உள்ளூர் செய்திகள்

துப்பறியும் புலிகள் 007

ஹாய்... ஹாய்... குட்டீஸ்... இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்டுபிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போமா? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம் சரியா!அவன் பெயர் சாம். அவனுக்கு தெரியாத விஷயமே இல்லை. அவன் எதையாவது படித்துக் கொண்டிருப்பான். ரொம்பப் புத்திசாலி; திறமைசாலி; பலசாலியும் கூட. அவன் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. பல கேஸ்களில், அவர் தன் மகன் சாமின் யோசனைப்படியே வெற்றி பெற்றிருக்கிறார் என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது.பள்ளியிலிருந்து இன்னும் சாம் வரவில்லையே என்று வாசலைப் பார்த்தபடியே ஆவலோடு காத்திருந்தாள் சாமின் அம்மா. சாமை அடுத்து, அவன் அப்பாவும் வருவார்... அவரையும் காணோம்.'ஏன் இன்று இப்படி?' என்று சஞ்சலப்பட்ட போது, வந்தான் சாம். உடையெல்லாம் அழுக்காக.மவுனமாக தம் மகனைப் பார்த்தாள். அவளுக்குத் தெரியும், அவன் யாருக்கோ, ஏதோ உதவி செய்து விட்டு வந்திருக்கிறான் என்று. அதுதான் உடையெல்லாம் அழுக்கு. ஆனால், தான் பிறருக்கு உதவியதை அவன் கூற மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே, அவனை எதுவும் கேட்கவில்லை.பாத்ரூம் போய் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு வந்தவனுக்கு, டிபனைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவன் அப்பாவும் சோர்ந்து போனவராய் வந்தார்.''அப்பாடா!'' என்று சோபாவில் உட்கார்ந்தவர், தானாகவே, தன் தாமதத்திற்கான காரணத்தைக் கூறினார்.''நம் கந்தசாமியை அடித்துப் போட்டு, அவரிடமிருந்து பணத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டாங்க,'' என்றார்.கந்தசாமி அவர் நண்பர்; பில்டிங் கான்ட்ராக்டர்.''ரொம்ப அடியோ?'' என்று கேட்டாள், அவர் மனைவி.''நர்சிங்ஹோமுக்குப் போய் பார்த்து விட்டுத்தான் வரேன். டாக்டர் பயமில்லை என்றார். திருடனைப் பிடிக்க முடியாதோன்னு தோணுது,'' என்றார் அப்பா.''ஏன் முடியாது?'' என்று கேட்டான் சாம்.''அவர் தாக்கப் பட்டதை யாரும் பார்க்கலியா?'' என்றாள் சாமின் அம்மா.''மாடசாமி அவர் கூட இருந்திருக்கான். நடந்தது பூராவும் விவரமாக அவன்தான் சொன்னான். திருடன் தாக்கிய போது, மாடசாமி, கந்தசாமியோட காரில் இருந்திருக்கான்,'' என்றார் சாமின் அப்பா.மாடசாமி, கந்தசாமியின் உதவியாளன். கட்டட வேலைகளை மேற்பார்வையிட கந்தசாமி பல இடங்களுக்கு போகும் போது, அவனும் போவான். எப்போதும் மாடசாமி அவருடன் உதவிக்கு இருப்பான்.''மாடசாமி கூறியதை எல்லாம் நான் குறித்துக் கொண்டிருக்கிறேன். நகருக்கு வெளியே கட்டப்படும் புதிய குடியிருப்புப் பகுதியைப் பார்வையிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார் கந்தசாமி.''வழியில் கார், 'மக்கர்' செய்திருக்கிறது. காரை நிறுத்திவிட்டு, முன்னால் சென்று பானட்டைத் திறந்து, ரேடியேட்டரைச் சோதித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு குழாயினால், கந்தசாமியை யாரோ தாக்கி இருக்கிறான். வீடுகள் ஏதுமில்லாத ஜன நடமாட்டம் இல்லாத பகுதி. சாலையின் இருபுறமும் காட்டு மரங்கள் நிறைந்த பகுதி. தாக்கப்பட்ட கந்தசாமி ரேடியேட்டர் மீதே மயங்கி விழுந்திருக்கிறார். சத்தம் கேட்ட மாடசாமி வண்டியிலிருந்து வெளியே வந்து பார்த்த போது, ஒரு ஆள் சாலையை ஒட்டிய காட்டினுள் ஓடுவதைப் பார்த்திருக்கிறான். கந்தசாமியோட தோல்பையை காணோம். அவரை நர்சிங்ஹோமிலே சேர்த்துவிட்டு, எனக்கு தகவல் சொன்னான் மாடசாமி.''