அதிமேதாவி அங்குராசு!
அழகு தரும் ஆரோக்கிய செடிகள்!வீட்டை வசதியுள்ளதாக கட்டுவதுடன், உள் அலங்காரம் செய்வதும் அவசியம். அப்போது தான், முழு அழகு கிடைக்கும். வீட்டை அலங்கரிக்க புதிய சிந்தனை இருந்தால் போதும். கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர், வீட்டருகே தோட்டம் அமைக்க முடியாது. அதனால், வீட்டின் உள்ளறைகளில் செடி, கொடிகளை வளர்த்து அழகு படுத்தலாம். அவை அறைகளில் அழகை தருவதுடன், காற்றை துாய்மையாக வைத்திருக்கும்.வீட்டுத் தோட்டம் அமைப்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் நலத்தில் குறைபாடுள்ளோர் தங்கியிருக்கும் அறையில் செடி, கொடிகள் வளர்த்தால் வெகு சீக்கிரமே குணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நோயை விரட்டி, ஆரோக்கியம் காப்பதில் செடிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ரத்த அழுத்தம், குறைந்த இதயத் துடிப்பு, சோர்வு, பதற்றம், தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு, மன சோர்வை குணமாக்க உதவுகின்றன. அலைபேசி, கணினி, 'டிவி' கருவிகளில், அதிக ஒளியுடன் காட்சிகளை பார்ப்பவர்கள், விரைவில் சோர்வடைந்துவிடுவர். அதை போக்க, அவ்வப்போது பசுமை மிக்க இயற்கை அழகை ரசிக்க வேண்டும். சோர்வடைந்த கண்களுக்கு அது புத்துணர்வை தரும்.செடி வளர்ப்பதால், வீட்டில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை தீரும். சளி, தொண்டை தொற்று, வறட்டு இருமல் போன்ற பிரச்னைகள் வராது. வீட்டின் உட்புறத்தை அழகுப்படுத்தும் செடிகள் குறித்து பார்ப்போம்...சிலந்தி செடி: நச்சுத்தன்மை உள்ள வாயுக்களை நீக்குவதில் சிலந்தி செடி முக்கிய பங்காற்றுகிறது. சிலந்தி போல வடிவம் கொண்டிருப்பதால், இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் சின்னஞ்சிறு வெள்ளை பூ அழகு மிகுந்தது. இதை வளர்க்க அதிக நீர் தேவையில்லை. எளிதில் வாடியும் போகாது. எப்போதும் பசுமையாக காட்சி தரும்.பாம்பு செடி: காற்றை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு வகிப்பது பாம்பு செடிகள். பாம்பின் தோலைப் போல தோற்றம் அளிப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இது வளர்வதற்கு குறைந்த வெளிச்சமும், நிலையான ஈரப்பதமும் போதுமானது.அழகு பனை: அறைகளில் சில செடிகளை வளர்ப்பது துாய்மையாக வைத்திருக்க உதவும். அவற்றில் முதலிடத்தில் இருப்பது பனைக் குடும்ப செடிகள். இதன் இலை அமைப்பு வலுவாக இருக்கும்; எளிதில் வாடாமல், 'பளிச்' என்று காணப்படும். காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, பென்சீன் மற்றும் பார்மால்டிகைடு போன்ற நச்சுகளை கவர்ந்து, வீட்டுக்குள் காற்றை சுத்தமாக வைத்திருக்க உதவும். இந்த செடிகளை வீட்டின் உள்ளறைகளில் சுலபமாக வளர்க்கலாம்.பால்கனியில் அழகு சேர்க்கும் செடி வகைகள் பற்றி பார்ப்போம்...லெமன் க்ராஸ்: இது, கொசுகளை வீட்டில் அனுமதிக்காது. இதன் நீண்ட இலையைக் கசக்கி சுவாசித்தால், எலுமிச்சை பழம் வாசம் வீசும். இந்த நறுமணம் கொசுகளை விரட்டும். இதன் இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.மிண்ட் துளசி: கடைகளில் கிடைக்கும் ஹால்ஸ், மிண்ட், சூவிங் கம் போல், இந்தச் செடியின் இலை சுவை தரும். சளி, இருமல் பிரச்னைக்கு சிறந்த நிவாரணி.கற்றாழை: இதன் உள்ளிருக்கும் சதை பகுதியை முகத்தில் பூசி வர பரு, வடு மறைந்து, பொலிவு பெறும். மோருடன் கற்றாழை ஜெல் கலந்து குடித்தால், பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகள் தீரும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.