ஆயுத பூஜையும், - ஸ்ரீ சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் வாழ்வின் முக்கியமான விஷயங்களை ஞாபகபடுத்தி நினைவில் நிறுத்தி வைக்கிறது.தொழில் தெய்வம், - அதற்கு உதவும் உபகரணங்களும் உன்னதமானவையன்றோ- அதை சிறப்பிக்கவே இந்த ஆயுத பூஜை!மனிதனாய் ஒருவன் பிறந்து வாழ்ந்தான் என்றால், அவன் வாழ்ந்ததற்கான அடையாளம் அவன் கல்வி கற்று இருக்க வேண்டும். இது கல்வி யுகம்; - கல்வியின் மேன்மைக்கு ஈடேது. கல்வியின் தேவி, மகா சரஸ்வதியை வணங்குவோம். 'சரஸ்வதி பூஜை' என்றால் நன்றாக கல்வி கற்பது; - கற்பிப்பது என்பதாகும்.விஜயதசமி நாளில் நிகழ்ந்த புராண சம்பவங்கள் ஏராளம். அவற்றுள் சில...* அர்ஜுனன், அஞ்ஞாத வாசத்தின் போது, வன்னிமரத்தில் வைத்திருந்த தன் காண்டீபத்தையும், அஸ்திரங்களையும் எடுத்து சென்று, துரியோதனன் முதலான கவுரவர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற நாள்.* விஷ்ணு கோவில்களில் வன்னி மரக் கிளையை வைத்து, அதன் மீது பெருமாள் பானம் தொடுக்கும் வைபவம் நடைபெறும் நாள்.* இந்த திருநாளை, மைசூரில், தசரா பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.* மேற்கு வங்காளத்தில், நவராத்திரியின் போது, பிரம்மாண்டமான காளிதேவி சிலைகளைச் செய்து வழிபடுவர். விஜயதசமி திருநாளில், அந்தச் சிலைகளை கடலில் விடுகின்றனர்.* ஸ்ரீராமன், ராவணன் மீது படையெடுத்துச் சென்ற நாள் இது. தலைநகர் டில்லியில் விஜயதசமி யன்று ராவணன் பொம்மைகளைத் தீயிட்டு, 'ராவண சம்ஹாரம்' செய்து, ராமலீலா வைபவமாகக் கொண்டாடுகின்றனர்.
கல்வி தேவியே கற்கிறாள்!
* நாகப்பட்டினம் மாவட்டம், கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில், வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதி தேவி காட்சியளிக்கிறாள்.* சிருங்கேரியில் உள்ள சரஸ்வதி கோவிலில், ஒரு மாணவியைப் போல், படிக்கிற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.வன்னி, வாழையானது!பண்டாசுரனுடன் போர் செய்து அவனை, அம்பாளால் அழிக்கமுடியவில்லை. எனவே, சிவபெருமானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி, வன்னி மரத்தை வெட்டி, அசுரனை வதம் செய்தாள். இதுவே நாளடைவில், 'கன்னி வாழை வெட்டு' என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனை சம்ஹாரம் செய்த நேரம் மாலை வேளை. இதை ஞாபகப்படுத்தும் விதமாக கோவில்களில் வாழை வெட்டுவது வழக்கம்.
டிராகனும், சிதாரும்!
* இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு, 'கலஞ்சன்' என்று பெயர்.* ஜப்பானியர்கள், 'பென்டென்' என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.* பாலித்தீவில், 'தம்பாத்ஸரிம்' என்னும் குளத்தில் நீராடி, புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம், என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஒன்பது படிக்கும் பொருள்!
நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் படிகள், சில தத்துவங்களை உணர்த்துகிறது. கொலுவில் கீழே இருந்து துவங்கும், முதல் மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம், போன்றவை, 'தாமச' குணத்தைக் குறிக்கும். அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, 'ரஜோ' குணத்தை காட்டும். மேலே உள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள், 'சத்வ' குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
இன்பம் 'சுவாகா!'
வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி, யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், 'சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
வாகனங்களில் வாணி!
சரஸ்வதியின் வாகனம், அன்னப்பறவை. எனினும், சில நுால்கள், கலைவாணியின் வாகனமாக மயிலை குறிப்பிடுகின்றன. ராஜஸ்தானில் சில தலங்களிலும், மும்பையிலும், மயில் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியை தரிசிக்கலாம். தவிர, ஆட்டின் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியின் திருவடிவங்களும் உண்டு.
வீணை இல்லாமலும் வீற்றிருப்பாள்!
* வேதாரண்யம், கங்கை கொண்ட சோழபுரம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களிலும் கையில் வீணை இல்லாத கலை மகளை தரிசிக்கலாம்.* ஆஜ்மீரிலுள்ள புஷ்கர் கோவில் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூரில் உள்ள, ஸ்ரீசிரகண்டீஸ்வரர் கோவிலில், வீணை இல்லாமல் பிரம்மனுடன் சேர்ந்து காட்சி தரும் ஸ்ரீசரஸ்வதி தேவியை தரிசிக்கலாம்.* திருவையாறுக்கு அருகில் உள்ள, திருப்பூந்துருத்தி ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோவிலில், கோஷ்ட தேவதையாக அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ சரஸ்வதி தேவி. இவளின் மேலிரு கரங்களில் அட்சர மாலை மற்றும் சுவடி; கீழ் இரு கரங்களில் அபயம் மற்றும் ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறாள்.