அவர் சொல்லி முடித்ததும், அத்தனை நேரமும் கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்த சாம் கேட்டான்.''காந்தசாமியோட தோல்பையில் நிறையப் பணம் இருந்ததாப்பா?''''ஆமா, அன்று கூலி தருகிற நாள். அதோட, மரம் வாங்கப் போயிருக்கிறார். தோல் பையில் முப்பதாயிரம் இருந்ததாம். அது சரி, நிறையப் பணம் இருந்ததான்னு நீ எதுக்குச் சந்தேகப்படறே?''''அவர் தாக்கப்பட்டிருக்கிறாரே!'' என்றான் சாம்.அவன் அப்பாவுக்கு, அவனுடைய புதிர்ப் பேச்சு புரியவில்லை.''திருடனைக் கண்டுபிடிப்பது கஷ்டமே இல்லை. ரொம்ப சுலபம்,'' என்றான் சாம்.''எப்படி? அந்தக் காட்டை அடுத்து, மின்சார வண்டியோட ரயில்வே லைன் போகுது. கொஞ்ச தூரத்திலே ஸ்டேஷன். ரயில் வண்டிகள் அங்கு வேகம் குறைவாகத் தான் வரும். திருடன் ஏதாவது ஒரு மின்சார வண்டியிலே தொத்திக் கொண்டு போயிருப்பான்,'' என்றார்.''எங்கேயும் போயிருக்கமாட்டான். மாடசாமியோட வீட்டுக்குப் போனால், திருடனையும், முப்பதாயிரம் ரூபாயுடன் தோல் பையையும் பார்க்கலாம்!''மாடசாமியின் கையாள் தான் அந்தத் திருடன்ங்கிறாயா?''''இல்லை...!'' என்றான் மர்மமாக சாம்.''அப்படின்னா...?''''கந்தசாமியின் கார் நடுவழியிலே நின்னதும், மாடசாமிக்கு எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு... கந்தசாமி ரேடியேட்டரைச் சோதித்துக் கொண்டிருக்கும் போது, மாடசாமி மெதுவாகக் காரிலிருந்து வெளிப்பட்டு, அவரைச் தாக்கி விட்டுத் தோல் பையைச் சுருட்டிக் கொண்டு போய் விட்டான்...''''அப்போது அந்தத் திருடன்?''''அது வெறும் கட்டுக்கதை. திருடன் யாரும் வந்து தாக்கல்லே. அவனே தான் முதலாளியைத் தாக்கிக் கொள்ளை அடித்து விட்டு, நர்ஸிங் ஹோமிலே சேர்த்திருக்கான்,'' என்றான் சாம்.அவன் அப்பா, யோசனையுடன் முகவாயைத் தடவியபடியே, ''நீ கூறுகிறபடியும் இருக்கலாம்... ஆனால் எப்படி நிரூபிப்பது?''''மாடசாமியின் வாக்குமூலத்திலேயே, அவன் குற்றாவளிங்கறதை நிரூபிக்க ஆதாரம் இருக்கப்பா... கவலையே படவேண்டாம். உடனே அவனை, 'அரெஸ்ட்' பண்ணுங்க...'' என்றான் சாம்.'மாடசாமிதான் குற்றவாளி!' என்று எதனால் கூறினான் சாம்? உங்களால் கூற முடியுமா? உங்க மூளையை கொஞ்சம் யூஸ் பண்ணுங்க குட்டீஸ்.விடைகள்:கந்தசாமி காரின் முன்னால் போய், பானட்டைத் திறந்து இன்ஜினைச் சோதித்துக் கொண்டிருக்கும் போது, திருடன் வந்து தாக்கியதாகக் கூறினான் மாடசாமி. அப்போது அவன் காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கிறான். பானட் தூக்கி இருக்கும்போது, கந்தசாமியையோ, திருடனையோ அவன் காண முடியாது. காரணம், ஹூட் (பானட்) உயர்ந்து விண்ட் ஷீல்டை மறைத்துக் கொண்டிருக்கும். ஆகவே, திருடன் வந்து கந்தசாமியைத் தாக்கி விட்டு ஓடினார் என்று சொல்வது பொய். அவனால், பானட்டுக்கு மறுபுறம் நடக்கும் எதையும் பார்க்க முடியாது. மாடசாமியின் வீட்டைச் சோதனை போட்டதும் 30 ஆயிரம் ரூபாயுடன் தோல் பை கிடைத்து விட்டது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !