''மறுபடியும் 'சீட்' கிடைக்குமான்னு பட்டிமன்றம் நடக்குல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருச்சி ஸ்ரீரங்கம், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி... கரூர் மாவட்டத்துல கல் குவாரி தொழில் நடத்துதாரு... இந்த தொழில்ல சில பிரச்னைகள் வந்தப்ப, மாவட்ட அமைச்சர் நேரு, தனக்கு கெடுதல் பண்ணிட்டதா பகிரங்கமாவே குற்றம் சாட்டினாரு வே...''இதனால, கரூர் மாவட்ட தி.மு.க., செயலரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பழனியாண்டி குவாரிக்கு தேவையான உதவிகளை செய்து, தன் ஆதரவாளரா அவரை மாத்திட்டாரு வே...''இந்த சூழல்ல, 'வர்ற சட்டசபை தேர்தல்ல பழனியாண்டிக்கு மறுபடியும் சீட் குடுக்க, நேரு தடை போடுவார்'னு ஒரு தரப்பும், 'செந்தில் பாலாஜி, முதல்வரிடம் தன் செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்கி குடுத்துடுவார்'னு இன்னொரு தரப்பும் சொல்லுது வே...''இதுக்கு இடையில, பழனியாண்டிக்கு சீட் தராம போனா, முன்னாடி ஸ்ரீரங்கத்துல, ஜெ.,யை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த், ஒன்றிய செயலர் கருப்பையா ஆகியோர், தங்களுக்கு சீட் கிடைக்குமான்னு காத்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.''பாதுகாப்பு படை கப்பல்ல, குடும்ப சுற்றுலா போயிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''யாருப்பா அது...'' எனக் கேட்
டார் அன்வர்பாய்.''ராமநாதபுரத்தில், போலீஸ் அதிகாரியா இருக்கிறவரை தான் சொல்றேன்... இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய, 'ஹோவர்கிராப்ட்' ரோந்து கப்பல்ல சமீபத்துல தன் மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சுற்றுலா போயிருக்காருங்க...''இதை பார்த்துட்டு, 'பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்துற கப்பலை, போலீஸ் அதிகாரியே உல்லாச டூருக்கு பயன்படுத்தினா, அவருக்கு கீழ இருக்கும் அதிகாரிகள், கடமையை மீறினா அவரால எப்படி கண்டிக்க முடியும்'னு நேர்மையான போலீசார் எல்லாம் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மூர்த்தி சின்னதா இருந்தாலும், கீர்த்தி பெருசுன்னு சொல்லுங்கோ...'' என்ற குப்பண்ணாவே, ''அண்ணனுக்கு மறுபடியும் பதவி கிடைச்சிடும்னு சொல்றா ஓய்...'' என்றார்.''எந்த கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழா, சமீபத்துல சென்னை கலைவாணர் அரங்கத்துல நடந்துது... இந்த விழாவுல, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் பொன்முடியும் கலந்துண்டார் ஓய்...''விழாவுல, முதல்வர் ஸ்டாலின் பக்கத்துல, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உட்கார்ந்திருந்தார்... விழா முடிஞ்சு அரங்கத்துல இருந்து படியிறங்கறச்சே, முதுமையால மெதுவா நடந்த வைகோவின் கையை, முதல்வர் கெட்டியா பிடிச்சு, உதவினார் ஓய்...''அவரை கார் ஏற்றி அனுப்பிட்டு, முதல்வர் கார்ல ஏறி உட்காரவும், பக்கத்துல நின்னுட்டு இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியும், பட்டுன்னு முதல்வருடன் கார்ல ஏறி உட்கார்ந்துண்டார் ஓய்...''இதை பார்த்த, அவரது ஆதரவாளர்கள், 'முதல்வர் கார்ல அண்ணனுக்கு இடம் கிடைச்சிடுத்து... அடுத்து, கட்சி பதவியும் கிடைச்சிடும் பாருங்க'ன்னு தங்களுக்குள்ள பேசிண்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.