உள்ளூர் செய்திகள்

தர்மம்!

அரவநாட்டில், சித்திரவேந்தர் நல்லாட்சி புரிந்து வந்தார்; அமைச்சர் கவிராயரை, முதன்மை ஆலோசகராக வைத்திருந்தார். நன்மை தரும் திட்டங்களைத் தீட்டினார்.குளம், ஏரி, குட்டைகளை துார்வாரி, மழை நீரை சேகரித்து, விவசாயத்திற்கு பயன்படச் செய்தார். மரங்கள் நட்டு, காடுகளை விரிவாக்கினார். நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி, கொலை, கொள்ளை எல்லாம் படிப்படியாக குறைந்தன.ஒரு நாள் அவைக்கு வந்த கவிராயர், 'அறிவுத் திறனும், தொலைநோக்கு பார்வையும் உள்ள மன்னரே... தங்களிடம் ஒரு முக்கிய குணம் மட்டும்...' என துவங்கி, தயக்கத்துடன் பேசாமல் நிறுத்தினார்.'ம்... சொல்ல வந்ததை கூறுங்கள் கவிராயரே... தயக்கம் வேண்டாம். அப்போது தான், திருத்திக் கொள்ள முடியும்...' என்றார் மன்னர்.'மக்களுக்காக பல நன்மைகள் செய்கிறீர்... ஆனால், உணவு தர்மம் மட்டும் ஏன் செய்வதில்லை...''நல திட்டங்களால், மக்களுக்கு நன்மை கிடைக்கிறது... ஆனால், உணவு தர்மம் செய்வதால், என்ன கிடைக்க போகிறது...' 'வறியவர் முன்னேறும் வரை தர்மம் செய்வது அவசியம் மன்னா...' 'அப்படியா... சரி. எனக்கு முதுமை வரட்டும். அந்த பருவத்தில், எல்லா செல்வங்களையும் தந்து விடுகிறேன்...'மன்னர் பதில் கேட்டு அமைதியானார் கவிராயர்.ஒரு நாள் இரவு - நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார் மன்னர். திடீரென அலறல் சத்தம் கேட்டு, கண் விழித்தார். முற்றத்தில் சாளரம் வழியே அதிக வெளிச்சம் வந்தது. வெளியில் சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி.பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது நெருப்பு; சேவகர்களை அழைத்தார் மன்னர்; ஒருவர் கூட வரவில்லை. பதற்றத்தில், செய்வது அறியாமல் அங்கும் இங்கும் ஓடினார்.எதுவும் நடக்காதது போல், தரைப் பகுதியைத் தோண்டி கொண்டிருந்தார் கவிராயர்.அதைக் கண்ட மன்னர், 'மந்திரியாரே... நெருப்பு பற்றி எரிகிறது; இங்கு, என்ன செய்கிறீர்...' என கோபமாக கேட்டார்.நிதானம் இழக்காமல், 'கிணறு தோண்டுகிறேன் மன்னா... தண்ணீர் வந்ததும், நெருப்பை அணைத்து விடலாம்...' என கூறினார். 'உண்மை புரிந்தது அமைச்சரே... தக்க சமயத்தில் செய்யாத உதவியால், எந்த பயனும் இல்லை என உணர்ந்தேன். இனி, வரியவருக்கு தர்மம் செய்வேன்...' என்றார்.கவிராயரின் நாடகத்திற்கு பலன் கிடைத்தது. குழந்தைகளே... வரும் முன் காப்பதே சிறந்தது.க.சங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !