நிறம் மாறும் நிஜங்கள்! (2)
''சொல்லுங்க பிரதர்... என்ன கண்டிஷன்!''''நான் சொன்னபடி பணத்தை இதோ... இப்போதே கொடுத்து விடுகிறேன். ஆனால், இந்த ஆஸ்பத்திரிக்கு என் அப்பா பெயரைத்தான் வைக்க வேண்டும். என்ன சம்மதமா?'' என்றான்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் டாக்டர்.'ஐயாயிரம் ரூபாய்க்கு இவன் அப்பா பெயர் வைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான். அடுத்தவன் ஆறாயிரம் கொடுக்கிறேன்... என் அம்மா பெயரைத்தான் வைக்க வேண்டும் என்றால்...'''என்ன டாக்டர் யோசனை? நீங்கள் சம்மதிக்காவிட்டால், நான் பணம் தருவதில் அர்த்தம் ஏதுமில்லை?'' என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.இப்படித்தான் எல்லாருமே சுயநல எதிர்பார்ப்போடு பணம் தர முன்வந்தனர்.அதன்பிறகே, என்ன ஆனாலும் சரி, இனி யாரிடமுமே கையேந்தப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர் முருகன். முன்பு போல் இல்லாமல் பணக்காரர்கள் வீட்டிற்கு புறப்படும் முன் தனது கட்டணத்தைப் பேசிக் கொண்டார். ஒரு தடவைக்கு இவ்வளவு பணம் தந்துவிட வேண்டும் என்று பேசினார். தன் அன்றாடச் தேவைகளைக் கூட மிக கணிசமாகக் குறைத்துக்கொண்டு பணத்தைச் சேர்ந்தார்.அவர் கனவு உருவகம் பெறத் தொடங்கியது.நயா பைசா வாங்காமல், அந்தக் கிராமத்து மக்கள் நான், நீ என்று கட்டிட வேலையில் ஒத்தாசை செய்ய முன் வந்தனர்.கட்டடம் எழும்ப, எழும்ப ஊர் பெரிய மனிதர்களுக்கு எல்லாம் உள்ளூற ஒரே புகைச்சல். எப்படியாவது இந்தப் புனித சின்னத்துடன் தங்களை இணைத்துக் கொண்டு விட வேண்டும் என்ற பேராசையில் டாக்டரை அணுகி, ''டாக்டர்! நீங்க நினைத்ததை சாதித்துவிட்டீர்கள். இது என்ன சாமானியமான விஷயமா எப்பேர்ப்பட்ட சாதனை! மருத்துவமனை திறப்புவிழாவுக்கு யாராவது மந்திரியைத்தான் கூப்பிட வேண்டும்... பின்னால் இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த சவுகரியமாக இருக்கும்,'' என்றனர்.ஆனால், டாக்டர் அதற்கெல்லாம் மசியவில்லை. 'இந்த ஏழைக் கும்பல் வியர்வை சிந்தி எழுப்பிய கட்டடத்திற்கு இவர்களே திறப்பு விழாவும் செய்து கொள்வார்கள்' என மிகவும் பணிவாய் சொல்லி மறுத்துவிட்டார்.திறப்பு விழாத் தலைவர், வயதில் மூத்த மங்காத்தா ஆயாதான் என்று டாக்டர் தீர்மானித்து விட்டார். மேடையில் உட்கார்ந்திருந்த ஆயாவிற்கு ஆளுயர மாலை அணிவித்து, ஆயாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்ற டாக்டரை அணைத்தவாறு ''தம்பீ... தம்பீ...'' என்று கண்களில் வடித்தாள் ஆயா.கூட்டத்தின் மகிழ்ச்சி, ஆரவாரம் அடங்க வெகுநேரம் பிடித்தது.அதன்பின் டாக்டரும் அங்கேயே தங்கி விட்டார். வெளிநாட்டு நன்கொடைகள் மூலம், பல நவீன கருவிகளையும், மருந்துகளையும் வாங்கிக் குவித்தார். மிகச் சிறந்த மருத்துவமனையாக தழைத்து ஓங்கச் செய்தார்.கொஞ்சம் கொஞ்சமாய் எல்லா வசதிகளும் பெருக ஆரம்பித்துவிட்டது அந்த கிராமத்தில்.ஒருநாள், டாக்டர் திடீரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டார். முகத்தில் தாங்கொணாத வேதனையின் ரேகை.''என்ன டாக்டர் அய்யா! என்ன பண்ணுது உங்களுக்கு?'' கூட்டமே பரபரத்தது. எழுந்து உட்கார்ந்தா டாக்டர், எல்லாரையும் புன்னகை மாறாமல் ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்தார்.பிறகு, மெதுவாக சொன்னார். ''இதோ... இதே இடத்தில் ஒரு வேப்பங் கன்றை நட்டுவிடுங்கள். நான் என்றுமே அதனடியில் தூங்கத்தான் விரும்புகிறேன்...'' அவர் சொன்ன கடைசி வார்த்தை இதுதான். அப்புறம் மூடிய கண்கள் திறக்கவே இல்லை.அன்றிரவு மங்காத்தா ஆயா அந்த மரத்தடியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.''ராசா! இந்த ஊர்... இந்த ஆஸ்பத்திரி எல்லாம் நீ கட்டினே... ஒட்டுமொத்தமா எங்களை எல்லாம் உன் சொந்த பந்தமா நினைச்சு கட்டிக்காத்தே... அதுக்காக நீ கல்யாணம் கூட பண்ணிக்கலே... உன்னைப் பத்தி பேச, உன் அருமை, பெருமைகளைச் சொல்ல நாங்க நாலஞ்சு பேருதான் இருக்கோம். 'இன்றைக்கு ஓட்டுக் கேட்க வந்த பயலுக என்னம்மா வாய்ப் பந்தல் போட்டு இந்த தலைமுறை மக்களை மயக்கினாங்க பாத்தியா... என் உடம்பு பதறது ராசா! நான் ஒண்டியா உண்மைகளைப் புட்டு வெச்சா அதை இந்த ஆட்டு மந்தைக் கூட்டம் நம்புமா ராசா!' நெஞ்சம் உடைந்து குலுங்கிக் குலுங்கிக் அழுத அவளை மென்மையாய் அந்த வேப்ப மரக்காற்று வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது.- முற்றும்.