உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அனுமதி பெறாத கட்டடத்தை திறந்த உதயநிதி!

அனுமதி பெறாத கட்டடத்தை திறந்த உதயநிதி!

பெஞ்சில் அமர்ந்த கையுடன், “அமைச்சரையே தப்பா வழிநடத்திட்டார்னு புலம்புதாவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.“எந்த அமைச்சரை பா...” என கேட்டார், அன்வர்பாய்.“சென்னையில், சமீபத்துல நடந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்துல பேசிய அமைச்சர் மகேஷ், '500 அரசு பள்ளிகளை தத்து கொடுத்து, தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த போறோம்'னு பேசியிருந்தாரே வே... இதுக்கு, தி.மு.க., கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டுல்லா...“அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு, வெளிநபர் ஒருத்தர் தான் மூலகாரணமா இருக்காராம்... 'மாநில, பெற்றோர் - ஆசிரியர் கழகத்துல முக்கிய பதவி வகிக்கிற அவரது கட்டுப்பாட்டுல தான், தனியார் பள்ளிகள் துறையே செயல்படுது'ன்னு கல்வி துறை அதிகாரிகளே முணுமுணுக்காவ...“அதுவும் இல்லாம, 'அவரது ஐடியாவை தான் அமைச்சர் பேசி, எதிர்க்கட்சிகள் கண்டனத்துக்கு ஆளாகிட்டார்'னும் சொல்லுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.“தலை தெறிக்க ஓடறா ஓய்...” என்றார், குப்பண்ணா.“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.“துாத்துக்குடி வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலரான அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்கும் கூட்டங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை, சமூக வலைதளங்கள்ல பதிவேற்றும் பணிகளை, கட்சியின், ஐ.டி., விங் பண்றது ஓய்...“லோக்கல்ல, எதிர்க்கட்சிகளுக்கு, 'சோஷியல் மீடியா'க்கள்ல பதிலடி தர்றதும் இவா வேலை தான்... பகல் முழுக்க தீயா வேலை பார்க்கற இவா, ராத்திரியானா, 'ஏசி பார்'ல போய், 'சுதி' ஏத்திக்கறா ஓய்...“மறுநாள் எப்படி எல்லாம் வேலை பார்க்கணும்னு டிஸ்கஷன் பண்ணிண்டு, ஏதாவது ஒரு மாவட்ட நிர்வாகிக்கு போனை போட்டு, 'ஜி பே மூலமா பார் பில்லை செட்டில் பண்ணுங்கோ'ன்னு அசால்டா சொல்லிடறா... ஐ.டி., நிர்வாகிகள் போன் வந்தாலே, மாவட்ட நிர்வாகிகள் அலறி அடிச்சுண்டு ஓடறா ஓய்...” என்றார், குப்பண்ணா.டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா...' என்ற கமல்ஹாசன் பாடலை ரசித்தபடியே, “அனுமதி வாங்காமலே திறந்துட்டாங்க...” என்றார், அந்தோணிசாமி.“என்னத்தை பா...” என கேட்டார், அன்வர்பாய்.“திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 6 கோடி ரூபாய்ல வணிக வளாகம் கட்டியிருக்காங்க... இதை, துணை முதல்வர் உதயநிதி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா சமீபத்துல திறந்து வச்சாருங்க...“ஆனா, இந்த கட்டடத்துக்கு, நகர ஊரமைப்பு துறையின், 'அப்ரூவல்' வாங்கலைங்க... கட்டடத்தை திறந்த பிறகு, அப்ரூவல் கேட்டு பேரூராட்சி நிர்வாகம் விண்ணப்பம் போட்டிருக்குதுங்க...“ஆனா, 'கட்டுமான பணிகள்ல சில விதிமுறைகள் பின்பற்றப்படலை'ன்னு சொல்லி, விண்ணப்பத்தை நகர ஊரமைப்பு துறை நிராகரிச்சிடுச்சுங்க...“இதனால, கட்டடத்தின் முகப்பு பகுதியில் சில படிக்கட்டுகளை இடிச்சு, சில மாற்றங்களை செய்யணுமாம்... 'இந்த விதிமுறைகள் கூட தெரியாம, எப்படி கட்டடத்தை கட்டினாங்க'ன்னு கவுன்சிலர்கள் எல்லாம் கேட்கிறாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை நிறைவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 06, 2025 22:42

ஐடியா பண்ணிதான் உதயநிதியை வைத்து திறந்து வைத்திருக்காங்க.Reject ஆன Plan application form மீண்டும் உயிர்பெற்று, விதிமீறல்கள் விலக்காகும்.


duruvasar
ஜன 06, 2025 11:25

உதயநிதிக்கு இது மட்டும்தான் தெரியாது மற்ற எல்லா விஷயங்களையும் கரைத்து குடித்தவர் என சொல்லவாறீங்களா.


Yes your honor
ஜன 06, 2025 12:20

சொல்லவில்லையே?...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை