ஊர் சுற்றலாம் வாங்க!
வன விலங்கு சரணாலயமும், தலையணை ஆறும்!சம்மர் லீவு விட்டாலே எங்கெங்கோ சுற்றும் நாம், அருகில் உள்ள இந்த இடங்களுக்கு ஏன் போகக்கூடாது? 'சீப்'பான டூர் செல்ல விரும்புவோருக்கு உகந்தது இந்த இடம்.திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், குற்றாலம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும் அவ்வளவாக அறியப்படாத சுற்றுலா தலம்தான் இந்த தலையணை ஆறும், அருகிலுள்ள களக்காடும்.திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டத்தில் உள்ள அழகிய இடம் களக்காடு. பச்சைப்பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டது.களக்காட்டில் சுமார் 567 சதுர கி.மீட்டர் பரப்பளவில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இது, மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் குற்றாலத்திலிருந்து 75 கி.மீட்டர் தெற்கே அமைந்துள்ளது. இக்காப்பாகத்தின் வடக்கே, தெற்கு, மேற்கு பகுதிகள் வனங்களால் சூழப்பட்டு, தமிழகத்தின் இரண்டாம் பெரிய காப்பகமாக விளங்குகிறது.இச்சரணாலயத்தில் புலிகள், புள்ளி மான், கடம்பை மான்கள், காட்டு பன்றிகள், சிங்கவால் குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன.இச்சரணாலய பகுதியில் பாணதீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரு அருவிகள் உள்ளன.இங்கு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தாமிரபரணி நதியும், அதன் கிளை நதிகள் சிலவும் இச்சரணாலய பகுதியில் ஓடுகின்றன.புலிகள் காப்பகத்தில் மக்கள் பங்களிப்புடன் கூடிய வனப்பாதுகாப்பு திட்டமான 'சூழல் மேம்பாட்டு திட்டம்' கடந்த இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தேசிய புலிகள் ஆணையத்தின் விருதும் இக்காப்பகத்திற்கு கிடைத்திருக்கிறது.களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தலையணை ஆறு உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலைக்கு செல்லும் வழியில், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதிகள் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த ஒரு இடம்தான் இந்த தலையணை.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் அழகிய அருவியாக காட்சி தருகிறது இந்த தலையணை. கோடையின் கொடிய வெப்பத்தையும் மீறி ஓடும் மலையாற்று தண்ணீர் குளுமையாக இருக்கிறது.குற்றாலம், அகஸ்தியர் அருவி (பாபநாசம்) அளவிற்கு இவ்விடம் பழக்கப்பட்ட இடம் அல்ல. எனவே, சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இங்கு செல்வதற்கு, மலையடிவாரத்தில் உள்ள களக்காடு வனத்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும்.இங்கு சமைப்பதற்கும், மது பாட்டில்கள், தீப்பற்றக் கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.செங்கல்தேரி!தலையணை ஆற்றுக்கு செல்பவர்கள் கூடுதலாக இந்த சுற்றுலா தலத்தையும் காணலாம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் செங்கல் தேரி, அழகான, அற்புதமான இடம்.களக்காடு முண்டந்துறை சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதி இது என்பதால், பாளையங்கோட்டை என்.ஜி..ஓ., காலணியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும்.செங்கல்தேரியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட மாளிகை இன்று கூட உயிர்ப்புடன் இருக்கிறது. மலை சுற்றுலா செல்பவர்கள் வனத்துறை பாதுகாப்போடு இந்த மாளிகையில் தங்கி மலையின் அழகை ரசிப்பர்.களக்காட்டில் இருந்து, 17 கி.மீட்டர் தூரம் பயணம் செய்தால் செங்கல்தேரியை அடையலாம். பச்சைப்பட்டு உடுத்தியது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடர்த்தியான மரக்கூட்டங்கள், அதற்குள் ஆங்காங்கே தலை காட்டும் நீரோடைகள் என இப்பகுதி கண்களுக்கு மிக ரம்மியமாக காட்சியளிக்கும்இயற்கை அழகை கண்டு ரசிக்க பார்வை மாடமும், தங்குமிடங்களும் உள்ளன. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட கருமாண்டியம்மன் கோவில் அணையும் உள்ளது. இவ்வணை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.எவ்வாறு செல்வது?திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாங்குநேரி வந்து அங்கிருந்து, 12 மீட்டர் பயணம் செய்து களக்காடு வரலாம்.திருநெல்வேலி, நாங்கு நேரி, களக்காடு மார்க்கமாக தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.களங்காட்டில் இருந்து வேன்கள் மூலம் தலையணை செல்ல வேண்டும். களக்காட்டிலோ, நாங்குநேரியிலோ தங்கும் வசதியை செய்து கொள்ளலாம்.களக்காட்டில் இருந்து 2 1/2 மணி நேரத்தில் தலையணை சென்று விடலாம். களக்காட்டில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் உள்ளன.திருநெல்வேலியிலும் பல டிராவல் ஏஜென்சிகள் உள்ளன. இவை முண்டந்துறை, களக்காடு, தலையணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதுடன், தங்கும் வசதியையும் செய்து தருகின்றன.என்ன படித்து முடித்து விட்டீர்களா? பிறகென்ன மூட்டை, முடிச்சுக்களுடன் புறப்பட வேண்டியதுதானே!