அதிமேதாவி அங்குராசு!
சிக்கரி!காலையில் எழுந்து, பல் துலக்கியதும் காபி குடித்தால் தான் சிலருக்கு வேலையே ஓடும். காபி இல்லாவிட்டால், எதையோ இழந்ததை போல தவித்துப் போய் விடுவர். நாள் முழுதும் பதற்றத்துடன் காணப்படுவர். அன்றாடம் காபி குடித்து பழகியவர் தேநீர் உட்பட, எந்த சத்து பானத்தையும் விரும்புவதில்லை. காபிக்கு அடிமை என்றே சொல்லலாம்.காபி துாளில் சிக்கரி கலந்து, பில்டரில் இறக்கி குடிப்பது ஒரு வித ரசனை. சிக்கரி சேர்க்காமல், பில்டர் காபியை மட்டும் தனியாக குடிப்போரும் உண்டு.சிக்கரி என்ற செடியின் வேர் பாகம் தான் காபி என்ற பானத்துக்கு தனிச்சுவை ஊட்டுகிறது. உடலுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நறுமணத்துடன் அமைகிறது. இதன் சுவை அலாதியானது. குழந்தை முதல் அனைவரும் விரும்புவர். இதை பருகுவதால் ஆயுள் அதிகரிக்கும். இதயம், ரத்த குழாய், நரம்பு, குடல், இரைப்பை, கல்லீரல் போன்ற உறுப்புகள் நன்றாக வேலை செய்ய உதவும்.நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை சேர்க்காத சிக்கரியை பானமாக பருகலாம். பருகிய, 10 மணி நேரத்தில் மலத்தை இளக்கும். சீரணமாகாத உணவுப் பொருட்களை மிகச் சுலபமாக வெளியேற்றும்.சிக்கரியில் கஷாயம் செய்து சாப்பிட்டால், கல்லீரல் நன்றாக வேலை செய்யும். ரத்தத்தை சுத்தமாக்கும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். சரும நோய்கள் குணமாகும்; வாத நோய், தலைவலி, தொண்டை எரிச்சல் போன்ற உபாதைகள் குணமாகும். பெண்களுக்கு மாத விலக்கில் பிரச்னை இருந்தால் தீர்த்து வைக்கும்.அருமருந்தான சிக்கரியை சீரான அளவில் அருந்தி நலம் காப்போம்.முத்தான முந்திரி!உண்பதற்கு சுவையானது முந்திரி பழம். அழகிய வண்ணங்களுடன் காட்சி அளிக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும்.முந்திரி பருப்பில், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம சத்துக்கள் அதிகம் உள்ளன. சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில், உடலுக்கு தேவையான, 'பைட்டோ கெமிக்கல்' என்ற வேதிப்பொருள் அதிக அளவில் உள்ளது. இதயத்திற்கு நன்மை தரும், 'ஒலியிக்' மற்றும் 'பால்மிட்டோலெயிக்' அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு தீமை விளைவிக்கும் கொழுப்பை குறைக்கும். இதயநோயை தடுக்கும் என, ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.முந்திரியில் உள்ள மெக்னீஷியம் சத்து, எலும்புகள் வலுவடைய உதவுகிறது. இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால் உயர் ரத்தம் அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி பாதிப்புகள் வர வாய்ப்பு உண்டு. உடல் சோர்வுடன் காணப்படும். முந்திரியை அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணுவோம்!- என்றென்றும் அன்புடன், அங்குராசு.