உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவரா?

போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவரா?

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''வழக்கு இருந்தும், பதவி உயர்வு குடுத்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''யாருக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊர் நல அலுவலரா ஒரு பெண் இருந்தாங்க... சமீபத்துல, இவங்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலரா பதவி உயர்வு குடுத்தாங்க...''பொதுவா, ஒருத்தருக்கு பதவி உயர்வு வழங்குறப்ப, அவர் மேல ஏதாவது புகார்கள், வழக்குகள் நிலுவையில இருந்தா, அவங்களுக்கு அடுத்த நிலையில இருக்கிறவருக்கு தான் பதவி உயர்வு தரணும்...''ஆனாலும், பெண் அதிகாரி, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிக்கு வேண்டியவங்க என்பதால, நிபந்தனைகளுடன் பதவி உயர்வு குடுத்துட்டாங்க... இது, ஊரக வளர்ச்சி துறைக்குள்ள புகைச்சலை ஏற்படுத்தி இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''பார்வதி மேடம், சாயந்தரமா பேசுறேன்...'' என, மொபைல் போனை வைத்தபடியே வந்த அன்வர்பாய், ''வசூல்ல தான் குறியா இருக்காரு பா...'' என்றார்.''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''துாத்துக்குடி சிட்டியில், போக்குவரத்து போலீஸ் அதிகாரியா இருக்கிறவரை தான் சொல்றேன்... இவர் எஸ்.ஐ.,யா சேர்ந்தது முதலே, துாத்துக்குடி சிட்டிக்குள்ளயே தான் டியூட்டி பார்க்கிறாரு பா...''உயர் அதிகாரிகள் மற்றும் ஜாதி பலம் இருக்கிறதால, துாத்துக்குடியில போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இவரை விட்டா ஆளே இல்லைங்கிற மாதிரியான பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்காரு... போதாக்குறைக்கு உள்ளூர் அமைச்சரின் ஆதரவும் இருக்கிறதால, வசூல்ல புகுந்து விளையாடுறாரு பா...''சிட்டிக்குள்ள, 'பீக் ஹவர்' நேரங்கள்ல கனரக வாகனங்கள் வந்து போறதை கண்டுக்காம இருக்க, 'கட்டிங்' வாங்கிடுறாரு... சமீபத்துல, ஷேர் ஆட்டோ டிரைவர்களிடம் மாமூல் கேட்க, அவங்க தர மறுத்துட்டாங்க பா...''உடனே, எல்லாருக்கும் 2,500 ரூபாய் பைன் போட்டுட்டு, 'எப்படி தொழில் பண்றீங்கன்னு பார்க்கலாம்'னு மிரட்டியிருக்காரு... இவரை கண்டிச்சு போராட்டத்துல இறங்க ஆட்டோ டிரைவர்கள் தயாராகிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''பெருமாளுக்கு உட்கார இடம் குடுங்கோ...'' என்ற குப்பண்ணாவே, ''என்கிட்டயும் ஒரு போலீஸ் தகவல் இருக்கு ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...''தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீசை ஆரம்பிச்சப்ப, சென்னையில் இருந்தும், செங்கல்பட்டில் இருந்தும், 20க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களை பிரிச்சு குடுத்தா... ஒரே ஸ்டேஷன்ல இருக்கற இன்ஸ்பெக்டரை, ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை மாத்தறது வழக்கம் ஓய்...''ஆனா, தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் கட்டுப்பாட்டுல வர்ற சென்னை புறநகர்ல இருக்கற அஞ்சாறு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், மூணு வருஷம் தாண்டியும் அதே இடத்துல நீடிக்கறா... அதே மாதிரி, மதுவிலக்கு, விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் பல வருஷங்களா எங்கயும் மாறாம, மாமூல் மழையில குளிக்கறா ஓய்...''இன்னும் சில ஸ்டேஷன்கள், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களே இல்லாமலும் இயங்கறது... 'புறநகர் பகுதியில் குற்றங்களை குறைக்க கூண்டோடு இடமாறுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்'னு நேர்மையான போலீசார் எல்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 17, 2025 06:23

நீங்க ஒண்ணு இந்த ஆட்சியில கைதாகி சிறை சென்று ஜாமீனில் உள்ளவரையே பதவியில் சேர்த்திருக்கும்போது இந்த அம்மா மட்டும் புகார்களுடனே பதவி உயர்வு பெறக்கூடாதா?


புதிய வீடியோ