கை ரிக் ஷா!
கிழக்காசிய நாடான ஜப்பானில், 1860ல், கை ரிக் ஷா பயன்பாட்டுக்கு வந்தது. போக்குவரத்து வசதிகள் பெருகியதால், 1930ல் இதன் பயன்பாடு குறைந்து, அருங்காட்சியத்தில் காட்சி பொருளானது.இந்தியாவில், 1882ல், சிம்லா நகரில் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. தொடர்ந்து கோல்கட்டா நகரில் அறிமுகமானது. வாடகை முறையில், 1914 முதல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்த போது, 2005ல் கை ரிக் ஷா தடை செய்யபட்டது. கடும் எதிர்ப்பு எழுந்ததால், தடை வாபஸ் பெறப்பட்டது.ஆசிய நாடான சிங்கப்பூரில், 1930ல், 1 லட்சம் கை ரிக் ஷா பயன்பாட்டில் இருந்தன. ஆசிய நாடான சீனாவில் மஞ்சள் வண்ணம் பூசி வாடகைக்கு விடும் வழக்கம் இருந்தது.அண்டை நாடான பாகிஸ்தான், கை மற்றும் சைக்கிள் ரிக் ஷாவை, 1949ல் தடை செய்தது. ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தில் இன்றும், கை மற்றும் சைக்கிள் ரிக் ஷா பயன்பாட்டில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மாதரன் கோடை வாசஸ்தலத்தில், மோட்டார் வாகனங்களுக்கு தடை உள்ளது. இதனால், கை ரிக் ஷாக்களை அதிகம் காணலாம்.இலக்கியம் மற்றும் திரைப்படங்களில் கை ரிக் ஷா பயன்பாடு பற்றி குறிப்புகள் உள்ளன. அவற்றை பார்ப்போம்...* பிரபல எழுத்தாளர் ருத்யார்ட் கிப்ளிங், 'தி பென்டோம் ரிக் ஷா அன்டு அதர் டேல்ஸ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். இது, 1888ல் வெளியானது* சீன எழுத்தாளர் லியோசி, 'ரிக் ஷாபாய்' என்ற நுாலை, 1936ல் எழுதினார்; இது பிரபலமாகி, ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது.* பாலிவுட்டில் பிரபல இயக்குனர் பீமல் ராய் ஒரு படத்தை, 1953ல் வெளியிட்டார்; அதில் கிராமத்தில் வாழ வழியில்லாத விவசாயி, நகரத்தில் கைரிக் ஷா இழுப்பவராக மாறும் பாத்திரம் அமைந்துள்ளது* தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 'ரிக் ஷாக்காரன்' என்ற படத்தில், சைக்கிள் ரிக் ஷா ஓட்டியாக, 1971ல் நடித்துள்ளார். இது பிரபலமானது* தமிழில் வந்த, 'பாபு' என்ற படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனும், 'பத்தாம்பசலி' என்ற படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷும், கை ரிக் ஷா இழுப்பவர்களாக நடித்துள்ளனர்.பரிணாமத்தின் கதை!கை ரிக் ஷா என்பது முதலில், 'புல்டு ரிக் ஷா' என அழைக்கப்பட்டது. மனிதர்களே இழுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது சிறிது மாற்றம் பெற்று, சைக்கிள் ரிக் ஷாவாக வலம் வந்தது. இழுப்பதற்கு பதில், மிதிப்பதால் இது நகர்ந்தது. பின், மோட்டார் பொருத்திய சைக்கிள் ரிக் ஷா வந்தது. அது, ஆட்டோ ரிக் ஷாவாக வளர்ந்தது. பின், டுக்டுக், ஆட்டோ, பேபி டாக்சி, மோட்டோ டாக்சி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது. அடுத்து, ேஷர் ஆட்டோ வந்தது. தற்போது, இ - ஆட்டோ என்ற எலக்ட்ரானிகல் ஆட்டோ சாலைகளில் ஓட துவங்கியுள்ளது. இதற்கு, 'விலோ டாக்சி' என பெயரிட்டுள்ளனர் ஜப்பானியர். இது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.- திலிப்