காசு கொடுத்து வாங்குங்க!
ஒரு சமயம் நீதிமானாகிய நவுஷேர்வான் மன்னன், தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். காட்டில் மாமிசத்தை வதக்கிச் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கைவசம் உப்பு இல்லாததால், பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் போய் யாரிடமாவது உப்பு வாங்கி வரும்படி ஒரு ஆளை அனுப்பினான் அரசன்.''நீ வாங்கும் உப்புக்கு விலை கொடுத்துவிடு. இல்லையென்றால் இலவசமாக உப்பு வாங்குவது என்பது வழக்கமாகி விடும். அதன் விளைவாகக் கிராமமே நாசமாகிவிடும்!'' என்றான் அரசன்.''கேவலம் உப்புத்தானே? இப்பொருளை இலவசமாக வாங்குவதால் கிராமத்துக்கு என்ன கெடுதல் நேர்ந்து விடும்?'' என்று அருகில் இருந்தவர்கள் கேட்டனர்.அதற்கு மன்னன் சொன்னான், ''அரசன் தன் குடி மக்களில் ஒருவனுடைய தோட்டத்தில் ஆப்பிளைப் பறித்துத் தின்றால், அவனுடைய பணியாட்கள் அவனுக்காக அந்த ஆப்பிள் மரத்தையே வேரோடு சாய்ப்பர். ஐந்து முட்டைகளைக் கொண்டு வருவதற்கு அனுமதித்தால், படைவீரர்கள் ஆயிரம் கோழிகளைக் கொன்று சட்டியில் வைப்பர். உலகத்தில் கொடுமை என்பது முதலில் மிகவும் சிறியதாகத்தான் ஆரம்பமாயிற்று. அப்புறம் பரம்பரை பரம்பரையாக வந்தவர்கள் இன்றுள்ள பிரமாண்டமான அளவுக்கு அதைப் பெரிதாக்கி விட்டனர் எனவே, காசு கொடுத்து வாங்க சொன்னால் அனாவசியமாக வாங்கமாட்டார்கள் அல்லவா?''என்றான் மன்னன்.***