துளிர் விடும் அழகு!
நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 9ம் வகுப்பு படித்தேன். மாலை 4:20 மணிக்கு வகுப்புகள் விட்டதும், மிதிவண்டியை எடுக்க அனைவரும் ஓடிக் கொண்டிருப்பர். அவசரமின்றி தோழியருடன் பேசி செல்வேன். மரங்கள் துளிர்க்கும் காலம் அது. அன்று இளம்பச்சை நிறத் தளிர்களை பறித்து, மயில் இறகு போல் செய்து வீசியபடி நிதானமாக நடந்து கொண்டிருந்தோம். அதைக் கண்ட தலைமையாசிரியர் ராஜேந்திரன், 'தளிர்களை பறிப்பதால் என்ன பலன் கிடைக்க போகிறது; மரத்தில் இருந்தால் நிழல் தரும். அழகாக காட்சி தரும். மரமும் அதிக வளர்ச்சி அடையும்...' என்று அறிவுரைத்து புரிய வைத்தார். தற்போது என் வயது, 23; அழகாக துளிர் விடும் செடிகளை தீண்டுவது இல்லை; பசுமையை ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். அது போன்ற மரங்களை கண்டவுடன், தலைமையாசிரியர் முகம் நினைவுக்கு வரும். மரங்களுக்கும் உயிர் இருக்கிறது; அவற்றை துன்புறுத்த கூடாது என்ற உணர்வை தரும்.- ஆர்.அனுசுயா ராமகிருஷ்ணன், சென்னை.