சாவு!
அந்தணன் ஒருவன் தன் சீடர்களிடம் வெள்ளாடு ஒன்றைத் தந்தான். ''இந்த வெள்ளாட்டை இறைவனுக்கு இன்று பலி கொடுக்க வேண்டும். இதை ஆற்றிற்கு இழுத்துச் சென்று நீராட்டி மலர் மாலை அணிவித்து, இங்கே கொண்டு வாருங்கள்.'' என்றான்.அந்த ஆட்டிற்குத் தன் பிறவிகளின் நினைவு எல்லாம் அப்போது வந்தது. இன்றோடு தன் துன்பங்கள் எல்லாம் நீங்கப் போகின்றன. விடுதலை அடையப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் தன்னை மறந்து அது கலகலவென்று சிரித்தது.தன்னை அந்த அந்தணன் கொல்லப் போகிறானே. அந்தக் கொடிய பாவத்திற்கு நரகத்தில் துன்பத்தை அனுபவிக்கப் போகிறானே என்று நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதது. ஆடு சிரித்ததையும் அழுததையும் கண்டு வியப்பு அடைந்தான். அந்தணன் வெள்ளாட்டை பார்த்து, ''வெள்ளாடே! ஏன் சிரித்தாய்? ஏன் அழுதாய்?'' என்று கேட்டான்.மனிதக் குரலில் அது ''அந்தணனே! முற்பிறவிகளில் ஒன்றில் நான் உன்னைப் போல அந்தணனாக இருந்தேன். அப்போது ஒரு வெள்ளாட்டைப் பலி கொடுத்தேன். அந்தத் தீவினையின் பயனாக நான் ஐந்நூறு முறை வெள்ளாடாகப் பிறந்தேன். ஒவ்வொரு முறையும் என் தலை வெட்டப்பட்டது. இது என் ஐந்நூறாவது பிறவி, இந்த முறை என் தலை வெட்டப்பட்டால், இனி எனக்குப் பிறவி இல்லை. அதை நினைத்து மகிழ்ச்சியில் என்னை மறந்து சிரித்தேன். என்னைக் கொல்லும் கொடிய பாவத்திற்கு உனக்கு கிடைக்கப் போகும் தண்டனைப் நினைத்து அழுதேன்.'' என்றது.ஆ! ஆட்டைக் கொல்லும் பாவத்திற்கு இவ்வளவு கொடிய தண்டணையா?''வெள்ளாடே! நான் உன்னைக் கொல்ல மாட்டேன்'' என்றான்.''நீ என்னைக் கொன்றாலும் கொல்லா விட்டாலும் இன்று என் உயிர் போவது உறுதி. விதியை யாரால் மாற்ற முடியும்?'' என்றது ஆடு.''எப்படியும் நான் உன்னைக் காப்பாற்றுவேன். விதியின் வலிமையை பார்த்து விடுவோம்.'' என்றான்.''சீடர்களே! நீங்களும் என்னுடன் வாருங்கள்... இந்த ஆட்டை யாரும் கொல்லாதபடி நம் பாதுகாப்போம்,'' என்றான்.எல்லாரும் ஆட்டைப் பின் தொடர்ந்து பாதுகாப்பாகச் சென்றனர்.அருகில் இருந்த குன்றின் மேல் தாவி ஏறிய ஆடு அதன் உச்சியில் இருந்த இலைகளைத் தின்னத் தொடங்கியது.அப்போது இடி ஒன்று பேரோசையுடன் அந்தக் குன்றில் விழுந்தது. சிதறிய பாறை ஒன்று வெள்ளாட்டின் கழுத்தில் விழுந்து அதன் தலையைத் தனியே கிழித்து எறிந்தது.***