அனுபவமான தண்டனை!
சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது, சேட்டை செய்யும் மாணவர்களுக்கு தண்டனையாக, வகுப்புக்கு வெளியே முட்டி காலில் நிற்கும் தண்டனைக் கொடுப்பார் ஆசிரியர் சுப்ரமணிய ஐயர். சிறிய கற்கள் முட்டியில் அழுத்தி வலி ஏற்படுத்தும். அந்த வேதனையில், 'என்ன தவறு செய்தோம்; எதற்காக தண்டனை பெற்றோம்' என்பதை சிந்திக்க தோன்றாது.அதற்கு மாறாக, மறுநாள் தண்டனை பெற்றால் சமாளிப்பது பற்றியே எண்ணுவேன். வகுப்பு ஆரம்பிக்கும் முன், தரையில் சிறு கற்களை அகற்றி, மணலை சமன்படுத்தி, முட்டி போட்டாலும் உறுத்தாமல் இருக்க தயார் செய்தபடி இருப்பேன். படிப்பை முடித்து, சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறினேன். பலருக்கு சம்பளம் கொடுக்கும் அளவு உயர்ந்தேன். யோகாவை, 60 வயதுக்கு பின் கற்றபோது, வஜ்ராசனத்தில் சில பயிற்சிகளை செய்ய வேண்டியிருந்தது. சர்வ சாதாரணமாக முட்டி போட்ட நிலையில், வஜ்ராசனத்தில் பயிற்சிகள் செய்வதை கண்ட யோகா மாஸ்டர், வியப்படைந்தார். உதாரணமாக என்னை சுட்டிக் காட்டினார். அவரிடம், 'மாணவ பருவத்தில் பள்ளியில் முட்டி போட்ட அனுபவம் கை கொடுக்கிறது...' என்று கூறினேன். வகுப்பே ரசித்து சிரித்தது.தற்போது, என் வயது, 70; தினமும் யோகா பயிற்சி செய்யும் போது, அந்த ஆசிரியரை நினைவில் கொள்கிறேன்!- ஜி.சுவேதாரண்யம், சென்னை.தொடர்புக்கு: 98416 67942