டானா முதல் நல்லுார் சுங்கச்சாவடி வரையிலான, 11 கி.மீ., பணிகள் துவங்கப்படவில்லை.நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்காதது, இதற்கு காரணமாக கூறப்பட்டது.தற்போது நல்லுார் - தடா இடையிலான ஆறு வழிச்சாலை பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. இதற்காக, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. மாதவரம் - நல்லுார் இடையே, 11 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க முடிவானது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இத்திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. இதற்கு பங்களிப்பு தொகை வழங்க, தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால், உயர்மட்ட மேம்பாலச் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.இதனால், இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்து பராமரிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. பராமரிப்பு பணிக்கான நிதியை வழங்கவும் முன்வந்துள்ளது.கடந்தாண்டு டிசம்பருக்குள், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம், மாதவரம் - நல்லுார் இடையிலான 11 கி.மீ., சாலை ஒப்படைக்கப்படும் என, கூறப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சாலையை பெற்று, அதை விரிவாக்கம் செய்து மேம்படுத்த, தமிழக நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது.தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, தொடர்ந்து கட்டண சாலையாக பராமரிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. ஆனால், மத்திய அரசால் இதுவரை சாலை ஒப்படைக்கப்படவில்லை.இச்சாலையில், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு, தீர்த்தகரையம்பட்டு சந்திப்பு, வடகரை சந்திப்பு, காவாங்கரை சந்திப்பு, புழல் சந்திப்பு ஆகியவை, அதிக விபத்து நடக்கும் கரும்புள்ளி பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சாலை குறுகலாக உள்ளதால், விபத்துகள் தொடர்கின்றன.மாதவரம் - நல்லுார் சாலையை மேம்படுத்தவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், சம்பந்தப்பட்ட சாலையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் எழுந்து உள்ளது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளில், தேவையான மேம்பாட்டு பணிகளை செய்தபின், மாநில அரசிடம் சாலை ஒப்படைக்கப்படும்' என்றனர்.

அதிகரிப்பு பின்னணி?

மாதவரம் ரவுண்டானா முதல் நல்லுார் சுங்கச்சாவடி வரை, சாலையின் இருபுறங்களிலும், வர்த்தக கடைகள், வாகன விற்பனை மையங்கள், பெட்ரோல் பங்க், உணவகங்கள், பள்ளிகள், வாகனம் பழுதுபார்க்கும் கடைகள், காபி கடைகள் அதிகளவில் உள்ளன.இவற்றிற்கு செல்வதற்கு சாலை பாதுகாப்பு விதியை மீறி, இரும்பு தகடுகளை அகற்றிவிட்டு, அணுகு சாலையில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் வகையில் ஆங்காங்கே வழிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது, புதிது புதிதாக வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், துணிக்கடைகள், எடை மேடை, உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டடம் மற்றும் அங்கு நடக்கும் வியாபாரத்திற்கு ஏற்றபடி, 20,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்று, சாலையில் தடுப்புகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். சாலையில் அதிகரித்துவரும் விபத்துக்கு, இதுவும் பிரதான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையுடன், திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஜி.என்.டி., சாலை ஆகியவை, செங்குன்றம் சந்திப்பில் இணைகின்றன. இது, திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பாக உள்ளது.கனரக வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள் அதிகளவில் இந்த சந்திப்பை கடக்கின்றன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் வாகன ஓட்டிகள், பயணியர் திண்டாடுகின்றனர். இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும்.அதேபோல், வடகரை சந்திப்பில் சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும், மாதவரம் நெடுஞ்சாலையும் இணைகின்றன. இங்கும் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாலம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