உள்ளூர் செய்திகள்

குத்துபாட்டு!

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என் சக மாணவன் ஒருவன் தேர்வு நாட்களில் என் பேப்பரை பார்த்து எப்பவும் காப்பி அடிப்பான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த நான், ஒரு தேர்வு தாளில் என் பதிலை மாற்றி எழுதினேன். 'சங்க காலத்தில் சங்க தமிழை எத்தனை பிரிவுகளாக வளர்த்தனர்' என்ற கேள்விக்கு, 'இயல், இசை, குத்துபாட்டு...' என்று பேப்பரில் எழுதினேன். அவனும் யோசிக்காமல், 'ஈ அடிச்சான் காப்பி'யாக அப்படியே எழுதினான்.தேர்வு முடிந்து, அதை திருத்திய பள்ளி ஆசிரியர் அவன் காப்பி அடித்ததை புரிந்து கொண்டு அவனை அழைத்து, 'ஏன்டா, காப்பியடிக்க கூட அர்த்தம் வேண்டாமாடா? உன்னை எல்லாம் திருத்தவே முடியாது' என அவனை ஒரு பிடி பிடித்தார். இதை எங்களுக்கும் படித்து காட்ட, பள்ளியில் சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று. அத்துடன், எனது பள்ளி புத்தகத்தில், தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல், என்று இருக்கும். இதை என் பாணியில், காலாண்டு ஒரு பாவச் செயல்; அரையாண்டு ஒரு பெருங்குற்றம்; முழு ஆண்டு ஒரு மனித தன்மையற்ற செயல்; என மாற்றி எழுதியிருந்தேன்.ஒருசமயம் என் புத்தகம் ஆசிரியர் கைக்கு கிடைக்க, என்னை பவ்யமாக அழைத்த ஆசிரியர், 'உன்னை பள்ளியில் சேர்த்தது பாவச் செயல்; பெற்றோர் உன்னை பெத்தது பெருங்குற்றம்; உன்னை அடிக்காமல் விட்டால் மனித தன்மையற்ற செயல், என்று கூறி, காதை திருகி, முதுகில் அடி வைத்தார். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.-டி.அருள்பிரகாஷ், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !