உள்ளூர் செய்திகள்

பாவம் பார்த்து ஏமாந்தேன்!

கடந்த, 45 வருடங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம் (மாதம் ரூ.200) திருமணம் ஆகவில்லை; ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மாணவர்கள் மதியம் உணவு இடைவேளையில் சாப்பிடச் சென்று விடுவர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் எங்கும் செல்லாமல் வகுப்பிலேயே இருப்பான். நான் சாப்பிட்டு வந்து, 'ஏம்பா நீ சாப்பிடப் போகலியா?' என்றேன்.'நான் சாப்பிட்டு விட்டேன்' என்பான்.ஒருநாள் 'அவன் சாப்பிடச் செல்வதில்லை; சாப்பாடும் கொண்டு வருவதில்லை' என்றான் ஒரு மாணவன்.இது எனக்கு மனதிற்கு கஷ்டத்தையும், அவன் வறுமையையும் உணர்த்தியது. அடுத்த நாள் சாப்பிடச் செல்லும் போது, அவனை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தேன்.ஓட்டல் முதலாளியிடம், 'இந்த மாணவனுக்கு தினமும் மதிய உணவு கொடுத்து விட்டு, என் கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள்' என்றேன்.அவரும், 'சரி!' என்று சொல்லிவிட்டார்.அன்று முதல் நான் சாப்பிட்டு வந்தவுடன், அந்த மாணவன் போய் சாப்பிட்டு வந்து விடுவான்.மாதாந்திர கணக்கு வைத்திருந்ததால் எனக்கு மட்டும் மாதம் ரூ.60 வரும். அந்த மாதம் ரூ.180 கணக்கு வந்தது. எனக்கு ஒரே அதிர்ச்சி. என் சம்பளத்தில் மாதம் ரூ.75 வீட்டிற்கும் அனுப்புவேன்.கடைக்காரரிடம், 'இவ்வளவு பில் எப்படி வந்தது?' என்றேன்.'அன்று ஒரு மாணவனுக்கு மதியச் சாப்பாடு கொடுக்கச் சொன்னீர்கள் அல்லவா? அந்த மாணவன் இங்கு உள்ள ஸ்பெஷல் அயிட்டங்களை (மீன், கோழி வருவல்) ஒன்று விடாமல் வாங்கி சாப்பிட்டு வந்தான். அதனால் பில் தொகை கூடியது' என்றார்.என்ன செய்வதென்றே தெரியாமல் கேட்ட பணத்தை கொடுத்து வந்தேன். அத்துடன், 'இனி அவன் வந்தால் சாப்பாடு கொடுக்காதீர்' என்றும் கூறிவிட்டேன்.பாவம் பார்த்து ஏமாந்த கதையை யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டேன். - எஸ். மாரியப்பன், தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !