ஊருக்கு வெளியே போ!
முன்னொரு காலத்தில் சபீர் என்ற தையல்காரன் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை. அவன் தன் தையல்கடையைக் கூட ஒரு குடிசையில்தான் வைத்திருந்தான். அவனது வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாததால் வேதனையுடன் வாழ்ந்து வந்தான். அவனிடத்தில் தையல் வேலை கொடுப்போரும் மிகவும் குறைவு. அதில் வரும் வருமானமும் குறைவு. அதனால், அவன் மனம் நொந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் கடவுளிடம் மிகவும் அழுது வேண்டினான்.ஒருநாள் அவன் வேலை எல்லாம் முடித்தபிறகு, தான் வாங்கி வைத்திருந்த உணவைச் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் சென்றான். அப்போது, அவன் காதில் ஓர் ஒலி கேட்டது.''சீக்கிரம் ஊரின் எல்லையில் உள்ள மண்டபத்திற்கு போ!'' என்றது அந்தக் குரல்.அவன் அப்படிச் சென்றபோது அந்த மண்டபத்தில் இரண்டு பேய்கள் பேசிக் கொண்டன.''உனக்கு விஷயம் தெரியுமா?'' என்றது முதல் பேய்.''என்ன?'' என்றது இரண்டாவது பேய்.''இந்த ஊரில் பணக்காரர் வாசிம் என்பவரது வீட்டில் இன்று திருட்டு நடக்க இருக்கிறது. அதை யாராவது தடுத்து நிறுத்தினால் நல்லது!'' என்றது முதல் பேய்.உடனே, சபீர் விரைந்து அவர் வீட்டிற்குச் சென்று விஷயத்தைக் கூறினான். வாசிம் நம்பவே இல்லை. இருந்தாலும், ''சரி உள்ளே வா. ஒளிந்திருந்து பார்ப்போம்!'' என்றார்.சிறிது நேரத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் வீட்டுக்குள் நுழைய முற்பட்டனர். ஏற்கெனவே தன்னுடைய வேலைக்காரர்களிடம் எச்சரித்திருந்ததால் அனைவரும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்த பிரபலக் கொள்ளையர்கள் அரசனால் ரொம்ப நாளாக தேடப்பட்டவர்கள் என்பதால் அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.நடந்த விஷயத்தை அரசனிடம் கூறினான் சபீர். அவரால் நம்பமுடியவில்லை. சபீருக்கு அரண்மனைக்கு பக்கத்திலேயே வீடு ஒன்றைக் கொடுத்து அவனுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.''இது மாதிரி இன்னொரு விஷயம் நடந்தால்தான் உன் கதையை நம்புவேன்!'' என்றார் அரசர்.மீண்டும் ஒருநாள் முன்பு போலவே அவன் காதில், ''ஊர் எல்லைக்குப் போ!'' என்ற குரல் ஒலித்தது. அன்று இரவும் அவன் ஊர் எல்லைக்குச் சென்றான். மீண்டும் அதே பேய்கள் பேசும் குரல்.''ஏய் உனக்குத் தெரியுமா? இந்த ஊர் அரசருக்கு பெரிய ஆபத்து வர இருக்கிறது!'' என்றது முதல் பேய்.''எப்படி?'' என்றது இரண்டாவது பேய்.''எதிரி நாட்டு அரசன் நம் அரசனைக் கொல்லத் திட்டமிட்டு, ஒரு ஒற்றனை ரத்தின கம்பள வியாபாரி வேஷத்தில் அனுப்பியிருக்கிறான்!'' என்றது முதல் பேய்.''அப்படியா?''''ஆமாம்! அந்த ஒற்றன், ரத்தின கம்பளம் விற்பது போல் அரண்மனைக்குள் வந்து நம் அரசரைக் கத்தியால் குத்தப் போகிறான்!''''அடப்பாவமே! இந்த ரத்தினக் கம்பள வியாபாரியும் மாட்டிக் கொள்வானே!''''அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. அரசர் இறந்தால் போதும் என்று முடிவு செய்து விட்டான்!''''இதை எப்படியாவது தடுக்க வேண்டும்!''''நம் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பவர், அரசனிடம் இதை உடனே சொல்ல வேண்டும்!''அடுத்தநாள் அரசவைக்குச் சென்று அரசனிடம் விஷயத்தைச் சொன்னான். அதைக் கேட்டு எல்லாரும் சிரித்தனர்.''என்ன நம் அரசரைக் கொல்லுவதா? அப்படி ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறானா?'' என்று கேட்டு சிரித்தார் படைத்தலைவன்.''அரசே! இவன் ஒரு பைத்தியக்காரன். இவனது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள உத்தரவிடுங்கள்!'' என்றான்.அரசன், ''சற்று அமைதியாய் இருங்கள்!'' என்று கூறிவிட்டு சபீரிடம் முழுக்கதையையும் கேட்டார்.''சரி நீ போ. அப்படி ஏதாவது நேர்ந்து நான் காப்பாற்றப்பட்டால் உனக்கு நல்ல வெகுமதிகள் அளிப்பேன்!'' என்று கூறினார் அரசர்.தன் மெய்க்காப்பாளர்களிடம் எப்போது விழிப்புடன் இருக்கும்படி ஆணையிட்டார்.