மேலும் செய்திகள்
கோவில் நிலம் ' கூறு ' ; லஞ்சம் ' தாறுமாறு '
17-Sep-2024
''கிட்டத்தட்ட, 500 நாளை கடந்து போராடு றாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' என கேட்டார் அந்தோணிசாமி.''திருப்பூர் மாவட்டம், குன்னத்துார், குமரிக்கல் பாளையத்துல தொல்லியல் சின்னங்கள் இருக்கு... இந்த இடத்தை ஒட்டி, மின் வாரியம் சார்பில், 'டிரான்ஸ்பார்மர்' அமைச்சிருக்காங்க பா...''தொல்லியல் சின்னங்கள் நிறைந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாதுன்னு சொல்லி, அங்குள்ள விவசாயிகள் 500 நாட்களை தாண்டி யும் உண்ணாவிரத போராட்டம் நடத்திட்டு இருக்காங்க... மின் வாரியம் தரப்போ, 'தொல்லியல் சின்னத்துக்கும், டிரான்ஸ்பார்மருக்கும் இடையில் நிறைய தொலைவு இருக்கு'ன்னு விளக்கம் குடுத்திருக்கு பா...''ஆனாலும், அதை ஏற்க மறுத்து விவசாயி கள் போராடிட்டு இருக்காங்க... நாலஞ்சு நாள் உண்ணாவிரதம் இருந்தாலே நடவடிக்கை எடுக்கிற அரசு, 500 நாட்களை கடந்தும் நடக்கிற இந்த உண்ணாவிரதத்தை கண்டுக்காம மவுனமா இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.''கம்மி விலைக்கு வாங்கிய நிலங்களை சிப்காட்டுக்கு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பார்க்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் மாவட்டம், வல்லப்பாக்கம் கிராமத்துல, 500 ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் இருக்கு... சில தனிநபர்களும், அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து, விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, இங்க புதுசா அமைய இருக்கிற சிப்காட்டுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பார்க்காவ வே...''சிப்காட் அமைய உள்ள நிலத்தை சுற்றிலும் பல கிராமங்கள் இருக்கு... 'சிப்காட் அமையுறதால, அந்த கிராமங்கள்ல குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுறதும் இல்லாம, சுற்றுச்சூழலும் கடுமையா பாதிக்கப்படும்'னு மக்கள் பயப்படுதாவ வே...''சிப்காட் பக்கத்துல, 500 மீட்டர்லயே பாலாறு ஓடுது... அங்க இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துட்டு போறதும் பாதிக்கப்படும்னு சொல்லுதாவ... அதுவும் இல்லாம, 'விவசாய மண்டலமா அறிவிச்ச இந்த நிலங்களை, சிப்காட்டா மாற்றுவது இயற்கைக்கு மாறானது... அதனால, சிப்காட் அமைக்கிற திட்டத்தை ரத்து செய்யணும்'னு முதல்வருக்கு மனு அனுப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''அமைச்சரின் அறிவிப்பு, பொதுமக்களுக்கு இனிப்பா இருந்தாலும், டாக்டர்களுக்கு கசப்பா இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''தமிழகத்துல மகப்பேறு இறப்பு என்ற வார்த்தையே இருக்கப்படாதுன்னு சொல்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், இதுக்காக நாலு திட்டங்களை சமீபத்துல அறிவிச்சார் ஓய்...''ஆனா, 'உயர்தர தொழில்நுட்ப உபகரணங் களையும், நவீன மருத்துவக் கருவிகளையும் கொண்டு வந்தா மட்டும் மகப்பேறு இறப்புகளை தடுத்துட முடியுமா... அவற்றை எல்லாம் இயக்க டாக்டர்கள், நர்ஸ்கள் வேண்டாமா'ன்னு துறையில கேக்கறா ஓய்...''ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல மட்டும், 2,000க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியா இருக்கு... பெரும்பாலான அரசு மருத்துவமனைகள்ல மகப்பேறு டாக்டர் பணியிடங்கள் காலியா இருக்கு ஓய்...''மகப்பேறு இறப்புகளை குறைக்கணும்னா, இப்ப இருக்கற, 700 மகப்பேறு டாக்டர் பணியிடங்களை, 2,000 ஆக அதிகரிக்கணும்னு அரசு டாக்டர்கள் எல்லாம் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.''அப்புறம், பரங்கிமலை ஆயுதப்படையில பெண் போலீசாருக்கு சிலர் பாலியல் தொல்லை குடுக்கிறதா, நேத்து பேசியிருந்தோமுல்லா... ஆனா, 'அந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கல... சிலர் தவறான தகவல்களை பரப்புதாவ'ன்னு அதிகாரிகள் தரப்பு சொல்லுது வே...'' என்றார், அண்ணாச்சி.''வெரிகுட்...'' என்ற படியே குப்பண்ணா எழ, பெஞ்ச் மவுனமானது.
17-Sep-2024