நம் இந்தியாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் நகரங்களுள் ஒன்று ஜெய்ப்பூர். அந்த ஜெய்ப்பூருக்கு அழகு சேர்ப்பது, 'ஹவா மஹால்.' ஹவா என்றால் இந்தியில், 'காற்று' என்று பொருள். காற்று வீசும் அரண்மனை. 1799ம் ஆண்டு மகாராஜா ஸ்வாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்டது இந்த அரண்மனை. இதன் முகப்பு மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். இந்த அரண்மனையில் மாடிகளும், பால்கனிகளும் மட்டுமே உண்டு. அறைகளோ, கூடங்களோ கிடையாது. அதனால் இதில் யாரும் வசிப்பதில்லை.
மஹால் கட்டியதன் நோக்கம்!
அக்காலத்தில் அரச குலப் பெண்கள் முகத்திரை (பர்தா) அணிவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் அன்னியர்கள் யாரும் அவர்களை பார்க்கக்கூடாது. எனவே, பிறர் பார்வையில் படாதவாறு கீழே சாலைகளில் நிகழும் ஊர்வலங்களையும், திருவிழாக்களையும், அன்றாட நிகழ்வுகளையும் அரசகுலப் பெண்கள் பார்ப்பதற்காக, இந்த மஹாலை மகாராஜா கட்டினார்.
கட்டடக்கலை:
இந்தியாவில் மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக கருதப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்தை உருவாக்கிய லால் சந்த் உஸ்தா தான் இந்த பிரத்யேக அமைப்பின் கட்டட நிபுணர். இந்த அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்களால் கட்டப் பட்டது. இது ஐந்து மாடிகளைக் கொண்டது. அதில் இரண்டு மாடிகள் அரண்மனையின் அஸ்திவாரம். மற்ற மூன்று மாடிகளில் மேலே செல்ல படிகள் உண்டு.மேலும், சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் ஐரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ளன. இந்த விசேஷ ஜன்னல்கள் அதிக காற்றோட்டம் மிக்கதாக அமைக்கப் பட்டதால் ஜெய்ப்பூரின் அரச குடும் பங்கள் கோடைக்காலத்தில் காற்று வாங்கும் இடமாக பல ஆண்டுகள் இந்த அரண்மனையை பயன்படுத்தினர்.இந்த அரண்மனையின் குவிமாட சாரங்கள், குழல் வடிவ தூண்கள், தாமரை மற்றும் பூ வடிவங்களில் ராஜபுத்திரர்களின் முறையையும், கற்கள் பதிக்கப்பட்ட சரிகை சித்திர வேலைப்பாட்டிலும், கட்டட வளைவுகளிலும் இஸ்லாமிய முறையையும் காணலாம். அதனால், இதன் பண்பாடு மற்றும் கட்டட மரபு இந்து ராஜபுத்திர கட்டடக்கலையும், இஸ்லாமிய முகலாயக் கட்டடக் கலையும் கலந்த ஒரு உண்மையான பிரதிபலிப்பாகும்.அதிகாலையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் இந்த அரண்மனை மின்னுவதைப் பார்க்கும் போது இதன் அழகே அலாதியானது. இந்த அரண்மனை ஜெய்ப்பூர் வணிகப் பகுதியின், முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. இந்த மஹால் ராஜஸ்தான் அரசின் தொல் பொருள் துறையால் பராமரிக்கப் படுகிறது.