தலையின்றி உயிர் வாழ்ந்த சேவல்!
அமெரிக்காவின் கொலராடோ மாநிலம், ப்ரூடா நகரை சேர்ந்த, லாய்டு ஆல்சன் என்ற விவசாயி, 1945, செப்., 10ல், இறைச்சிக்காக கோழிகளை வெட்டினார். அப்போது, இளம் சேவலின் கழுத்தை வெட்ட, தலை துண்டாகி தரையில் விழுந்தது. ஆனால் அதிசயமாக, தலையில்லாத உடல் துள்ளி எழுந்து, அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. ஆச்சரியத்தில் உறைந்த விவசாயி, அந்த சேவலை ஒரு பெட்டியில் அடைத்து வைத்தார். 'காலையில் செத்து விடும்...' என நினைத்து, துாங்கினார். ஆனால், மறுநாள் காலையும், சேவல் உயிரோடு இருந்தது. இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவ, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து வியந்தனர். உட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அந்த சேவலை ஆய்வு செய்தனர்; அதற்கு 'மைக்' என பெயர் சூட்டினர். 'சேவல் மூளையின், 80 சதவீதத்தை கத்தி சேதப்படுத்தினாலும், மூளைத்தண்டு பாதுகாப்பாக இருந்ததால் சுவாசம், இதயத்துடிப்பு, நடை எல்லாம் தொடரும்...' என்றனர். அதன் கழுத்தில் ஏற்பட்ட ரத்தக் கட்டி, அதிக ரத்தப்போக்கைத் தடுத்தது. சேவலுக்கு திரவ உணவை, உணவுக்குழாயில் செலுத்தி வந்தனர். 1947, மார்ச் வரை, 18 மாதங்கள், மைக் உயிர் வாழ்ந்தது. இன்றும் அந்த சேவல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், ப்ரூடாவில், தலை இல்லா சேவல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. -- நர்மதா விஜயன்