சில நாட்கள் சென்றன. சபீர் சொன்னபடியே ரத்தினக் கம்பள வியாபாரி ஒருவன் வந்திருப்பதாக காவலன் அரசனிடம் வந்து கூறினான்.''அவனை வரச் சொல்!'' என்று அரசர் உத்தரவிட்டார்.அரசனின் மெய்க்காப்பாளர்கள் அறையில் மறைவாக ஒளிந்து கொண்டு, அரசருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் பாயக் காத்திருந்தனர். அரசரிடம் தான் கொண்டு வந்த காஷ்மீரக் கம்பளங்களை காண்பித்தான் வியாபாரி. பிறகு ஒரு சில கம்பளங்களைக் கையில் எடுத்துக் கொண்டு அரசரிடம் நெருங்கி வந்தான்.அரசர் அவனிடம், ''கம்பளங்களை அங்கேயே வை. நான் வந்து பார்த்துக் கொள்கிறேன். நீ தூரத்தில் நில்!'' என்றார். அரசர் கம்பளங்களைப் பார்த்துக் கொண்டு நின்றபோது, அவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த குத்துவாளை கண் இமைக்கும் நேரத்தில் உருவி அவர் மேல் பாய்ந்தான்.ஆனால், அதற்குள் மெய்க்காப்பாளன் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். ஒரு சில விநாடிகளில் இவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.''சபீர் சொன்னது அத்தனையும் உண்மையாகிவிட்டதே! உடனே அவனை வரச் சொல்லுங்கள்!'' என்றார் அரசர். சபீர் வந்ததும் அவனுக்கு நிறைய பொற்காசுகளும், முத்து மாலையும் கொடுத்தார். தனக்கென்று ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான் சபீர். அவனுடைய வியாபாரமும் பெருகிற்று.ஒரு நாள் மூன்றாவது முறையாக, ''உடனே ஊர் எல்லைக்குப் போ!'' என்ற குரல் கேட்டது.குரல் சொன்னபடி ஊர் எல்லைக்குச் சென்றான். மீண்டும் பேய்கள் பேசிக் கொண்டன.''பூக்காரத் தெருவில் ஏழாம் எண்ணுள்ள வீட்டில் வயதான தம்பதிகள் வசிக்கின்றனர். அவர்கள் நன்றாக வாழ்ந்தவர்கள். இப்போது பணமில்லாமல் கஷ்டப்படுகின்றனர். மற்றவர்களிடம் கேட்கவும் அவர்களுக்கு வெட்கமாக இருக்கிறது. நான் சொல்வதைக் கேட்பவன் உடனே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்!''இதைக் கேட்டபடி வீட்டுக்கு வந்தான் சபீர். ஆனால், அவனுக்கு உதவி செய்ய மனம் வரவில்லை. பணம் வந்தவுடன் அவன் நல்ல குணமெல்லாம் மாறிப்போயிருந்தது.சில நாட்களுக்குப் பிறகு அத்தம்பதியினர், வறுமையால் தற்கொலை செய்து கொண்டனர். அன்று இரவு மீண்டும் அந்தக் குரல் அவன் காதில் ஒலித்தது.''இன்றிலிருந்து மூன்றாவது நாள் நீ மாரடைப்பால் இறந்து போவாய்!'' என்றது.அதைக் கேட்டது முதல் சபீருக்கு மிகவும் பயமாகப் போய்விட்டது. இன்னும் மூன்று நாளில் அவன் சாகப்போகிறான். இவ்வளவு பணமிருந்தும் என்ன பயன்? எல்லாம் வீண். அவனுக்குப் பிள்ளைகளும் இல்லை. அவன் மனைவியிடம் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. தான் அந்த தம்பதியருக்கு உதவி செய்யாமல் போனோமே என்று வருந்தினான்.இன்னும் இருக்கப்போகும் மூன்று நாட்களிலாவது ஏழைகளுக்குத் தர்மம் செய்வோம் என்று எண்ணினான். உடனே தன் வீட்டிற்கு அருகிலிருந்த எல்லா ஏழைகளுக்கும் உடைகள், பணம், உணவு என்று ஏராளமாக வாரி வழங்கினான்.அவனுடைய பணம் பாதிக்குமேல் காலியாகிவிட்டது. மீதிப் பணத்தைத் தன் மனைவியிடம் கொடுத்து விட்டான். ஏன் இவன் இப்படிச் செய்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. கணவனுக்குப் பயந்த பெண்ணாக இருந்ததால் அவள் சபீரிடம் ஒன்றுமே கேட்கவில்லை.மூன்றாம் நாள் அவன் தன் படுக்கையில் படுத்து மிகவும் வருத்தத்தோடு கடவுளை நினைத்துக் கொண்டு மரணத்தை எதிர்நோக்கி இருந்தான்.''சபீர்! என்ன பயந்துவிட்டாயா? நீ இப்போது சாகமாட்டாய். இன்னும் பல வருடங்கள் உயிருடன் இருப்பாய். கடவுள் ஒருவருக்கு செல்வம் கொடுப்பது, ஏழைகளுக்குக் கொடுத்து உதவத்தான். சுயநலமாக இருக்கக்கூடாது. நீயும், உன் மனைவியும் சந்தோஷமாக இருங்கள். உனக்கு ஒரு குழந்தையும் பிறக்கும்!'' என்று அதே குரல் அவன் காதில் ஒலித்தது.கடவுளுக்கு நன்றி சொல்லி வணங்கினான். அதன் பின் அவனுக்கு செல்வம் கொழித்தது. ஒரு குழந்தையும் பிறந்தது. அவனும் எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். இரைக்கிற கிணறுதான் சுரக்கும் என்பதை மறந்துவிடாதீங்க!***