உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

உரிமையும் மனிதனும்!சம உரிமையையும், சுதந்திரத்தையும் மதித்து ஒழுகுவதே மனித உரிமையின் அடிப்படை.மனித உரிமை என்ற சொல், 1766-ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தின் போது தீவிரமாக பரவியது. ஆனால், தமிழகத்தில் பண்டைகாலத்திலே இந்த கருத்து வரையறுக்கப்பட்டு இருந்தது. சங்க இலக்கிய நுாலான புறநானுாற்றில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, புலவர் கணியன் பூங்குன்றனார் பாடியுள்ளார். ஐரோப்பாவில், பிரெஞ்சு புரட்சியின் விளைவாக, 1789-ல் குடிமக்கள் உரிமைப் பிரகடனம் உருவானது. இது, மனித உரிமை வரலாற்றில், முதல் தடம் என, மதிக்கப்படுகிறது. இரண்டு உலகப் போர்களிலும் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். இது போன்ற அழிவை முடிவுக்கு கொண்டு வர, ஐக்கிய நாடுகள் சபை முயற்சி எடுத்தது. மனித உரிமைகள் தொடர்பான, உலகளாவிய உறுதி மொழியை உருவாக்க முடிவு செய்து, ஜூன் 21, 1946-ல் ஒரு குழுவை அமைத்தது. குழு தலைவராக அப்போதைய அமரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் மனைவி எலியனார் நியமிக்கப்பட்டார். இவரது வழிகாட்டுதல்படி, எட்டு பேர் கொண்ட குழு, மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்கி, 1948-ல் ஐ.நா.,பொதுசபையில் சமர்ப்பித்தது. ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அந்த அறிக்கையை ஆய்வு செய்தனர். பெரும் விவாதம் நடந்தது. வகுத்திருந்த விதிகள், அனைத்து நாட்டு மக்களுக்கும் ஏற்புடையதா என, ஓட்டெடுப்பு நடத்தி கருத்து அறியப்பட்டது. இறுதியில், ஐ.நா., பொதுச்சபை, டிசம்பர் 10, 1948-ல் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. இதையடுத்து, ஆண்டு தோறும், டிசம்பர் 10-ந் தேதி, மனித உரிமை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த பிரகடனம், 30 பிரிவுகளை உள்ளடக்கியது. அதில், தனி மனிதனுக்குப் பல உரிமைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. முதல் இரு பிரிவுகள், உலகில் அனைத்து மனிதர்களும் சுதந்திரமும், சம உரிமையும் பெற்றவர்கள் என்கிறது.இனம், நிறம், பால், மொழி, அரசியல் வேறுபாடின்றி, உரிமையுடன் வாழ, அனைவருக்கும் தகுதி உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இந்த பிரகடனம், உலகில், 250 மொழிகளில் பெயர்க்கப்பட்டு உள்ளது.மனித உரிமையை நிலைநாட்டும் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு, 1968 முதல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விருது வழங்கி கவுரவித்து வருகிறது ஐக்கியநாடுகள் சபை. நம் நாட்டை சேர்ந்த, சமூக சேவகர் பாபா ஆம்தேக்கு, 1988ல் அந்த விருது கிடைத்தது.கல்கோடரி!மனித பரிணாம வளர்ச்சியில் ஒன்றுதான், 'மோமோ எரடக்ஸ்' எனப்படும் வேட்டை நாகரிகம். இந்த வளர்ச்சி யுகத்தில் ஆப்பிரிக்கா, ஆசிய, ஐரோப்பா கண்டங்களில் வாழ்ந்த மனித இனம், கல் கோடரிகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளது.சிக்கிமுக்கி கற்களை, முக்கோண வடிவில் செதுக்கி, வசதியாக கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்கோடரியின் ஓரம், கரடுமுரடாகவும், கூரியமுனையுடனும் இருந்தது. சகல பணிகளுக்கும் பொது ஆயுதமாக, இதையே பயன்படுத்தியது மனித இனம். வேட்டையாடிய மிருகத்தின் தோலை உரிக்க, மீன், மரங்களை வெட்ட என, பயன்பட்டது. கி.மு.3500-ல், கல்கோடரியில் சிறு மாற்றம் ஏற்பட்டது. பற்றிக்கொள்ள வசதியாக கைப்பிடி இணைப்புடன் உருவானது. இதன் மூலம், விசையை பயன்படுத்த வசதி அதிகமானது. சக்தியை குறவைாக செலவிட்டு, அதிக பணிகளை செய்ய முடிந்தது. நிலத்தை பண்படுத்தி, பயிரிடத் தொடங்கிய காலத்தில், இக்கோடரி முக்கியத்துவம் பெற்றது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !