உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

சாமிக்கு உணவு!உயிரினங்களை தொல்லையாக நினைப்பவர்களும் உண்டு. கருணை பொங்க, குரங்கு போன்ற காட்டு விலங்குகளுக்கு உணவு தருவோரும் உண்டு. உண்மையில், இவ்விரு வகையினரால் தான், உலகில் உயிரினங்களுக்கு பெரும் அவதி ஏற்படுகிறது. இவ்வுலகு பல்லுயிரினங்களுக்கும் சொந்தமானது. உணவை தேடிக் கொள்ள சகல உரிமையும் உயிரினங்களுக்கு உண்டு. அதில் குறிக்கிடுவதுதான் அவதியில் முடிகிறது.குரங்குக்கு, மனிதர் தரும் தொல்லைகள் குறித்து பார்ப்போம்...தானம் கொடுப்பதாக எண்ணி, குரங்குகளுக்கு சமைத்த உணவு கொடுப்பர் பலர். சுவையூட்டிகள் கலந்த உணவை, ஒருமுறை கொடுத்து பழக்கிவிட்டால், அதே வகையையே மீண்டும் உண்ண விரும்பும். இதனால், இயல்பாக உணவு தேடுவதை தவிர்க்கும். மனித குடியிருப்பு பகுதிகளிலும், சுற்றுலா பயணியர் வரும் இடங்களிலும் உணவுக்காக தங்கிவிடும். ஊருக்குள் புகுந்து, வீடு, கோவில், கடைகளில் தின்பண்டங்களை பிடுங்கி செல்லும். மனிதர்களுக்கு பெரும் தொந்தரவு தரும் வகையில் மாறிவிடுகின்றன. மனிதர்கள் தரும் சமைத்த உணவால், குரங்குகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.மனிதர்கள் கொடுக்கும் உணவுக்காக, குடியிருப்புகளிலே சுற்ற ஆரம்பிக்கும். அவற்றை பிடித்து, வேறு இடத்தில் விட முயற்சித்தாலும் பிரச்னை தீராது. புதிய இடத்தில் குடியிருப்புகளில் புகுந்து, மீண்டும் தொந்தரவு தரும். இடமாற்றம் செய்யும்போது, குரங்குகள் இறக்கவும் நேரும்.நீண்டநாட்கள் நகரில் சுற்றும் குரங்குகளைப் பிடித்து, காட்டு பகுதியில் விட்டாலும் ஆபத்து உண்டு. இவற்றுக்கு உள்ள நோய்கள், காட்டில் மற்ற உயிரினங்களுக்கும் பரவி, புதிய பாதிப்பை ஏற்படுத்தும். காட்டுப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுடன் சண்டை ஏற்பட்டு, உயிரிழப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.காட்டில் வாழும் உயிரினங்கள், இயல்பாக உணவு தேடிக்கொள்ள அனுமதிப்போம். வண்ண ஜாலம்!வானம், ஆச்சர்யங்களின் மேடையாக உள்ளது. அதில் அலங்காரங்கள் ஏராளம். அதில் ஒன்று வானவில். இது தோன்ற மழை மட்டும் காரணம் இல்லை. பனி மூட்டம், காற்றில் படர்ந்திருக்கும் கண்ணுக்கு புலப்படாத துாசு மற்றும் நீர்த்துளி ஆகியவற்றாலும் வானவில் தோன்றுகிறது.நம் கண்ணுக்கு புலப்படுவதுபோல, அரைவட்டமாக இருக்காது வானவில். முழு வட்ட வடிவில்தான் இருக்கும். காற்று மண்டலத்தின் மேற்பகுதியில் அரை வட்ட வானவில் மட்டும், கண்களுக்கு புலப்படும். வண்ணமிகு வானவில்லை தொட்டு பார்க்க முடியுமா...உண்மையில், அது ஒரு பொருள் அல்ல; கானல் நீர் போன்றது.வானத்து நீர்த்துளிகளில் சூரியஒளி ஊடுருவி, சிதறும் நிகழ்வே வானவில்லாக காட்சி தரும். குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால் மட்டுமே கண்களுக்கு புலப்படும். அதனால் தான் சில நேரங்களில் பக்கத்தில் நிற்பவர் கண்களுக்கு கூட அது தெரிவதில்லை.இரண்டுவகை வானவில் உண்டு. முதல்வகை வானவில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும். இரண்டாம் வகையில் இந்த வண்ணங்களின் அமைப்பு தலைகீழாக இருக்கும்.அடுத்தமுறை பார்க்கும் போது, அது என்ன வகை வானவில் என கணிக்க முயற்சியுங்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !