உள்ளூர் செய்திகள்

ஊக்கமது கைவிடேல்!

திருவண்ணாமலை, டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழ் ஆசிரியர் பாண்டுரங்கன், பஞ்ச கச்சமும், வெள்ளை ஜிப்பாவுமாக காட்சி தருவார். மறைந்த பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி அளவு தான் உயரம். மென்மையான குரலில் பாடத்தை மெருகேற்றுவார். வகுப்பில் அவ்வப்போது, 'அப்பனே... புரிந்தால் நல்லது; புரியா விட்டால் அதை விட நல்லது...' என குறிப்பால் உணர்த்துவார். நீண்ட நாட்களாக எனக்கும், வகுப்பு தோழன் பிச்சாண்டிக்கும், இந்த குறிப்பு புதிராக இருந்தது. விளக்கம் கேட்க பயம். இறுதி தேர்வுக்குப் பின், தைரியத்தை வரவழைத்து அவர் இல்லம் சென்று, அந்த கூற்றுக்கு விளக்கம் கேட்டோம்.புன்முறுவலுடன், 'அப்பனே... ஒரு செய்தி புரிந்து விட்டால், மறுபடியும் அதனிடம் நாட்டம் செல்லாது; புரியவில்லை என்றால், முயற்சியை தொடர வேண்டும். சரியாக புரிந்ததும், அதன்மேல் சிந்தனை எழாது; புரியும் வரை, ஊக்கத்தை கைவிடாமல் முயல வேண்டும்...' என்பதை பொறுமையாக விளக்கினார். இந்த தாரக மந்திரம், மிக உயர்ந்த பதவியை எட்ட உதவியது!தற்போது, என் வயது, 71; தமிழ், கன்னடம் மொழிகளில் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். அந்த ஆசிரியரின் சிறு வாசகம், வாழ்வில் பெரும் சாதனைக்கு ஊன்று கோலாகியுள்ளது.- கணபதி அருணாசலம், பெங்களூரு.தொடர்புக்கு: 98863 93418


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !