உள்ளூர் செய்திகள்

குருவின் கருணை!

கும்பகோணம், டவுன் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, கிரிக்கெட், கால்பந்து, ஓட்டப் பந்தயம் என்று, விளையாட்டுகளில் கவனமாக இருந்தேன். காவிரி ஆற்றில் நீச்சல் அடிப்பதும் வழக்கமாக இருந்தது. படிப்பில் கவனம் இன்மையால் ஆண்டு இறுதி தேர்வில், அறிவியல் பாடத்தில், 15 மதிப்பெண்களே கிடைத்தன. அதனால், 8ம் வகுப்பை திரும்பவும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்மாவிடம், குச்சியால், செமையாக அடி வாங்கினேன். மிகுந்த வருத்தத்துடன் அடுத்த ஆண்டு அதே வகுப்புக்கு சென்ற என்னிடம், 'புத்திசாலி பையன் நீ... ஒரு ஆண்டை பயன்படுத்தாமல் விட்டு விட்டாய்... விளையாட்டு நேரத்தை குறைத்து, படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும்...' என்று உற்சாகப்படுத்தினார், அறிவியல் ஆசிரியை காமாட்சி. பள்ளியில், உடல் நலம் சார்ந்த கட்டுரை போட்டி நடந்தது. அதில் பங்கேற்க வற்புறுத்தினார்; அரை மனதுடன் பெயர் கொடுத்தேன். தலைப்பை மனம் கொண்டு முயன்று எழுதினேன்; முதல் பரிசு கிடைத்தது. என்னையே நம்ப முடியவில்லை. இறுதி தேர்வில், அறிவியல் பாடத்தில், 84 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து நன்றாக படித்து பொருளாதாரத்தில், பிஎச்.டி., என்ற முனைவர் பட்டம் பெற்றேன். இப்போது எனக்கு, 71 வயதாகிறது. படிப்பில் ஆர்வத்தைத் துாண்டி, புதிய மனிதனாக மாற்றிய அந்த குருவை மறக்க முடியவில்லை. - எஸ்.சந்தானம், பெங்களூரு.தொடர்புக்கு: 94225 24254


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !