உள்ளூர் செய்திகள்

நண்பேன்டா!

ஒரு ஆலமரப் பொந்தில் இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அவை ஆலமரத்தின் கனிகளைக் கொத்தித் தின்னும். மேலும், அருகிலுள்ள கொய்யா மரம், வாழைமரம் ஆகியவற்றின் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தன.எனவே, பறவைகள் எப்போதும் மரங்களின் கிளைகளில் அமர்ந்து மரங்களோடு கதை பேசிக்கொண்டிருக்கும். அந்த ஆல மரத்தின் அருகில் ஒரு பருத்திச் செடியும் வளர்ந்திருந்தது.அந்த பருத்திச் செடி பறவைகளோடு நட்பு கொள்ள விரும்பியது. எனவே ஒருநாள் அது பறவைகளை அழைத்து, ''பறவைகளே! நீங்கள் என்னோடு மட்டும் ஏன் நட்பு கொள்ள மறுக்கிறீர்கள்? என்னுடன் எந்தக் கதையும் பேச மாட்டேன் என்கிறீர்கள்?'' என்று கேட்டது.''பருத்திச் செடியே! உன்னால் எங்களுக்கு என்ன பயன்? நாங்கள் குடியிருக்கும் ஆலமரம் வீடு தருகிறது. உண்பதற்கு கனிகள் தருகிறது. அதுபோல, கொய்யா, வாழை மரங்களும் நாங்கள் உண்ண கனிகள் தருகின்றன. அதனால் அவற்றோடு மட்டும்தான் நட்பு கொள்வோம். உனது நட்பு எங்களுக்குத் தேவையில்லை!'' என்று கூறிவிட்டுச் சென்றன.அதைக் கேட்ட பருத்திச் செடிக்கு வருத்தம் தோன்றியது.ஒருநாள் வசந்த காலம் முடிந்து, குளிர் காலம் தொடங்கியது. ஒரு சில நாட்கள் லேசான குளிர் அடிக்கத் தொடங்கி, நாளாக நாளாக குளிர் அதிகமானது. ஒருநாள் இரவில் கடும்பனி பொழிந்தது. குளிரைத் தாங்க முடியாமல் பறவைகளும், அதன் குஞ்சுகளும் நடுநடுங்கின.'இப்படியே பனி பொழிந்தால், குளிரில் நம் குழந்தைகள் இறந்து விடுமே' என்று பறவைகள் அஞ்சின. அவை குளிரிலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா என்று தேடி அலைந்தன.அப்போது பருத்திச் செடி பறவைகளை அழைத்து, ''நண்பர்களே! குளிரால் உங்கள் குஞ்சுகள் இறந்துவிடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் என்னிடமுள்ள பஞ்சுகளைத் தருகிறேன். அவற்றை மெத்தையாகப் போட்டு, உங்கள் குழந்தைகளும் நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள், குளிரிலிருந்து உங்களை பஞ்சு காப்பாற்றும்!'' என்று கூறி, தன்னிடமிருந்த பஞ்சுகளைக் கொடுத்தது.பறவைகளும் வேண்டா வெறுப்பாக, பஞ்சைப் பெற்றுக் கொண்டு, ஆலமரத்துப் பொந்தில் கொண்டுபோய் மெத்தைபோல் செய்து வைத்தன. அன்று கடுங்குளிர் பெய்தும், பறவைகளையும், குஞ்சுகளையும் குளிர் வாட்டவே இல்லை. பஞ்சு குளிருக்கு இதமான வெப்பத்தைத் தந்தது. பறவைகளுக்கு, பருத்திச் செடியின் உண்மையான அன்பும், பயனும் புரிந்தது.மறுநாள் காலை அவை பருத்திச் செடியிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டன.''உன்னுடைய பஞ்சினால் நாங்கள் பெற்ற சுகம் ஏராளம். அன்று உன்னை அப்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இன்றுமுதல் நீயும், எங்களுடைய நண்பன்!'' என்று கூறின.அன்று முதல் பருத்திச் செடியும் பறவைகளின் நண்பனானது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !