இ ஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''அமைச்சருக்கு எதிரா செயல்படுறாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம், தி.மு.க., - எம்.எல்.ஏ., வா இருப்பவர் கண்ணன்... குன்னம் எம்.எல்.ஏ.,வும், இந்த மாவட்ட தி.மு.க., செயலரும், போக்குவரத்து துறை அமைச்சருமா இருக்கிறவர் சிவசங்கர்... ''போன வாரம், கலெக்டர் சார்பில், செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்துச்சு... இதுக்காக, சமூக வலைதளங்கள்ல நிறைய விளம்பரங்களை கண்ணன் செஞ்சிருந்தாருங்க... ''முகாம் நடந்த குன்னம் பகுதியின் எம்.எல்.ஏ., சிவசங்கர் படத்தை, எந்த விளம்பரங்கள்லயும் போடல... ஏன்னா, இவரு, பெரம்பலுாரைச் சேர்ந்த நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜாவோட ஆதரவாளர்... ''அமைச்சருக்கு எதிரானவரா தன்னை பகிரங்கமாவே காட்டிக்கிறாருங்க கண்ணன்...'' என்றார், அந்தோணிசாமி. ''சுற்றுலா மாளிகையை, கட்சி ஆபீசா மாத்திட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னையை ஒட்டி, பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் இருக்கோல்லியோ... இந்த ஊர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்துல, அரசு சுற்றுலா மாளிகை இருக்கு ஓய்... ''அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள்னு யார் வந்தாலும், இங்க தங்கும் அளவுக்கு சொகுசு வசதிகள் எல்லாம் இருக்கு... ஆனா, இந்த மாளிகையை உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் பலரும், தங்களது கட்சி ஆபீஸ் போல பயன்படுத்திண்டு இருக்கா ஓய்... ''கட்சி நிர்வாகிகளை கூப்பிட்டு, அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்தறா... கார்த்தால இருந்து நள்ளிரவு வரைக்கும், தி.மு.க., கரைவேட்டி கட்டினவா நடமாட்டமா தான் இருக்கு... ஆளுங்கட்சியினர் என்பதால, அதிகாரிகளும் தட்டிக்கேட்க முடியாம தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரியாதான்னு கேட்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்துல, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... ஆனா, அந்த அலுவலகத்தை, சாதாரண எழுத்தர் ஒருத்தர் தான் ஆட்டி படைக்காரு வே... ''ஆவணங்கள் எல்லாம் சரியா இருக்குற பத்திரங்களை பதிவு பண்ணவே, கணிசமா லஞ்சம் கேக்காரு... அதுவே, விதிகளை மீறி பதிவு செய்யணும்னா, லட்சக்கணக்கில் வசூல் பண்ணுதாரு வே... ''எழுத்தர், 'ஓகே' சொன்னா தான், பதிவு ஆவணங்கள்ல மத்த அதிகாரிகள் கையெழுத்து போடுதாவ... இது சம்பந்தமா, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் போய், அவங்க ஆய்வுக்கு வந்தாலும், அவங்களையும் பணத்தால குளிப்பாட்டி, எந்த பிரச்னையும் இல்லாம எழுத்தர் பார்த்துக்கிடுதாரு... 'லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இந்த ஆபீஸ் பக்கமும் கொஞ்சம் எட்டி பார்க்கணும்'னு, பாதிக்கப்பட்ட பலரும் புலம்புதாவ வே...'' என மு டித்தார், அண்ணாச்சி. ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''மாரியம்மாளிடம் கேக்கறதை விட, விக்னேஷ்கிட்டயே பேசிடுங்கோண்ணா... அப்ப தான் காரியம் நடக்கும்...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.