அதிமேதாவி அங்குராசு!
ஸ்கூபா டைவிங்!காற்றுப் பையை முதுகில் சுமந்து ஆழ்கடலில் நீந்தும் சாகச விளையாட்டை குறிப்பது, ஸ்கூபா டைவிங். உலகம் முழுதும் கடற்பகுதிகளில் இதற்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நம் நாட்டில் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல், அரபிக்கடல் பகுதியில் அரிய வகை கடல் உயிரினங்களை ரசிக்கும் வகையில் கூபா டைவிங் மையங்கள் உள்ளன. ஆழ்கடலில் நீந்தும் போது சுவாசிக்க உதவும், ஆக்சிஜன் சிலிண்டர், நீருக்கடியில் நீந்த வசதியாக கவச உடை உள்ளிட்டவை இந்த மையங்களில் வழங்கப்படும். அவற்றை பயன்படுத்தி, ஆழ்கடலில் நீந்தி, உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஸ்கூபா டைவிங் செய்வோருக்கு உரிய உடல் தகுதி இருக்க வேண்டும். இதை மருத்துவ சான்று கொடுத்து நிரூபிக்க வேண்டும். அப்போது தான், இந்த சாகச விளையாட்டில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.மட்டை மந்திரவாதி!இந்திய அரசின் உயரிய கவுரவங்களில் ஒன்றான பத்மபூஷன் விருது வென்றவர் தயான் சந்த் சிங். இந்திய ஹாக்கி அணியின் கதாநாயகனாக திகழ்ந்தார். உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில், ஆகஸ்ட் 29, 1905ல் பிறந்தார். ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி தங்கப்பதக்கங்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார். ஐரோப்பிய நாடான ஜெர்மனி, பெர்லின் நகரில், 1936ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதற்கு காரணமாக இருந்தார் தயான். இவரது ஆட்டம் கண்டு ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் வியந்தார். தயான் பயன்படுத்திய ஹாக்கி மட்டையை உடைத்து, வேறு மட்டை கொடுத்து விளையாடச் சொன்னாராம் ஹிட்லர். அப்போதும் விளையாட்டில் தனி முத்திரை பதித்தார் தயான். இதை அடுத்து, தனியாக சந்திக்க அழைத்தார் ஹிட்லர். அதை ஏற்று சென்ற தயானிடம், 'என் நாட்டிற்காக நீங்கள் விளையாட வேண்டும். அதற்கு பரிசாக ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி தருகிறேன்...' என்று கூறினார், ஹிட்லர். அதை ஏற்க மறுத்து, நாட்டுப்பற்றில் உறுதியாக இருந்தார்.ஹாக்கி மந்திரவாதி என்றே அவரை குறிப்பிடுகின்றனர். தயான் பிறந்த நாள், தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சிறுதானியங்கள்!சிறுதானியம் மற்றும் பயிறு வகைகள், உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில், பெரும்பாலானவை குறுகிய காலத்தில் விளைகின்றன. உளுந்து போன்ற சில தானியங்கள், 60 நாளில் அறுவடைக்கு வரும்.ஒவ்வொரு சிறுதானியமும், தனித்த மணம், குணம், சுவை, சத்து மற்றும் அளவை கொண்டுள்ளன. பெரும்பாலானவற்றில், 15 சதவீதம் புரதமும், அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளன. இவற்றில் அதிகம் உள்ள, 'வைட்டமின் - பி' சத்து, ரத்தத்தில், 'ஹோமோசைஸ்டீன்' அளவை குறைக்கிறது. இதனால், உடலில் கொழுப்புக் கட்டி உருவாவது தடுக்கப்படுகிறது. நல்ல கொழுப்பு அளவை, ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது, சிறுதானிய உணவு. ரத்த நாளங்களில் தடிப்பு மற்றும் ரத்தக் கசிவு ஏற்படுவதை தடுத்து இதயத்தை காக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினமும் ஒருவேளை சிறுதானிய உணவை சேர்த்துக் கொள்ளலாம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு