கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேக்தான். இதோ, சில 'கேக்' செய்முறைகள்.செர்ரி கேக்!தேவையானவை: வெண்ணெய்-100 கிராம், சர்க்கரை-100 கிராம், பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி, முட்டை-2, செர்ரி-150 கிராம், பால்-2 தேக்கரண்டி, மைதா-200 கிராம், கொஞ்சம் பொடியாக நறுக்கிய எலுமிச்சம் பழத்தோல்.செய்முறை: மைதா மாவையும், பேக்கிங் பவுடரையும் சலிக்கவும். வெண்ணெய், சர்க்கரை, எலுமிச்சம் பழத்தோல் சேர்த்துக் கடையவும். இதனுடன் கடைந்த முட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மூன்றில் ஒரு பங்கு மாவை இக்கலவையுடன் சேர்க்கவும். கொட்டை நீக்கிய செர்ரியை பாதியாக நறுக்கி கொஞ்சம் மாவில் புரட்டி தனியாக வைக்கவும். பின் மீதி மாவையும், கலவையுடன் பால் சேர்த்துக் கலக்கவும். முடிவில் செர்ரி கலந்த மாவைச் சேர்க்கவும். எண்ணெய் தடவிய கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும். சூடாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த செர்ரி கேக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். ராக் கேக்!தேவையானவை: வெண்ணைய்-125 கிராம், பேக்கிங் பவுடர்-2 தேக்கரண்டி, சர்க்கரை-125 கிராம், மைதா மாவு-250 கிராம், முட்டை-2, ப்ளம்ஸ்-50 கிராம் வெனிலா எசன்ஸ் சிறிது.செய்முறை: வெண்ணெயையும், சர்க்கரையும் நன்கு கலக்கவும். முட்டையை நன்கு அடித்து வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சலித்து, பாதி மாவை வெண்ணையைக் கலவையுடன் வைக்கவும். ப்ளம்ஸ் எசன்ஸ் கலந்து மீதமுள்ள மாவையும் கலந்து விடவும். ஒரு பிஸ்கெட் ட்ரேயில் வெண்ணெய் தடவி இந்தக் கலவையை குவியல் குவியலாக தேக்கரண்டி கொண்டு, ஊற்றி கேக் அடுப்பில் வேக வைக்கவும். இதோ சூடான ராக் கேக் தயார்.வெல்லக் கேக்!தேவையானவை: ரவை-500 கிராம், முட்டை-6, துருவிய வெல்லம்-500 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால்-2 கப், சர்க்கரை - 250 கிராம், பன்னீர்-3, தேக்கரண்டி, வெண்ணெய்-250 கிராம், முந்திரிப்பருப்பு - 250 கிராம், எசன்ஸ்-சிறிது.செய்முறை: பாதி முந்திரிப் பருப்பை பொடியாக்கிக் கொள்ளவும். மற்ற பாதியை நைய நொறுங்கத் தட்டிக் கொள்ளவும். ரவையை வறுத்து அது சூடாக இருக்கும் போதே வெண்ணையைக் கலந்து தனியே வைக்கவும். முட்டையின் மஞ்சள் கருவையும், சர்க்கரையை, நன்கு அடித்து ரவைக் கலவையில் வெல்லம் சேர்த்துக் கலக்கவும். பருப்பு, எசன்ஸ் கலக்கவும். வெள்ளைக் கருவை நன்கு நுரை பொங்க அடித்து கேக் மாவுடன் கலக்கவும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து நெய் தடவிய கேக் பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.