உள்ளூர் செய்திகள்

கைகொடுத்த தெய்வம்!

மதுரை, மகாத்மா பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறேன். இணைய வழி வகுப்பறையில் நடந்த சம்பவம்...அன்று தமிழ் ஆசிரியை உமா மகேஷ்வரி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியும் முன் வீட்டுப்பாட பயிற்சியாக, 'பிரபலமான இந்திய அறிஞர் அல்லது விஞ்ஞானி பற்றி குறிப்பு எடுத்து, கட்டுரையாக எழுதி பயிற்சி செய்யுங்கள்... எழுதியதை அடுத்த வகுப்பில் வாசித்து காட்ட வேண்டும்...' என அறிவுரைத்தார்.இரண்டு நாட்களுக்கு பின் நடந்த வகுப்பில், 'வீட்டுப்பாடமாக எழுதி பயிற்சி செய்தக் கட்டுரையை, யாராவது ஒருவர் வாசியுங்கள்...' என்றார். அமைதி நிலவியது; யாரும் கட்டுரை எழுதியிருக்கவில்லை. மிகவும் வருந்தியபடி, அடுத்த வகுப்பில் அதை நிறைவேற்றும்படி கண்டிப்புடன் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்ற என்னிடம், 'சிறுவர்மலர் இதழில் அறிஞர்கள் பற்றிய கட்டுரைகள் வந்திருக்கும்; தேடிப்பார்...' என ஆலோசனை கூறினார், என் அம்மா. நம்பிக்கையுடன் தேடினேன். ஜூலை 17, 2021, சிறுவர்மலர் இதழில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றிய கட்டுரையை கண்டேன். எளிய நடையில், நிறைய தகவல்களுடன் இருந்தது. அதன் அடியொற்றி அடுத்த வகுப்பில் தடுமாற்றம் இன்றி வாசித்தேன். மனம் உவந்து பாராட்டினார் ஆசிரியை. எனக்கு, 11 வயதாகிறது. சிறுவர்மலர் இதழை, நான்கு ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்; சிறந்த மொழி பயிற்சியும், அறிவையும் தருகிறது. தக்க சமயத்தில் உதவுவதை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- கே.பி.பிரணவ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !