பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “சாலையை சீரமைக்காம ஆயிரத்தெட்டு சாக்கு போக்குகளை சொல்றாங்க...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.“சென்னை, நுங்கம்பாக்கம் 109வது வார்டுல, லயோலா காலேஜை ஒட்டி ரயில்வே சுரங்கப்பாதை இருக்குதுங்க... இதன் நடுப்பகுதியில தண்ணீர் தேங்கி, சாலையே பல்லாங்குழி போல மாறிடுச்சுங்க...“ரயில்வே டிராக் பகுதி யில இருந்து ஊற்று தண்ணீர் பொங்கி, சுரங்கப்பாதைக்கு வருது... இதனால, சுரங்கப்பாதையில போற வாகன ஓட்டிகள் எல்லாம் கடுமையா பாதிக்கப்படுறாங்க...“ஏரியா காங்., கவுன்சிலர் சுகன்யா செல்வம், 'இந்த சாலையை சரி பண்ணுங்க'ன்னு மாநகராட்சி கூட்டத்துல, மூணு முறை பேசிட்டாங்க... ஆனா, 'பூமிக்குள்ள இருந்து தண்ணீர் வெளியே வராம சாலை போடணும்னா, ஐ.ஐ.டி., தொழில்நுட்ப குழுவினர் ஐடியா வேணும்... அதுவும் இல்லாம, போக்குவரத்து போலீசார் அனுமதி இல்லாம, சாலையை செப்பனிட முடியாது... முக்கியமான சாலையா இருப்பதால, கடும் போக்குவரத்து நெரிசல் ஆகிடும்'னு மாநகராட்சி தரப்பு பல காரணங்களை சொல்லி இழுத்தடிக்குதுங்க...” என்றார், அந்தோணிசாமி.“பொங்கல் பரிசு குடுத்து அசத்திட்டாங்க ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...“திருவள்ளூர் மாவட்டத்துல, பிரபல முருகன் கோவில் ஊரின் நகராட்சி கூட்டம் சமீபத்துல நடந்துது... இதுல, கவுன்சிலர்கள், கமிஷனர், இன்ஜினியர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் கலந்துண்டா ஓய்...“கூட்டம் முடிஞ்சதும், ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் சேர்மன், தன் சொந்த பணத்துல, துணை தலைவர், 18 கவுன்சிலர்கள், கமிஷனர், பொறியாளர் உட்பட அலுவலகத்தில் பணியாற்றும், 62 பேருக்கும் வேட்டி, சட்டை, பட்டுப் புடவை, ஆளுயுர காலண்டர், டைரின்னு பொங்கல் பரிசு வழங்கி, வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க ஓய்...“ஒரு பரிசு பையின் மதிப்பு தலா, 5,000 ரூபாய் இருக்கும்... பொங்கல் பரிசுக்கு மட்டும், 4 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க... இந்த பரிசு பொருட்களை அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களும் எந்த மறுப்பும் சொல்லாம வாங்கிண்டா ஓய்...” என்றார், குப்பண்ணா.“கலெக்டர் பெயர்ல கல்லா கட்டியிருக்காரு பா...” என்றார், அன்வர்பாய்.“யாருவே அது...” என கேட்டார், அண்ணாச்சி.“திருப்பூர் மாவட்டம்,உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒரு அதிகாரி, நாலு வருஷமா பணியில இருக்காரு... இவர், உயர் அதிகாரிகளுடனான தன் நட்பை பயன்படுத்தி, 'பல்லடத்தில் அரசு உபரி நிலத்தை பட்டா மாறுதல் பண்ணி தர்றேன்'னு சொல்லி, ஒரு பெண்ணிடம், 30 லட்சம் ரூபாய் வாங்கிட்டாருப்பா...“அப்புறமா, 'இதுல, கலெக்டருக்கும் பங்கு கொடுத்தா தான் காரியம் கச்சிதமா நடக்கும்'னு சொல்லி, மீண்டும் 10 லட்சத்தை வாங்கியிருக்காரு... 40 லட்சம் குடுத்தும் வேலை நடக்காததால, வெறுத்து போன பெண், விஷயத்தை கலெக்டரிடமே எடுத்துட்டு போயிட்டாங்க பா...“அதிர்ச்சியான கலெக்டர் கிறிஸ்துராஜ், சம்பந்தப்பட்ட அதிகாரியை, 'சஸ்பெண்ட்' பண்ண சொல்லிட்டாரு... அதுவும் இல்லாம, 'அந்த அதிகாரியுடன் வேற யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கு... லஞ்ச தொகையை, யார் யார் பங்கு போட்டுக்கிட்டாங்க'ன்னும் விசாரிக்க சொல்லிட்டதால, அதிகாரியின் நட்பு வட்டம் அதிர்ச்சியில இருக்குது பா...” என முடித்தார், அன்வர்பாய்.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.